வடக்கில் வறுமையில் முன்னாள் அமைச்சராம்?


வடமாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களிற்கு அரசு வழங்கிய கார் பெமிட்டினில் கொள்வனவு செய்த காரினை வீட்டில் தரிக்க வைத்து மக்களோடு மக்களாக தனது அரசு பணிக்கு வடக்கு மாகாண அமைச்சராக பதவி வகித்த அனந்தி சசிதரன் செல்லத்தொடங்கியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் முகாமைத்துவ உதவியாளராக, பணிபுரிந்து வந்த அனந்தி, வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, 2013ம் ஆண்டு, தனது பணியிலிருந்து ஐந்து ஆண்டுகள் ஊதியமற்ற விடுமுறை பெற்றிருந்தார். வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனந்தி, 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் அந்த சபையின் உறுப்பினராகப் பதவியேற்றார். 2017ம் ஆண்டு வடக்கு மாகாண அமைச்சரானார். மகளிர் விவகாரம், புனர்வாழ்வு, சமூக சேவைகள், கூட்டுறவு, கைத்தொழில், தொழில் ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல அமைச்சுகள் அப்போது அவருக்கு வழங்கப்பட்டன.

இப்போது வடக்கு மாகாண சபை கலைந்து விட்டது. 2018ஆம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி அச்சபையின் பதவிக் காலம் நிறைவடைந்ததை அடுத்து, அதில் அமைச்சராகப் பதவி வகித்த அனந்தி சசிதரன், மீண்டும் தனது அரச பணிக்கு திரும்பியுள்ளார். "கடந்த ஆண்டு அக்டோபர் 23ம் தேதி வட மாகாண சபை கலைந்தது. 27ம் தேதி மீண்டும் தனது தொழிலில் இணைந்து கொண்ட அனந்திக்கு அழுத்தங்களற்ற சமுர்த்தி அலுவலககத்தில் வேலை வழங்கப்பட்டுள்ளது

தற்போது தனது பிள்ளைகளுடன் சுழிபுரம் - பண்ணாகம் பிரதேசத்தில், வசித்து வரும் அவர் அலுவலகத்துக்குச் செல்வதற்காக தினமும் பேருந்தில் பயணிக்கின்றார்.

வடக்கு மாகாண சபை கலைக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், 'ஈழத் தமிழர் சுயாட்சி கழகம்' எனும் பெயரில் அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்த அனந்தி சசிதரன், அந்தக் கட்சியின் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றார்.

இதனிடையே தனது கார் பெமிட்டை 75 இலட்சங்களிற்கு விற்றிருந்த அனந்தி பின்னர் தனக்கு 40 இலட்சம் பெறுமதியான காரை கொள்வனவு செய்துள்ளார்.
தான் வருமானம் தேடவில்லையென காண்பிக்க அனந்தி இவ்வாறு பிரச்சாரங்களை மேற்கொள்வதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்கள் உள்ளிட்ட தமிழ் மக்களது ஆதரவை இழந்துள்ள அவர் அதனை மீளப்பெறும் பிரச்சார களத்தை தற்போது திறந்துள்ளார். 

இதனிடையே சாதாரண மாகாணசபை உறுப்பினர் ஒருவர் தனது பதவிக்காலத்தில் ஆகக்குறைந்தது ஒரு கோடியே 25 இலட்சத்திற்கு மேல் கொடுப்பனவுகளாக மட்டும் பெற்றுக்கொண்டமை அண்மைய தகவல் அறியும் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தப்பட்டமை தெரிந்ததே.

No comments