முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு செயற்குழு அமைக்கிறது முன்னணி



கடந்த வருடமும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னெடுத்திருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடனும் அவர்களோடு பொது அமைப்புக்கள் என்ற அடிப்படையில் அமைந்த பல்வேறுபட்ட சமூக அமைப்புகளான, கிராமிய உழைப்பாளர் சங்கம், சமூகநீதிக்கான அமைப்புகள், கிராம அபிவிருத்தி சங்கங்கள் , பல்கலைக்கழக ஊழியர் சங்கம், ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட அமைப்புக்களையும் சிவில் அமைப்புகள், ஊடக அமைப்புக்கள், வர்த்தக அமைப்புகளையும் சேர்த்து ஒரு நிரந்தரமான நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்குழுவை உருவாக்கி அந்த குழு ஊடாக  பத்தாம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு வருவதற்கான ஏற்பாடுகளை நாங்கள் முன்னெடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்திருக்கின்றது.

சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாத்துக்கொண்டு உள்ளூரில் முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களுக்கு நீதிகோருகின்றோம் என நடிக்கின்ற செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பதற்காகவே மக்கள் மயப்படுத்தப்பட்ட குறித்த செயற்குழு ஒன்றினை உருவாக்கவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் இதன்போது குறிப்பிட்டார்.

நாட்டுப் பற்றாளர் சத்தியமூர்த்தி மற்றும் ஈகைப் போராளி முருகதாசன் ஆகியேரின் பத்தாம் ஆண்டு நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழிலுள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று (12) மாலை நடைபெற்றது. இதன் போது உரையாற்றுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது.

சத்தியமூர்த்தி உள்ளிட்ட முள்ளிவாய்க்கால் இறுதி நாள் வரைக்கும் படுகொலை செய்யப்பட்டவர்கள் முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிந்த பிற்பாடு இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் ராணுவத்தால் மிக கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டதன் பின்னர் அழிக்கப்பட்டவர்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டும் அடித்தும் கொல்லப்பட்ட பொது மக்களுக்கும் நீதி வேண்டும்.

வவுனியா செட்டிகுளம் முகாமில் தங்கியிருந்த பொழுது அங்கிருந்து விசாரணை என்ற பெயரில் கைது கைதுசெய்யப்பட்டார்கள் கடத்திக் கொண்டு செல்லப்பட்டார்கள். இராணுவத்தினரும் புளொட் போன்ற துணை இராணுவ குழுவினரும் அவ்வாறான கடத்தல்கள் கைதுகளில் ஈடுபட்டிருந்தார்கள். அவ்வாறு அவர்களால் கொண்டு செல்லப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது இன்றுவரை தெரியாமல் இருக்கிறது.

முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு பிற்பாடு செட்டிகுளம் முகாமுக்கு வந்த பின்னர் அந்த முகாமில் எத்தனை பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பது அந்த முகாமில் தங்கியிருந்த ஒவ்வொருவருக்கும் தெரியும்.

 ஆகவே எங்களைப் பொறுத்தவரையில் இந்தப் படுகொலைகளுக்கு நீதி எடுக்கின்ற பயணத்தை தொடர்ந்து நாங்கள் முன்னெடுத்து கொண்டு செல்ல வேண்டும். இந்தப் பயணத்தில் நாங்கள் ஒரு நாள் வெற்றி பெற வேண்டும். வெற்றி பெற்றால் தான் இந்த தேசத்திலே இந்தத் தீவிலே மீண்டும் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் நடைபெறுவதை நாங்கள் தடுத்து நிறுத்த கூடியதாக இருக்கும். இந்த படுகொலைகளுக்குரிய   தண்டனைகளிலிருந்து அவர்கள் தப்பித்துக் கொண்டால் அவர்கள் தப்பித்துக்கொள்ளும்  அந்த இறுதி நாளில் தமிழர்களுக்கு எதிரான அடுத்த படுகொலையை அவர்கள் ஆரம்பிப்பார்கள்.

 பௌத்த பேரினவாதிகள் அவர்களோடு சேர்ந்து கடந்த காலத்தில் படுகொலை செய்தவர்களும் மீண்டும் அந்த படுகொலைகளை அரங்கேற்றுவார்கள் என்பது எங்களுக்கு வரலாறு காட்டி நிற்கின்றன பாடமாக இருக்கின்றது. ஆகவே இந்த முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு தமிழ் மக்கள் மீதான இந்த இனப்படுகொலைக்கு நாங்கள் நீதி பெற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

நாங்கள் கடந்த 09ஆண்டுகளாக  முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூறுகின்றோம். நாங்கள் மட்டும் இல்லை பல்வேறுபட்ட சமூக அமைப்புகள் இவ்வாறான நினைவுகூரல் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் இதில் வேதனைக்குரிய விடயம் என்னவென்றால் இந்த படுகொலைக்கு தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற நீதி என்பது ஒரு சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே.

ஐநா மனித உரிமைகள் பேரவையில் அந்த மக்கள் எதிர்பார்க்கின்ற நீதி நியாயம் தமிழர்களுக்கு கிடைக்கவில்லை. இந்த இனப்படுகொலையாளிகள் தண்டிக்கப் விசாரிக்கப்படவும் இல்லை. எனவே இந்த மக்கள் எதிர்பார்ப்பது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த படுகொலைகளுக்கான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் அல்லது விசேட குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட்டு அவர்களுக்கான விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக கடந்த 9 ஆண்டுகளில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை விவகாரம் சென்றதிலிருந்து இலங்கை இராணுவத்துக்கு எதிராகவோ இலங்கை அரசுக்கு எதிராகவோ ஒரு சர்வதேச விசாரணை ஒன்று வராமல் தடுப்பதிலேயே பல தரப்புக்கள் முனைப்பாக நின்றன.  அவர்களுககு பல தரப்புக்கள் முண்டுகொடுத்து கொண்டு நிற்கின்றன. அந்தத் தரப்புகள்  தாயகத்தில் இந்த முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுகளை நினைவுகூர்வது ஊடாக மக்களை ஏமாற்றுகின்ற காரியங்களை தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தாயகத்தில் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள். படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக சர்வதேச விசாரணை வேண்டுமென்று தாங்கள் வலியுறுத்துவதாக மக்கள் மட்டத்தில் கூறுகிறார்கள். ஆனால் ஜெனீவாவிற்குச் சென்று ஜெனிவாவில் அங்கம் வகிக்கின்ற 47 நாடுகளுக்கும் தனித்தனியாக கோரிக்கை விடுக்கின்றார்கள்.

இலங்கை அரசாங்கத்தின் மீது தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாகவும் அரசாங்கம் உள்ளக விசாரணையை நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் நாங்கள் இந்த நாட்டிலே சிங்கள மக்களோடு சேர்ந்து வாழ வேண்டும் சர்வதேச விசாரணைக்கு தற்போதுள்ள அரசாங்கம் ஒத்துழைத்தால் சிங்கள மக்களுக்கு அரசாங்கத்தின் மீது கோபம் வந்துவிடும் அதனால் அவர்களின் அரசுக்கு எதிராக கிளர்ந்து விடுவார்கள். இந்த அரசை கைவிட்டுவிடுவார்கள் அதனால் ராஜபக்சே மீண்டும் வந்து விடுவார். ஆகவே இந்த அரசு தொடர்ந்தும் இருப்பதற்கு நீங்கள் வாய்ப்பு அளிக்க வேண்டும் எனக் கூறுகிறார்கள்.

இவ்வாறானவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் இன்று நினைவேந்தல் செய்வதற்கு தகுதி உடையவர்களா என்பதை ஒவ்வொருவரும் சிந்தித்து பார்க்கவேண்டும். எதிர்காலத்தில்  இந்த விசாரணைக்கு குறுக்கே நிற்பவர்களும் உள்ளக விசாரணைக்காக முண்டு கொடுப்பவர்களும் இந்த படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகளைச் செய்வதற்கும் முள்ளிவாய்க்கால் மண்ணிலே காலடி எடுத்து வைப்பதற்கு தகுதியற்றவர்கள்.

எம்மைப் பொறுத்தவரையில் யார் யாரெல்லாம் ஐநா பாதுகாப்புச் சபையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் விசாரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறார்ககளோ சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்களோ அந்த தரப்புக்கள் மட்டுமே நினைவேந்தலை நினைவுகூர்வதற்கு தகுதியுடையவர்கள். அவர்களால் மட்டும்தான் இந்த படுகொலைகளுக்கு நீதி வெற்றிகொள்ள முடியும்.

நாங்கள் செய்கின்ற நினைவேந்தல் என்பது எங்களை தியாகிகளாக காட்டிக்கொள்வதற்கு  வருடம்  தோறும் வேடம்மிடுவதாக இருக்கக்கூடாது. இந்த நினைவேந்தல் என்பது சத்தியமூர்த்தி போன்றவர்களை எறிகணை மூலம் படுகொலை செய்த ராஜபக்சே போன்றவர்களை கோத்தபாய போன்றவர்களை படுகொலையாளிகளாக சர்வதேச நீதிமன்றில் நிறுத்தப்பட வேண்டும். அதற்கு அவர்கள் செயல்பட வேண்டும்.

அவ்வாறான நிலை ஏற்படுவதற்கு தயாரானவர்கள் மட்டும் தான் நினைவேந்தல் செய்வதற்கு தகுதியுடையவர்கள் என்பதை இந்த இடத்தில் நான் சுட்டிக்காட்டுகிறேன். அந்தவகையில்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ் தேசத்தினுடைய அரசியல் விடுதலைக்காக கணிசமான பங்கு வந்திருக்கிறது. அவர்கள் கடந்த வருடமும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்னெடுத்திருக்கிறார்கள்.  அவர்களோடு பொது அமைப்புக்கள் என்ற அடிப்படையில் அமைந்த அமைப்புகளும் இணைந்து, பல்வேறுபட்ட சமூக அமைப்புகள் இருக்கின்றன கிராமிய உழைப்பாளர் சங்கம் சமூகநீதிக்கான அமைப்புகள் கிராம அபிவிருத்தி சங்கங்கள் , பல்கலைக்கழக ஊழியர் சங்கம், ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட அமைப்புக்களும் பல்வேறுபட்ட சிவில் அமைப்புகளுடனும் ஊடக அமைப்புகளுடனும் வர்த்தக அமைப்புகளையும் சேர்த்து ஒரு நிரந்தரமான நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்குழுவை உருவாக்கி அந்த குழு ஊடாக வரப்போகின்ற பத்தாம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு வருவதற்கான ஏற்பாடுகளை நாங்கள் முன்னெடுக்கவுள்ளோம்.

 இந்த அறிவித்தலை நான் அன்றைய தினம் வெளிடுவதற்கான காரணம் இந்த பத்து ஆண்டுகள் கடந்த போதும் எமது மக்களை தொடர்ந்து ஏமாற்றி சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாத்துக்கொண்டு உள்ளூரில் முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களுக்கு நீதிகோருகின்றோம் என நடிக்கின்ற செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பதற்காகவே - என்றார்.

No comments