பொலிசாரால் கடத்தப்பட்ட வர்த்தகர்கள் இருவர் கொல்லப்பட்டு எரிப்பு

காலி – ரத்கம பிரதேசத்தில் கடத்தப்பட்ட வர்த்தகர்கள் இரண்டு பேரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது எனப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

தென் மாகாண பொலிஸ் விசேட குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் சிலர் இரண்டு வர்த்தகர்களை கடத்தி கொடூரமான முறையில் சித்திரவதை செய்து அவர்களைப் படுகொலை செய்து, சடலங்களை எரித்து அழித்துள்ளனர் என்று புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

வர்த்தகர்களின் சடலங்கள் எங்கு அழிக்கப்பட்டன என்பது பற்றிய விபரங்கள் கிடைக்கப்பெறாத போதிலும் பல்வேறு முக்கியமான தடயங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்த இரண்டு வர்த்தகர்களுக்கும் எதிராக எவ்வித குற்றச்சாட்டுக்களும் கிடையாது என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கப்பம் பெற்றுக் கொள்ளவோ அல்லது வேறு ஒருவரின் தேவைக்காகத் திட்டமிட்ட அடிப்படையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலர் வர்த்தகர்கள் இருவரையும் கடத்திக் கொலை செய்துள்ளனர் எனப் புலனாய்வுப் பிரிவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசேட குற்ற விசாரணைப் பிரிவில் கடமையாற்றிய வந்த பொலிஸ் பரிசோதகர் கபில நிசாந்த என்பவரைப் பொலிஸார் கடந்த திங்கட்கிழமை கைதுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தகர்களைத் தாம் கடத்தவில்லை எனப் பொலிஸ் அதிகாரி கபில நிஷாந்த கூறிய போதிலும், வர்த்தகர்கள் கடத்திச் செல்லப்பட்டமை குறித்த சி.சி.ரி.வி காணொளி மற்றும் வேறு சாட்சியங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.

உயர் பொலிஸ் அதிகாரிகளுக்குத் தெரியாமல் இந்த வர்த்தகர்கள் கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளனர்.

வர்த்தகர்கள் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர் எனவும், சடலங்கள் எரிக்கப்பட்டுள்ளன எனவும், குடும்பத்தாருக்கு அநாமேதய கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments