முன்னாள் கடற்படைத் தளபதி தலைமறைவு

சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட, தலைமறைவாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

11 இளைஞர்கள் கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்குத் தொடர்பாக, அட்மிரல் வசந்த கரன்னகொடவைக் கைது செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்த நிலையில், 11 இளைஞர்கள் கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்குத் தொடர்பாக அட்மிரல் கரன்னகொடவிடம், வாக்குமூலம் ஒன்றைப் பெற்று கொள்ளும், சிறிலங்கா காவல்துறையினரின் முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன.

அவர் தாம் வசித்து வந்ததாக கூறிய இரண்டு வீடுகளில் இருந்தும் அவர் காணாமல் போயுள்ளார்.

நேற்றுக்காலை 10 மணியளவில் பொல்ஹென்கொடவில் உள்ள வீட்டுக்கு கிருலப்பனை காவல் நிலையத்தைச் அதிகாரிகள் சென்ற போது, அங்கு அவரது சகோதரரே தங்கியிருந்தார். அட்மிரல் கரன்னகொட பத்தேகனவில் வசிக்கிறார் என்று அவர் கூறியிருந்தார்.

அதன் பின்னர், இன்று காலை 10 மணியளவில் பத்தேகனவில் உள்ள கரன்னகொடவின் வீட்டுக்கு கிருலப்பனை காவல் நிலைய அதிகாரிகள் சென்றனர்.

எனினும்,  தாங்கள் சென்ற அந்த முகவரியில், யாரும் இருக்கவில்லை என்று கிருலப்பனை காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments