கடை அடைப்பிற்கு சந்திரகுமாரும் ஆதரவு!


எதிர்வரும் 25 ஆம் திகதி கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்படவுள்ள போராட்டத்திற்கு சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு தங்களின் முழுமையான ஆதரவினை வழங்கும் என தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அவ்வமைப்பின் அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கடந்த இரண்டு வருடங்களாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களுக்கு நியாயமான தீர்வினை கோரி வீதியில் இறங்கி இரவு பகலாக சாத்வீக ரீதியில் போராடி வருகின்றனர். ஆனால் அவர்களின் போராட்டத்திற்கு இந்த இரண்டு வருடங்களில் எவ்வித தீர்வும் எட்டவில்லை. பொறுப்புச் சொல்ல வேண்டிய அரசு இந்த விடயத்தில் பொறுப்பற்று காணப்படுகிறது.
சர்வதேச சமூகமும் தனது நலன்களில் நின்று சிந்திக்கின்றதே தவிர நியாயத்தின் பக்கம் நின்று இந்த உறவுகளுக்கு நீதியினை வழங்க முன் வரவில்லை என்பது கவலைக்குரியது. இருப்பினும் சர்வதேச சமூகத்தை நம்புவதனை தவிர எம் மக்களுக்கு தற்போது வேறு மார்க்கமில்லை. எனவே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு காலம் தாமதிக்காது நீதியாக தீர்வினை வழங்க சர்வதேச சமூக உதவ முன்வரவேண்டும்.
மேலும் ஐ.நா இனியும் இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்காது செயற்பாட்டு ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதனை நாம் வலியுறுத்துவதோடு, எதிர்வரும் 25 ஆம் திகதி இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு அனைத்து தரப்பினர்களும் தங்களது முழுமையான ஆதரவினை வழங்கி வலுப்படுத்துமாறும் கோரி நிற்பதோடு, எமது அமைப்பு முழுமையான ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் வழங்கி நிற்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம் என அச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments