Header Shelvazug

http://shelvazug.com/

பொறுமைக்கும் எல்லையுண்டு - பூச்சாண்டி காட்டும் மனோவின் கூட்டணி

‘’ ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்களே , பிரதமரின் காலைவாரிவிட்டு – கழுத்தறுப்புசெய்து கட்சிதாவியபோதும்,  ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக நாம் கைகொடுத்தோம். இதை எவரும் பலவீனமாக கருதிவிடக்கூடாது. பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு. அதை இந்த அரசு பரிசோதிக்குமானால் – தெற்கு அரசியலையே புரட்டிபோடுமளவுக்கு  எமது பதிலடி படுபயங்கரமாக இருக்கும்.’’


இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் எம்.பியுமான வேலுகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திகன – அம்பாங்கோட்ட குன்றுக்குமரன் ஆலயத்தில் அறநெறி பாடசாலைக்கான கட்டிட திறப்பு விழாவில்  பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு,

‘’  இலங்கை சுதந்திர தேசம் என்றும்,  காலணித்துவ ஆட்சிப்பிடிக்குள் இருந்து மக்கள் விடுதலை பெற்றுவிட்டனர் என்றும் ஆட்சியாளர்கள் மார்தட்டிக்கொள்ளுகின்றனர். சுதந்திர தினத்தன்று திருப்பும் திசையெங்கிலும் இந்தக் கோஷம் ஓங்கி ஒலித்தது.

உண்மையாகவே இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களுக்கு  சுதந்திரம் கிடைத்துவிட்டதா? இல்லை என்பதே எவராலும் நிராகரிக்கமுடியாத மிகச்சரியான பதிலாகும்.தோட்டப்பகுதிகளில் கவ்வாத்து வெட்டப்படுவதுபோல் வரலாறுகளிலிருந்து வெட்டி நிராகரிக்கப்பட்ட – வஞ்சிக்கப்பட்ட  எமது இந்திய வம்சாவளி மக்கள் இன்றும் அடக்கி ஆளப்படுகின்றனர்.

ஒரு சமூகத்தையே 22 கம்பனிகளிடம் ஒப்படைத்துவிட்டு, அரசாங்கமோ கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றது? கம்பனிகளும்  தனி இராஜ்ஜியமொன்றை நிர்வகிப்பதுபோல் தாம் நினைத்த தாளத்திற்கு ஆட்டம்போடுகின்றன?

நிலவுரிமை இன்னும் அரசாங்கத்திடம்தான் இருக்கின்றன. இருந்தும் என்ன பயன்?  மக்கள் பிரதிநிதியொருவர், பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தால்கூட கம்பனிகளின் சார்பில் எவரும் வருவதில்லை. உரிய வகையில் கணக்குகள் காட்டப்படுவதில்லை.

எனவே, இலங்கைக்கு கிடைத்துவிட்டதாக கூறப்படும் சுதந்திரத்தை அனுபவிக்கமுடியாத மற்றும் உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவே எமது மக்கள் வாழ்கின்றனர்.

2015 ஜனவரி 08 ஆம் திகதிக்கு பின்னராவது விடிவு கிட்டும் என நினைத்துதான் நாமும் மாற்றத்துக்காக கடுமையாக உழைத்தோம். ஆனால், இன்று என்ன நடக்கின்றது? நடப்பவற்றை பார்க்கையில் மனம் சினம்கொண்டெழுகின்றது.

பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கான சம்பள விவகாரத்தில் அரசாங்கம் இழுத்தடிப்பு செய்கின்றது.கூட்டு ஒப்பந்தம் பிரதமர் முன்னிலையிலேயே கைச்சாத்திடப்பட்டது. அமைச்சர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.

எனவே, இதுவிடயத்தில் தமக்கு எவ்வித தொடர்பும் இல்லை என பிரதமரோ, அரசாங்கமோ நழுவிவிடமுடியாது. குறைந்தபட்சம் எமது மக்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவாக 140 ரூபாவை எவ்வித நிபந்தனையும் இல்லாமல் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். அதாவது, ஒருநாள் வேலைக்கு சென்றால் இந்த 140 ரூபா உறுதி என்ற உத்தரவாதம் வழங்கப்படவேண்டும்.

இத்தொகையை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க தவறுமானால்,  பெருந்தோட்டக் கம்பனிகளின் தாளத்திற்கேற்ப ஆடுமானால், எமது பதிலடி படுபயங்கரமாக  அமையும். அது தெற்கு அரசியலில் பல தீடீர் திருப்பங்களை ஏற்படுத்தக்கூடும்.’’ என்றார்.

No comments