மணிவண்ணனை சிறையிலடைக்க துடியாய் துடிக்கும் இரட்ணஜீவன் கூல்

வழக்கொன்றில் வாழக்காளிதரப்பு மற்றும் எதிர்த்தரப்பிற்கு சார்பாக சட்டத்தரணிகள் முன்னிலையாகுவதே வழமையாக உள்ள நிலையில் வழக்கினை முன்கொண்டு செல்லும் பொலிஸார் தமது சார்பாக சட்டத்தரணி ஒருவரை அழைத்துவந்த விசித்திர சம்பவம் இன்று யாழ் நீதிமன்றில் அரங்கேறியுள்ளது.

இதேவேளை குறித்த வழக்கில் புதிய சான்றுப்பொருளாக இறுவெட்டு (சீடி) ஒன்றை இணைக்க பொலிஸார் சார்பில் முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தையும் யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் நிராகரித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆற்றிய உரையின் மூலம் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகக் கூறி தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் இரட்ணஜீவன் கூல் மணிவண்ணனிற்கு எதிராக மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் யாழ் மேல் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது.

குறித்த வழக்கு இன்று யாழ் மேல் நீதிமன்றில் நடைபெற்றபோதே வழக்கினை முன்கொண்டு செல்லும் பொலிஸார் தமது சார்பாக சட்டத்தரணி ஒருவரை அழைத்துவந்த விசித்திர சம்பவம் இடம்பெற்றது. 

அதி முக்கியமாகக் கருதப்படும் வழக்குகளில் தேவைப்படுமிடத்து சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தரணிகள் முன்னிலையாகுவர். ஆனால் 
கொலை, பாலியல் வன்புணர்வு என எந்த வழக்குகளிற்கும் இவ்வாறு பொலிஸ் தரப்பு சார்பாக சட்டத்தரணிகள் ஆஜராகுவதில்லை. புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் கூட பொலிசார் தமது தரப்புக்கு சட்டத்தரணியை நியமித்திருக்கவில்லை. இந் நிலையில் குறித்த வழங்கிற்கென பொலிஸ் தரப்பிற்காக சட்டத்தரணிகள் அழைத்துவரப்பட்டிருந்தனர்.

இதேவேளை குறித்த வழக்கில் புதிய சான்றுப்பொருளாக இறுவெட்டு (சீடி) ஒன்றை இணைக்க பொலிஸ் தரப்பு முற்பட்டது. 

எனினும் எதிரி தரப்பில் ஆஜரான  மூத்த சட்டத்தரணி விஸ்வலிங்கம் திருக்குமரன் “ தேர்தல் ஆணைக்குழுவைச் சேர்ந்த இரட்ணஜீவன் கூல் ஒரு பக்கச்சார்பான நபர் என்றும் அவர் பக்கச்சார்பான முறையில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசிற்கு எதிராகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு எதிராகவும் அவரது குடும்பத்திற்கு எதிராகக்கூட செயற்பட்ட, கட்டுரைகள் உள்ளிட்டவை எழுதிய நபர்.  அதேவேளை தேர்தல் நேரத்திலேயே குறித்த கட்சிக்கு வாக்களிக்க கூட்டாது என்ற சாரப்பட கருத்துக்கள் தெரிவித்திருந்தார். 

சுதந்திர தேர்தல் ஆணைக்குழுவில் உள்ள ஒரு நபர் கட்சி ஒன்றுக்கு எதிராக வேறு சில நபர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் செறப்பட்டுள்ளார். அதனை நோக்காகக் கொண்டே தீய எண்ணத்தில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது என்றும் தெரிவித்ததோடு அத்துடன் குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் வழக்கு விளக்கத்துக்கு நியமிக்கப்பட்ட பின்னர் சான்றுப்பொருள் ஒன்றை இணைக்க பொலிஸார் முற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது சட்ட ஏற்பாடுகளுக்கு புறம்பானது. எனவே சான்றுப்பொருளை இணைக்கும் விண்ணப்பத்தை மன்று நிராகரிக்கவேண்டும்” என்று சமர்ப்பணம் செய்தார்.

எதிரி தரப்பு விண்ணப்பத்தை ஆராய்ந்த மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், பொலிஸாரின் விண்ணப்பத்தை நிராகரித்ததோடு வழக்கினை எதிர்வரும் ஜூன் மாதம் 24 திகதிக்கு ஒத்திவைத்தார்.

இந்நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் பலரும் இன்று குறித்த வழக்கினைப் பார்வையிட நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டிருந்தனர்.

No comments