முதலில் மாகாணசபை தானாம்:மைத்திரி?


ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவது உறுதியானதாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
இது தொடர்பில் சட்ட ரீதியாக எழுந்துள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.


ஜனாதிபதி தேர்தல் உரிய காலத்தில் இடம்பெறும் என்றாலும் சிலர் கூறுவது போன்று அதனை பலவந்தமாக நடாத்துவதற்கு எவருக்கும் முடியாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டின் எதிர்கால நலனுக்காக பல்வேறு தீர்மானங்களை மேற்கொள்ள கடந்த நான்கு வருட காலப்பகுதியில் ஜனாதிபதி என்ற வகையில் தான் நடவடிக்கை எடுத்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இன்று பாரிய சமூக சவாலாக மாறியிருக்கும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றங்களை தடுப்பதற்காக முன்னெடுக்கப்படும் விரிவான நிகழ்ச்சித் திட்டத்திற்கு தான் முக்கியத்துவமளித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

இதற்காக பொலிஸ் திணைக்களத்தை வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில் பலப்படுத்தி இருப்பதைப்போன்று, அதில் மேலும் சில முக்கிய மாற்றங்களை அடுத்த சில மாதங்களில் மேற்கொள்ளவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பண்டாரநாயக்க அவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை கட்டியெழுப்பியது ஒரு அரசியல் கட்சியாகவேயன்றி சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கையை சுதேச பாரம்பரியங்களை முன்நிறுத்திய ஒரு நாடாக கட்டியெழுப்பும் விரிந்ததோர் சக்தியாகவேயாகும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இன்று நாட்டின் சுதந்திரத்தையும் எமது பாரம்பரியங்களையும் பாதுகாத்து நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினாலேயே முடியும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, யார் எதனை கூறினாலும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஒருபோதும் பலவீனமடையவில்லை என்றும் அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் கட்சி ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியே என்பதை எவரும் மறந்துவிடலாகாது என்றும் குறிப்பிட்டார்.

பண்டாரநாயக்க அவர்களுக்கு பின்னர் தனது அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களின் ஊழல், மோசடி பற்றி கண்டறிவதற்காக ஆணைக்குழு ஒன்றை அமைத்த ஜனாதிபதி நானேயாவேன் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மத்திய வங்கி கொள்ளை பற்றி கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவைப் போன்று 2015 – 2018 காலப்பகுதியில் அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் ஊழல், மோசடிகளை கண்டறிவதற்காக தான் நியமித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

No comments