போர்க்குற்றம் நிகழ்த்தியிருந்தாலும் படையினருக்கு தண்டனையில்லை

“இறுதிப் போரில் இராணுவத்தினர் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்பதுதான் எனது நிலைப்பாடு. எனினும், அவர்கள் போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று எவராலும் சொல்லப்பட்டாலும் இராணுவத்தைத் தண்டிக்க இடமளிக்கமாட்டேன். நான் ஆட்சியில் இருக்கும் வரை இதற்கு ஒருபோதும் அனுமதியளிக்கமாட்டேன். அது ஒருபோதும் நடவாது.”

– இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

வடக்குக்கு கடந்த வாரம் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, போரின்போது இரு தரப்பினரும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர் எனவும், இந்தச் சம்பவங்களை மறப்போம் மன்னிப்போம் எனவும் கூறியிருந்தார். இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பதிலளிக்கும்போது, “பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மறப்போம் மன்னிப்போம் என்ற கருத்தை அடியோடு நிராகரிக்கின்றோம். மறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சுக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். படையினரின் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் வன்னியில் இன்னமும் இருக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கும், கொன்றொழிக்கப்பட் மக்களுக்கும், காணாமல் ஆக்கப்பட்ட மக்களுக்கும் நீதி வேண்டும். சர்வதேச பொறிமுறை ஊடாக உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பில் ஜனாதிபதியின் நிலைப்பாடு என்னவென்று அவரிடம் கொழும்புச் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு அவர் பதிலளிக்கும்போது,

“இராணுவத்தினர் எமது நாட்டின் வீரர்கள். குருதி சிந்தி நாட்டை மீட்டெடுத்த உத்தமர்கள். அவர்கள் இறுதிப் போரில் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்பதுதான் எனது நிலைப்பாடு.

எனினும், அவர்கள் போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று எவராலும் சொல்லப்பட்டாலும் இராணுவத்தைத் தண்டிக்க இடமளிக்கமாட்டேன்.

நான் ஆட்சியில் இருக்கும் வரை இதற்கு ஒருபோதும் அனுமதியளிக்கமாட்டேன். இது உறுதி.

இராணுவத்தை நான் பாதுகாத்தே தீருவேன். எமது இராணுவத்தினரை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த சிலர் முயற்சிக்கின்றனர். இராணுவத்தினர் மீது வீண்பழியைச் சுமத்துகின்றார்கள்.

நாட்டைக் காட்டிக் கொடுக்கும் இவர்களுக்கு வரலாறு தக்க பாடம் புகட்டும்.

சில வெளிநாடுகள் எமது நாட்டின் உள்விவகாரங்களில் தேவையில்லாமல் தலையிடுகின்றன. இதற்கு இங்கிருப்பர்வர்களும் உடந்தையாக உள்ளனர். இவர்களை ஒருபோதும் திருத்த முடியாது. வரலாறு இவர்களைக் கவனிக்கும்” – என்றார்.

No comments