பணத்தை பெற்று தமிழ் மக்களை விற்கின்றது கூட்டமைப்பு!


எமது பிரதேச அபிவிருத்திக்குரிய பணத்தை எம்மூடாக வழங்குங்கள். நாங்கள் எங்கள் மக்களைப் பணம் கொடுத்து வாங்கி விடுகின்றோம்” என்று கூட்டமைப்பினர் கூறுவது போல தெரிகின்றதென வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக்கட்சி இன்று வாலிப முன்னணி கூட்டமொன்றை நடத்திய நிலையில் போட்டிக்கு முன்னாள் முதலமைச்சரது தமிழ் மக்கள் கூட்டணியும் தனது இளைஞரணி மாநாட்டை இன்று யாழில் நடத்தியிருந்தார்.

அங்கு உரையாற்றிய அவர் நாங்கள் இளைய சமுதாயத்தின் பொறுப்பாளர்களை முதலில் அழைத்தமைக்குக் காரணம் உண்டு. மகளிர், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் என்போர் எமது மக்களிடையே சற்று நலிவடைந்த நிலையில் உள்ளார்கள் என்பதை எமது தற்போதைய அரசியல் யாப்பு கூட ஏற்றுக்கொண்டுள்ளது. அதன் உறுப்புரை 12ல் சட்டத்தின் முன் யாவரும் சமமே என்றும் சட்டத்தின் பாதுகாப்பு சமமாக யாவருக்கும் கிடைக்கப் பெற வேண்டும் என்றும்கூறி விட்டு எந்த ஒரு குடிமகனும் இன, மத, மொழி, சாதி, பால், அரசியல்க் கொள்கை, பிறந்த இடம் போன்ற காரணங்களால் பாகுபடுத்தப்படக்கூடாது என்றும் கூறுகிறது. ஆனால் அவ்வுறுப்புரை 12ன் நான்காவது உப~ரத்தில் மகளிர், குழந்தைகள், மாற்று வலுவுற்றோர் சம்பந்தமாக அவர்களை முன்னேற்ற மேலதிக விசேட சட்டங்களை உருவாக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது எல்லோரும் சமமே என்று விட்டு சிலரை அடையாளம் காட்டி அவர்கள் சற்று தளர்வடைந்த நிலையில் உள்ளார்கள் என்று யாப்பு எடுத்துக்காட்டுகின்றது. 
அது போலத்தான் எமது இளைஞர் யுவதிகள். இதுவரையும் இவர்கள் எமது அரசியல் வெள்ளோட்டத்தில் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளமை எம்மால் உணரப்பட்டுள்ளது. ஆயுதம் ஏந்தியவர்கள் இளைஞர் யுவதிகள். சுமார் முப்பது வருடங்கள் தமது இடங்களைத் தாமே பரிபாலித்த இளைஞர் யுவதிகளை ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டவுடன் அவர்களையும் மௌனிக்க விட்டு விட்டோமோ என்று எண்ண வேண்டியுள்ளது. 

நான் அப்போது இருந்த கட்சியின் தலைவர்களிடம் இளைஞர்களை உள்ளடக்கி நாம் முன்னேற வேண்டும் என்று கூறிய போது அதற்கு இசைந்தார்கள். எனினும் அதற்கான இசைவான நடவடிக்கைகளில் இறங்காது காலத்தைக் கடத்தினார்கள். அதற்குக் காரணம் எந்த இளைஞர்கள் யுவதிகள் போர்க் கருவிகளைக் கையாண்டனரோ அவர்கள் மீண்டும் எப்போது வன் செயல்களில் ஈடுபடுவரோ என்ற பயம் எமது தலைவர்களிடையே இருந்ததை நான் அவதானித்திருந்தேன். இதனால் முன்னர் கூறிய மகளிர், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள்போன்றோருடன் எமது இளைஞர் யுவதிகளையும் கண்டுங் காணாதவாறே அவர்களுடன் உறவு வைத்து வந்துள்ளார்கள்.

 போர்ப் பயிற்சி பெற்ற யாவரும் வன்முறையாளர்களே என்று எண்ணுவது தவறு. நான் கூட றோயல் கல்லூரியில் கல்வி பயின்ற போது 1950களில் தியத்தலாவைக்கு  மாணவ போர்ப் பயிற்சியாளனாகக் கொண்டு செல்லப்பட்டு அங்கு ஓரளவு போர்ப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளேன். ரைஃபிள் பாவனை, ரெக்கி பற்றோல் அல்லது எதிரிகளின் படை  வலிமையை வேவுபார்த்தல் போன்ற பலவற்றையும் எமக்குக் கற்றுத் தந்தனர். இதை அரசாங்கமே செய்தது. அதனால் நாங்கள் யாவரும் வன்முறையாளர்களாக மாறினோம் என்று கூற முடியாது. ஆனால் பிழைகளைத்,தவறுகளைச் சுட்டிக் காட்ட நாங்கள் பின்நிற்கவில்லை. இன்றும் அப்படித்தான். இதை உணராதவர்கள் தான் அரசியல் நீரோட்டத்தில்; இளைஞர் யுவதிகள் முக்கியமாகப் படித்த இளைஞர் யுவதிகள் ஈடுபடுவதை இதுகாறும் மறைமுகமாக எதிர்த்து வந்துள்ளார்கள். தடுத்தும் வந்துள்ளார்கள். சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட மக்கள் அலகுகளை உயர்த்திவிட  எத்தனிக்கும் எமது கட்சியானது பலவித தாக்கங்களுக்கு உள்ளாகியிருக்கும் மகளிர், குழந்தைகள், இளைஞர் சமுதாயம், மாற்றுத்திறனாளிகள், போரினால் பாதிக்கப்பட்டோர் சம்பந்தமாக போதிய நடவடிக்கைகளை எடுத்து அவர்கள் நிலையை உயர்த்திவிட எண்ணியுள்ளோம். அதனால்த்தான் இளைஞர் அணிப் பொறுப்பாளர்களை உருவாக்கி அவர்களின் பணிகள் பற்றி கருத்துக்களைப் பரிமாற இந்தக் கூட்டத்தைக் கூட்டியுள்ளோம். 

இன்று எமது பாராளுமன்றத்திலோ மாகாணசபைகளிலோ பங்குபற்றும் உறுப்பினர்களின் சராசரி வயது 45 ஐத் தாண்டியேஉள்ளது என்று அறிகின்றோம். இந்தியாவில் அரசியல்வாதிகளின் சராசரி வயது 56 என ஒரு ஆய்வு கூறுகிறது. எமது சமுதாயத்தில் இளைஞர் யுவதிகள் அண்மைக் காலங்களில் போரினால் அழித்தொழிக்கப்பட்டாலும் இன்னமும் எம்முள்பெரும்பான்மையினர் மகளிரும் இளைஞர் யுவதிகளுமே. மகளிரினுள் தமது கணவன்மார்களை இழந்த இளம் விதவைகளின் தொகை வடக்கு கிழக்கில் 89000 என்று கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களுள் பலர் இளம் தாயார்களானாலும் அவர்கள் இளைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே. ஆகவே பாதிக்கப்பட்ட மக்கள் என்று நாம் கூறும் போது, மகளிர், இளைய சமுதாயம், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், போரில் பாதிக்கப்பட்டோர் போன்ற யாவரையும் சேர்த்துப் பார்க்கும் போது, அவர்களின் தொகை கணிசமானதாக இருப்பதை நோக்கலாம். எனினும் அவர்களின் கைகள் ஓங்குவதை இன்றைய அரசியல்வாதிகளில் பெரும்பான்மையோர் எதிர்க்கின்றார்கள். அதுமட்டுமல்ல.அரசியல் மீது தமக்கிருக்கும் பிடியைத் தளர்த்த அவர்கள் முன் வருகின்றார்கள் இல்லை. ஆகவே எமது இளைய சமுதாயம் தம்மைப் போதுமானதாகத் தயார்ப்படுத்தி வருங்கால அரசியலில் கூடிய பங்கை வகிக்க நாங்கள் பல திட்டங்களையும் வகுக்க வேண்டியுள்ளது. சமூகவியலாளர் ஆசிரியர் யோதிலிங்கம் அவர்கள் “சமூகவிஞ்ஞான ஆய்வு மையம்” என்ற பெயரில் இளைஞர் யுவதிகள் எல்லோருக்கும் இனாமாக அரசியல் அறிவைப் பரப்பும் ஒரு உன்னதப் பணியில் ஈடுபட்டுள்ளார். எங்கள் இளம் சந்ததியினர் அரசியல் அறிவு பெற அவரை நாடலாம். வார இறுதி நாட்களில் வகுப்புக்கள் பலாலி வீதியில் உள்ள தமிழ் மக்கள் பேரவை மண்டபத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த விடயத்தில் தமிழ் மக்கள் பேரவையும், தமிழ் மக்கள் கூட்டணியும் ஒத்த கருத்துடையவர்களாக இருக்கின்றோம். எமது இளைய சமுதாயம் தம்மைத் தயார்படுத்த முன்வர வேண்டும், அதற்கு நாம் எம்மால் ஆன சகல உதவிகளையும் அளிக்க வேண்டும் என்பதில் திடமாக உள்ளோம்.

இளைஞர் அணிகள் சில விடயங்களை மனத்தில் வைத்திருக்க வேண்டும். அதாவது இளைஞர்கள் யுவதிகள் சம்பந்தமாக ஒரு கருத்து பொது மக்களிடையே நிலவுகின்றது.அவர்கள் சமாதானத்தைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்கள் என்பதே அது. இதன் காரணத்தால் இளைஞர் யுவதிகளின் குரல் ஓங்கஎம்மவர்கள் இடமளிக்கின்றார்கள் இல்லை. கேள்வி கேட்பது என்பது ஜனநாயகத்தின் ஓர் அங்கம். ஆனால் கேள்வி கேட்கும் இளைஞர் யுவதிகளை ஒதுக்கி வைப்பது எமது ஒரு சமூக இலட்சணமாக மாறியுள்ளது. ஆனால் இன்றைய எமது தமிழ்ச் சமுதாயம் இவ்வாறான மக்கள் அபிப்பிராயங்களைக் கடந்து முன் செல்ல வேண்டும். அரசியலில் இளையோர் குரல் ஓங்கச் செய்ய வேண்டும். மேலும் இலஞ்சம், ஊழலை ஒழிக்க இளைய சமூகத்தினர் பாடுபட வேண்டும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம். 

எனவே உங்கள் வாழ்க்கையானது அரசியல் அறிவில் சிறந்து விளங்க வேண்டும். மக்களின் தேவைகளையும் மனக்கிலேசங்களையும் உணர்ந்து செயல்பட முன்வர வேண்டும். இலஞ்சம், ஊழலை எமது தமிழர்கள் சமுதாயத்தில் இருந்துஒழித்துக்கட்ட நீங்கள் முன்வர வேண்டும்.வன்முறை களைந்து ஜனநாயக ரீதியில் மக்களை ஒன்றிணைக்க நீங்கள் முன்வர வேண்டும். குடும்ப அரசியலுக்கு இடம் கொடுக்காமல் தகைமை அடிப்படையில் நாங்கள் முன்னேறவும் வழிவகுக்க முன்வரவேண்டும். இவையாவற்றையும் இளைஞர் விவகாரங்களுக்குப் பொறுப்பாக இருக்கும் பேராசிரியர் கார்த்திகேயனுடனும் இளைஞர் அணிப் பொறுப்பாளரான கிரு~;ணமீனன் ஆகியோருடன் சேர்ந்து கலந்துரையாடி உங்கள் வேலைகளை நீங்களே கொண்டு செல்ல நடவடிக்கை எடுங்கள். எல்லாவற்றிலும் நான் பங்கு பற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாதாந்தம் நீங்கள் செய்யும் காரியங்கள், செயற்பாடுகள் பற்றி அறிக்கையினை தவறாமல் எனக்கு அனுப்பி வையுங்கள்.இன்றைய இளைஞர் சமுதாயமானது வருங்கால மக்கள் சமுதாயங்களின் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் என்பதை உணர்ந்து செயற்படுங்கள்.

கடைசியாக நாம் நடைமுறையில் காணும் இன்றைய அரசியல் பற்றி ஓரிரு வார்த்தைகள் தேவைப்படுகின்றன. எமது நாட்டின் பிரதம மந்திரி சில நாட்களுக்கு முன்னர் இங்கு வந்திருந்தார். இன்றும் இங்கு இருக்கின்றார் போலத் தெரிகின்றது. அவரின் கருத்துக்களை நான் கொழும்பில் இருந்து கொண்டு அவதானித்தேன். அவரது பேச்சுக்களின் தாற்பரியம் என்ன? நாங்கள் உங்களுக்குப் பல்கோடிகளைக் கொட்டிக் கொடுக்க உள்ளோம். மருத்துவ மனைகளைக் கட்டுங்கள், பிரதேச சபைக் கட்டடங்களைக் கட்டுங்கள், உடைந்து போன உங்கள் தெருக்களை செப்பனிடுங்கள், பொருளாதார ஏற்றம் காணுங்கள்! ஆனால் எங்களின் இந்தக் கொடைக்காக நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றைத்தான்.அதாவது மன்னித்து மறந்து விடுங்கள்! பழையனவற்றை மறந்து விடுங்கள். உண்மையைக் கண்டறிய முனையாதீர்கள். அப்படிக் காண விழைந்தால் உங்களின் இளைஞர்கள் செய்த குற்றங்களும் அம்பலத்திற்கு வந்துவிடுவன. அது வேண்டாம்;;; மறந்து விடுவோம்; மன்னித்து விடுவோம் என்று கூறியுள்ளார்.

அதாவது உங்களுக்கு நாங்கள் வடகிழக்கு இணைப்பைத் தருகின்றோம். உங்கள் தாயகத்தில் சுயாட்சியைத் தருகின்றோம். சமஸ்டி ரீதியிலான ஒரு அரசை உங்களுக்கு வழங்குகின்றோம்.பதிலுக்கு நீங்கள் மறந்து விடுங்கள். மன்னித்து விடுங்கள் என்று அவர் கூறவில்லை.மாறாக உங்களுக்குப் பணம் தருகின்றோம்,உங்கள் உறுப்பினர்களுக்கு சலுகைகள்தருகின்றோம். உங்கள் பொருளாதார விருத்திக்கு அடிசமைக்கின்றோம்; நடந்து போனதை மறந்து விடுங்கள்; மன்னித்து விடுங்கள் என்று தான் கூறுகின்றார். 
இதன் அர்த்தம் என்ன? ஜெனிவாவில் கேள்வி கேட்கப் போகின்றார்கள். நாம் செய்வதாகக் கூறியவற்றை இதுகாறும் செய்யவில்லை. இப்போது உங்களுக்கு சலுகைகளைக் கொடுக்க எண்ணியுள்ளோம். கட்சி ரீதியாக அதைச் செய்ய எண்ணியுள்ளோம். ஏற்றுக்கொண்டு உங்கள் உரிமைகளைக் கேளாதீர்கள், உரித்துக்களை நிலைநாட்டப் பார்க்காதீர்கள். தமிழ்ப் பிரதேசங்களில் சிங்கள ஏகாதிபத்தியங்கள் தொடர்ந்து நிலைக்கச் செய்ய உங்களின் ஒத்துழைப்பைநல்குங்கள். ஜெனிவாவில் மீண்டும் கால அவகாசம் பெற்றுக் கொடுங்கள் என்று கூறிச் சென்றுள்ளார் எங்கள் பிரதம மந்திரி அவர்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மௌனமாகத் தலையசைத்ததைப் பார்த்தால் அதற்கு அவர்கள் தயாராகி விட்ட மாதிரித் தெரிகின்றது. “எமது பிரதேச அபிவிருத்திக்குரிய பணத்தை எம்மூடாக வழங்குங்கள். நாங்கள் எங்கள் மக்களைப் பணம் கொடுத்து வாங்கி விடுகின்றோம்” என்று அவர்கள் கூறுவது போலத் தெரிகிறது. துரையப்பா, குமார சூரியர், டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் இதைத்தானே கூறினார்கள். அரசாங்கத்திடம் இருந்து பணத்தைக் கறந்து, பதவிகளைப் பெற்று, பொருளாதார விருத்தியை உறுதி செய்து எமது நிலையைச் சீர்செய்வோம். உரிமைகளையும் உரித்துக்களையும் மறந்துவிடுவோம். இவ்வாறு அவர்கள் கூறிய போது நாங்கள் என்ன கூறினோம்?அவர்களைத் “தமிழினத் துரோகிகள்” என்றோம். அவர்களைக் கடையவர்களில் கடையவர்களாக அடையாளம் காட்டினோம்.சித்திரித்தோம்.இன்று என்ன நடந்துள்ளது? அவர்களுக்கு அரசாங்கம் உதவிகள் கொடுத்தால் அவர்கள் துரோகிகள். எங்களுக்கு அவ்வாறு உதவிகள் கிடைத்தால் அது எமது மேலாண்;மைத் திறன்!எங்கள் புத்திக் கூர்மையின் வெளிப்பாடு! தந்திரோபாயத் திறமை! இங்கு எமது மக்களின் வருங்காலம் பற்றிய சிந்தனைகள் அடிபட்டுப் போகின்றன.


ஆனால் எமது தலைவர்கள்அரசாங்கத்திற்குக்கூறுவது என்ன? நாங்கள் எங்கள் மக்களுக்கு உங்கள் பணத்தைக் கொடுத்து வாக்குகளைப் பெற்றுவிடுவோம். அதாவது எம் மக்களுக்கு இலஞ்சம் கொடுத்து அவர்களை வாங்கிவிடுவோம். அதற்கென்ன? நாங்கள் ஜெனிவாவில் கால அவகாசம் பெற்றுத் தருவோம். பௌத்தத்திற்கு வடகிழக்கில் முதலிடம் அளிப்போம். வடகிழக்கை இணைக்காது வைத்திருக்க எமது பூரண சம்மதம் தெரிவிப்போம், சம~;டி கேட்க மாட்டோம். உள்நாட்டு சுயாட்சியைக் கேட்க மாட்டோம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அவர்களைத் “துரோகிகள்” என்று பச்சை குத்தி கழுதைகள் மேலேற்றி வலம் வரச் செய்வோம் என்று தான் கூறாமல் கூறுகின்றார்கள். 
இந்த விதமான நடவடிக்கைகள் எங்களை எங்கே கொண்டு செல்லப் போகின்றன? அரசாங்கப் பணம் பெறுபவர்கள் தம்மை நன்றாகக் கவனித்துக்  கொள்வார்கள். தமது உற்றார் உறவினர்களை நன்றாகக் கவனித்துக் கொள்வார். பத்து வருடங்களில் வடகிழக்கு சிங்கள, பௌத்தப் பிரதேசமாக மாறும். மன்னிப்பின் மகத்துவம் இதுதான். 

நரி வந்து புள்ளிமானிடம் கூறுகின்றது. உன் மகனைக் கொன்று உண்டவன் நான் தான். மன்னித்துவிடு. இனி நாங்கள் நண்பர்களாக இருப்போம். உன் மற்றைய குட்டிகளையும் என்னிடம் அனுப்பு. நான் அவற்றிற்குப் பொறுப்பு. அவற்றையும் நான் கொன்று சாப்பிட்டால் மீண்டும் உன்னிடம் மன்னிப்புக் கேட்பேன். வருத்தப்படாதே. உன்னையும் உன் குட்டிகளையும் என் பிரதேசத்தினுள் வேண்டுவது போல என் கட்டுப்பாட்டில் உலாவிவர நான் உனக்குபூரண உரித்துத் தருகின்றேன் என்று கூறுகிறது.

உண்மையைக் கண்டறியவிடாமல் பிரதம மந்திரி அவர்கள் தடுப்பது எமது உரிமைகளை மறுப்பதற்காக! எமக்குள்ள உரித்துக்களை மறைப்பதற்காக! உலக நாடுகளின் பார்வை உண்மையைக் கண்டறிந்து விடும் என்ற பயத்தினால்! இதற்குத் துணைபோகத் தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் துணிந்து விட்டார்கள். இதுகாறும் எம் மக்கள் பட்ட பாட்டைமறந்து, ஆயுதமேந்த வேண்டிய காரணத்தை மறந்து, உயிர்த் தியாகங்கள் செய்ததை மறந்து, பிச்சைப் பாத்திரம் ஏந்தி பிச்சை எடுத்து எம்மக்களுக்குப் பிச்சைபோட முன்வந்துள்ளார்கள்.

இதனை மக்களுக்குத் தெரியப்படுத்த இளைஞர் யுவதிகளான நீங்கள் முன்வர வேண்டும். உண்மையைக் கண்டறிவதில் நாம் திடமாக நிற்க வேண்டும். எம்மவர் குற்றங்களும் வெளிவந்துவிடுவன என்று மிரட்டுகிறார் பிரதம மந்திரி. குற்றம் செய்யாத பலரை சிறைகளில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தீர்கள்.எம்மைக் கொன்று குவித்தவர்களை, சித்திரவதை செய்தவர்களை இதுவரை அடையாளப்படுத்தாது அவர்களுக்கு மன்னிப்பை வேண்டி நிற்கின்றீர்கள். அவ்வாறு செய்தவர்கள் யார் என்பதை முறையாக, சர்வதேச விசாரணை மூலமாக முதலில் கண்டறியுங்கள். அதன் பின் மன்னிப்புப் பற்றிக் கதைக்கலாம் என்று பிரதமரிடம் கூற எங்களுள் எவரும் இல்லை. ஆகவே நாங்கள் அரசிடம் கூறுகின்றோம் சர்வதேச உதவியுடன் போர்க் குற்ற விசாரணை நடத்துங்கள். நடந்தவை இனப்படுகொலையா என்பதை முதலில் அறிந்து கொள்வோம். அதன் பின் மன்னிப்புப் பற்றி ஆராய்வோம் என்று.இவ்வாறு எமது மக்களை உண்மை அறியச் செய்து அவர்களை நீங்கள் ஒன்றுபடுத்த முன்வர வேண்டும். அதனை இளைஞர் யுவதிகளாகிய நீங்களே முன்னின்று செய்ய வேண்டுமென தெரிவித்தார். 

No comments