புடம்போடப்பட்ட புலியொன்று மீளாத்துயில் கொள்கின்றது - தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானியா



வீர மறவன் சேரன் (பசுபதி தர்மராசா) 05.12.1975 – 21.01.2019
தமிழீழ விடுதலைப்புலிகளின் பாசறையில் புடம்போடப்பட்ட புலியொன்று மீளாத்துயில் கொள்கின்றது.

தமிழீழ மண்ணையும் மக்களையும் நேசித்த விடுதலைப் பறவையொன்று இன்று அக்கினியுடன் சங்கமமாகின்றது.

எமது இனத்தின் சுதந்திரத்திற்காகவும், கௌரவத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் மிக நீண்ட காலமாக செயற்பட்ட மூத்த போராளி இன்று எம்மைவிட்டு பிரிந்துவிட்டார்.

தமிழீழ விடுதலையைத் தனது புனித இலட்சியமாகக் கொண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து பணியாற்றிய திரு சேரன் அவர்கள், தமிழ் மக்களின் தேசிய விடுதலை பற்றி தெளிவான கருத்துக்கள் கொண்டிருந்தார்;.  எமது எதிர்கால சந்ததி தமிழீழ மண்ணில் சுதந்திரமாக வாழவேண்டும் என்ற எண்ணக்கருவோடு வாழ்ந்திருந்தார்.

சமர்க்களமானாலும் சரி சாதாரண பணிகளானாலும் சரி இவரது சளைக்காத போக்கும் சாமர்த்தியமும் இவரை ஒரு தன்னம்பிக்கைப் போராளியாக உருவாக்கின.

விவேகத்துடனும், வேகத்துடனும் செயற்திறண்மிக்க போராளியாக மிளிர்ந்த திரு சேரனின் ஆற்றல்கள் இனம் காணப்பட்டு விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைக்குள் உள்வாங்கப்பட்டிருந்தார்.
போராளிகளின் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் இவரது பதில்கள் புதிய உத்வேகத்தைக் கொடுத்தன. தமிழீழ விடுதலைக்கும், தமிழ் மக்களுக்கும் எதிராகச் செயற்படும் சக்திகளுக்குச் சவாலாக இருந்த விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை, இவரது வருகையினாலும்; மேலும் பலம் பெற்றது.

இவரால் பயிற்றுவிக்கப்பட்ட வேவுப் புலிவீரர்கள் நடாத்திய பல்வேறு ஊடுருவல் திட்டங்கள், வேவுத் தகவல்கள் விடுதலைப் புலிகளின் பல வெற்றிகளுக்கு வழிசமைத்துக் கொடுத்தன.

தனி ஒருவனாகவோ அல்லது குழுவாகவோ செயற்பட்டு தனது இலக்கை அடையும் வரை ஓயாது உழைத்த வண்ணமிருந்த ஒரு ஒப்பற்ற போராளி திரு சேரன் அவர்கள்.

தலைமையால் கொடுக்கப்பட்ட பொறுப்புக்களை மிகவும் நேர்த்தியாகவும் பாதுகாப்பாகவும் செய்து தேசியத் தலைவரின் பாராட்டுக்களையும், பரிசில்களையும் பெற்றவர்.

இறுதி யுத்தத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகளையும் முக்கிய ஆவணங்களையும் இடம் நகர்த்தும் திட்டங்களை முன்னின்று வழிநடத்தியவர்.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறு திரு சேரனைப் போன்ற பல திறண்மிக்க போராளிகளை இழந்து தவிக்கின்றது.
இவரது வீரம் செறிந்த போராட்ட வாழ்வையும், மண்ணின் விடுதலைக்காக புரிந்த தியாகங்களையும் நினைவு கூர்ந்து இவருக்கு எமது புகழ் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, எமது தாகமாம் தமிழீழத்தை மீட்கும் வரை தொடர்ந்து பயணிப்போம்ஃ

'தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்'

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானியா

No comments