வெள்ளைவான் தந்தைக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கமாட்டார்கள்

“வெள்ளை வான் கடத்தலின் தந்தை என வர்ணிக்கப்படும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபாய ராஜபக்ச தன்னுடைய வாழ்நாளில் சிறுபான்மை மக்களின் வாக்குகளை ஒருபோதும் பெற்றுக்கொள்ளமாட்டார்.”

– இவ்வாறு தெரிவித்தார் நெடுஞ்சாலை வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் களமிறங்கத் தயார் என்று தெரிவித்துள்ளார் கோட்டாபய ராஜபக்ச. இது தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்கவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கோட்டாபய ராஜபக்ச எத்தனை தடவைகள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டாலும் அவரது வாழ்நாளில் அவருக்கு சிறுபான்மை மக்கள் ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள்.

தேர்தலில் வெற்றிபெற வேண்டுமாயின் நூற்றுக்கு 51 வீத வாக்குகள் பெற வேண்டும். ஆனால், சிறுபான்மை மக்களுடைய வாக்குகளின்றி அதனைப் பெறமுடியாது.

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக அவரால் முன்னெடுக்கப்பட்ட விடயங்களே அதற்கான காரணமாகும்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலை நோக்கும் போது நூற்றுக்கு 63 வீத வாக்குகளை சந்திரிகா குமாரதுங்க பெற்றிருந்தார். அதேபோன்று போரின் பின்னர் மஹிந்த ராஜபக்ச 53 வீத வாக்குகளையே பெற்றிருந்தார்.

எனினும், அதற்கு பின்னர் இடம்பெற்ற தேர்தல்களில் அதனை விட குறைவான வாக்குகளே ஒரு தரப்புக்குக் கிடைக்கப்பெற்றன. கோட்டாபய தேர்தலில் போட்டியிட்டால் 40 வீத வாக்குகளைத்தான் அவரால் பெறமுடியும்.

காரணம் அவருக்கு எதிராக ஊழல் மோசடி தொடர்பில் பல்வேறு வழக்குகள் காணப்படுகின்றன. வெள்ளை வான் கடத்தலின் தந்தை என அவர் வர்ணிக்கப்படுகின்றார்.

அத்தோடு ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலையுடன் அவருக்கு தொடர்பு உள்ளது என்று கூறப்படுகின்றது.

எனவே, அவ்வாறான ஒருவருக்கு வாக்களிப்பதற்கு மக்கள் முட்டாள்கள் அல்லர்.

அவருடன் எமக்கு எந்த தனிப்பட்ட பிரச்சினைகளும் இல்லை. ஆனால், வெளிநாட்டு குடியுரிமையைக் கொண்ட அவர் மீது எந்த வகையில் நம்பிக்கை வைப்பது என்பதே எமது கேள்வியாகும். அதனை வைத்துக் கொண்டு அவர் மீண்டும் அமெரிக்காவுக்குச் செல்லக் கூடும். அத்தோடு அவரை விட சிறந்தவர்கள் அந்த தரப்பில் உள்ளனர்” – என்றார்.

No comments