பத்தாண்டு கடந்தும் வலிக்கின்றது: வித்தி!


மூத்த ஊடகவியலாளர் ந.வித்தியாதரன் கடத்தப்பட்டவேளை தான் எதிர்கொண்ட சித்திரவதைகள் தொடர்பில் இன்று வெளிப்படுத்தியுள்ளார்.

சரியாகப் பத்தாண்டுகளுக்கு முன்னர் இதே தினத்தில்தான், 26ம் திகதியன்று காலை 9.15 மணியளவில் கொழும்பு, கல்கிஸை மஹிந்த மலர்ச்சாலையில் நெருங்கிய உறவினர் ஒருவரின் மரணச் சடங்கில் நான் கலந்து கொண்டிருக்கையில் வெள்ளை வானில் சிவில் உடையில் வந்த இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரால் பட்டப்பகலில் பலரும் பார்த்திருக்க ஆயுத முனையில் கடத்தப்பட்டேன். மிகமோசமான சித்திரவதை மற்றும் அவமானப்படுத்தலின் பின்னர் 'வெள்ளை வானில் கடத்தப்பட்டவர் கண்கள் கட்டப்பட்டப்பட்ட நிலையில் சந்தியில் போடப்பட்டிருந்த போது பொலிஸாரால் மீட்கப்பட்டார். பொலிஸாரால் தேடப்படுபவராக அவர் இருந்தமையால் அவர் கைது செய்யப்பட்டார்' - என்று அறிவிக்கப்பட்டு, வெள்ளைவான் கடத்தல் பின்னர் கைதாக மாற்றப்பட்டது.

தேசிய ரீதியில் நன்கு அறியப்பட்ட பத்திரிகையாளனாக, ஒரே சமயத்தில் ஒன்றுக்கு இரண்டு பத்திரிகைகளின் ஆசிரியனாக ( கொழும்பு - 'சுடர் ஒளி', யாழ்ப்பாணம் -'உதயன்') இருந்த என்னை நான் கடத்தப்பட்ட கையோடு 'பயங்கரவாதி' என்று கோபத்துடன் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆஸ்திரேலிய செய்தியாளரிடம் திட்டுகின்ற காணொலியை இங்கு இணைத்துள்ளேன். அன்றைய யுத்த நெருக்கடியில் அந்தப் பேட்டியை செவிமடுத்த நம்மவர்கள் யாரும் நான் உயிருடன் மீளுவேன் என்று நம்பவேயில்லை.

ஆனாலும், சுமார் இரண்டரை மாதங்களின் பின்னர் - யுத்தம் முடியும் கட்டத்தில் - இலங்கைப் பாதுகாப்புப் பிரிவின் நான்கு புலனாய்வுப் பிரிவினரும் என்னை 'பயங்கரவாதியாக' நிரூபிக்க எந்த ஆதாரங்களும் தங்களிடம் இல்லை என நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த நிலையில், கொழும்பு நீதிமன்றம் என்னை நிபந்தனையின்றி விடுதலை செய்து உத்தரவிட, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான இரண்டரை மாத தடுப்புக் காவலின் பின்னர் வெளியே வந்தேன்.

குடும்பத்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையிலேயே மிக மோசமாகவும் அவமானகரமாகவும் நடத்தப்பட்டமையில் தொடங்கி, நிர்வாணமாக்கப்பட்டு, கண்கள் கட்டப்பட்டு, கைகள் விலங்கிடப்பட்டு, கொடூரமாகத் தாக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டமை வரை எழுத்தில் வடிக்க முடியாத பல துன்பங்களை அனுபவித்த போதிலும், பேனாவின் மீதும் சத்தியத்தின் மீதும் நாம் வைத்திருந்த நம்பிக்கை மனத்திடத்தையும், துணிவையும், மீட்சியையும் எப்போதும் தந்து நின்று அரணாகக் காப்பாற்றியது என்றே நான் கருதுகிறேன்.

விடுதலையாகி சுமார் ஒரு வருட காலத்தின் பின்னர் - 2010 பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் காலத்துடன் - 'உதயன்', 'சுடர் ஒளி' நிறுவனங்களுடனான எனது கால் நூற்றாண்டு காலப் பங்களிப்பும் கூட முடிவுக்கு வந்தது என தனது வலி கலந்த அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

No comments