உடுவிலில் வீடு புகுந்து வாள்வெட்டுத் தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக் கும்பலைக் கட்டுப்படுத்தி விட்டோம் எனப் பொலிசார் மார்தட்டி இரண்டு நாட்களுக்குள் உடுவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளது.

யாழ்.உடுவில் ஆலடி பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்றிரவு 10 மணியளவில் உட்புகுந்த வாள்வெட்டுக் கும்பல் வீட்டினுள் பெற்றோல் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டு, வீட்டில் இருந்த உடமைகளை அடித்து உடைத்து சேதமாக்கி விட்டு, வீட்டு வளவில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரண்டு மோட்டார் சைக்கிளையும் தீக்கிரையாக்கி விட்டு தப்பி சென்றுள்ளது.

இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேரே தாக்குதலை மேற்கொண்டதாகவும், தாக்குதலாளிகள் தப்பிச் செல்லும்போது தாம் கொண்டு வந்திருந்த வாள் ஒன்றை தவறவிட்டு தப்பிச் சென்றதாகவும் வீட்டில் இருந்தோர் தெரிவித்துள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

கடந்த சனிக்கிழமை யாழில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷாந்த் பெர்னாண்டோ யாழில் இயங்கிய வாள்வெட்டுக்குழுக்களை முழுமையாகத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக பெருமிதத்துடன் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments