ஈபிடிபி ஊழல் - கூட்டமைப்பு கள்ள மௌனம்ஈபிடிபியுடன் செய்துகொள்ளப்பட்ட டீலுடன் அவர்களின் ஆதரவு பெற்றே யாழ் மாநகரசபையில் ஆட்சியைக் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியதாக ஊடகங்கள் குற்றச்சாட்டியிருந்த நிலையில் அதனை மீண்டும் மெய்ப்பிக்கும் வகையில் இன்று ஈபிடிபியின் கடந்த ஆட்சியின் போது கட்டப்பட்ட கட்டிட ஊழல்கள் குறித்த  முழுநேர விவாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கள்ள மௌனம் சாதித்துள்ளது.

எனினும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் கிருபாகரன் பல்வேறு குற்றச்சாட்டுக்களை ஆதாரங்களுடன் தொடர்ச்சியாக முன்வைத்திருந்த நிலையில் வேறு வழியின்றி முன்னணி உறுப்பினர்களின் கோரிக்கைக்கு இணங்கி முதல்வர் ஆர்னோல்ட் ஈபிடிபியினால் முறைகேடாகக் கைப்பற்றப்பட்டு தொலைக்காட்சி நிலையம் நடத்தப்பட்டுவரும் யாழ் மாநகரசபைக்குச் சொந்தமான கட்டடத்தை யாழ் மாநகரசபை மீளக் கைப்பற்றுவது என தீர்மானித்துள்ளது.

யாழ் மாநகரசபையினை ஈபிபிடி கைப்பற்றி ஆட்சி செய்த கடந்த ஆட்சியின் போது யாழ் மாநகர முதல்வராக இருந்த யோகேஸ்வரி பற்குணராசாவினால் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதிப்பகுதியில் முறைகேடான ஒப்பந்தங்களின் அடிப்படையில் கட்டப்பட்ட கட்டடத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் தளங்களை ஈபிடிபி அடாத்தாகக் கைப்பற்றி டிடி ரிவி தொலைக்காட்சி நிலையம் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றது.

யாழ் மாநகரசபையின் சட்டவிதிகளை மீறி மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்த நடைமுறைகளைத் தூக்கிப்பிடித்து அதிலிருந்து வெளியேறவும் கோடிக்கணக்கான வாடகைப் பணத்தினைச் செலுத்தவும் மறுத்துவந்த ஈபிடிபி மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுவந்தது.

இந்நிலையில் தாங்கள் குற்றமற்றவர்கள் என்றும் அது தொடர்பில் முழுநாள் விவாதம் நடத்தப்படவேண்டும் என்றும் தொடர்ச்சியான கோரிக்கைகளை விடுத்துவந்த ஈபிடிபியின் வேண்டுகோளின் அடிப்படையில் இன்றைய விசேட அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து அது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் முழுமையான தயார்ப்படுத்தல்களுடன் வந்து சபையில் ஈபிடிபியின் முறைகேடுகளைச் சுட்டிக்காட்டி வாதிட்டபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் மௌனமாக இருந்ததாக தெரியவருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இச் செயற்பாடானது ஈபிடிபியுடன் முன்னரே மேற்கொள்ளப்பட்ட டீலின் அடிப்படையில் மௌனம் காக்கப்பட்டதா என்ற சந்தேகங்களை வலுப்படுத்தியுள்ளது. அதுவும் தாங்கள் குற்றமற்றவர்கள் என நிரூபிக்க  ஈபிடிபியின் கோரிக்கையின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட பிரேரணையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மௌனம் சாதித்தமை ஈபிடிபியின் பாவங்களைக் கழுவிவிடவா முயற்றார்களா என்ற சந்தேகங்களையும் வலுப்படுத்தியுள்ளது.

எனினும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரான கிருபாகரனின் கடுமையான வாதங்களையடுத்து ஈபிடிபியின் 11 உறுப்பினர்களின் எதிர்ப்பினை மீறி குறித்த கட்டடத் தொகுதியை யாழ் மாநகரசபை கையகப்படுத்தும் தீர்மானத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து வேறு வழியின்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவு வழங்கியது.

No comments