மீண்டும் இலங்கை விவகாரம்?


பலவந்தமாக அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா பணிக்குழுவின் மாநாட்டில், சிறிலங்கா குறித்தும் ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பலவந்தமாக அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா பணிக்குழுவின் 117 ஆவது மெர்வு பொஸ்னியா -ஹெர்சகோவினாவில், நாளை ஆரம்பமாகி, வரும் 15ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது.
இந்த அமர்வில் 37 நாடுகளின், 760 காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளன. இந்த 37 நாடுகளில் சிறிலங்காவும் உள்ளடங்கலாம் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.
ஐந்து சுதந்திர மனித உரிமை நிபுணர்களைக் கொண்ட குழு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பல்வேறு நாடுகளின் அரச அதிகாரிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் ஏனையவர்களைச் சந்தித்து, தனிப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக, எந்தச் சூழலில் இது நடந்தது என்பது பற்றிய தகவல்களை பரிமாறிக் கொள்ளவுள்ளனர்.
அத்துடன், சரஜீவோவில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், ஐ.நா பணிக்குழுவின் எதிர்காலச் செயற்பாடுகள்,  பயணத் திட்டங்கள் உள்ளிட்ட ஏனைய விவகாரங்கள் குறித்துமு் கலந்துரையாடப்படவுள்ளது.
இந்தக் கூட்டத்தின் முடிவில் வரும் 15ஆம் நாள் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1 மணியளவில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றையும், ஐ.நா பணிக்குழு நடத்தவுள்ளது.

No comments