ஆட்சி அமைத்ததும் ஜெனீவாத் தீர்மானத்தை நீத்துப்போகச் செய்வோம்


சிறிலங்கா பொதுஜன முன்னணி ஆட்சியமைத்த பின்னர், 2015இல் சிறிலங்கா அனுசரணை வழங்கிய தீர்மானத்தை முறியடிக்கும் வகையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரும் என்று, அந்தக் கட்சியின் தலைவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

”2015இல் சிறிலங்கா அனுசரணை வழங்கிய தீர்மானத்தை துரோக ஆவணமாக நாங்கள் பார்க்கிறோம். சிறிலங்காவின் சட்ட நடைமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புக்கு அது பரிந்துரைக்கிறது.

வெளிநபர்களின் தலையீடு இல்லாமல் இந்தப் பிரச்சினை சிறிலங்காவுக்குள் தீர்க்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.

30/1 தீர்மானத்தின் விளைவுகளைத் திருப்பி விட சிறிலங்கா பொதுஜன முன்னணி முயற்சிக்கும். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் புதியதொரு தீர்மானத்தைக் கொண்டு வந்து, பேரவையின் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றுவதன் மூலம் புதிய அரசாங்கத்தினால் அதனைச் செய்ய முடியும்.

2013இல், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா ஒரு தீர்மானத்தை சமர்ப்பித்த போதும், அது வாக்கெடுப்பில் தோல்வி கண்டது.

இராணுவ அதிகாரிகளை எந்த சட்டநடவடிக்கைக்கும் உட்படுத்துவதை எதிர்க்கும் வகையில் தீர்மானம் இருக்கும். நாட்டின் இறைமையை பாதுகாப்பதை அடிப்படையாகக் கொண்டு புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

புதிய தீர்மானத்தை நாங்கள் கொண்டு வருவதால் நாங்கள் நல்லிணக்கத்துக்கு எதிரானவர்கள் என்று அர்த்தமில்லை.

நல்லிணக்க ஊக்குவிப்புகள் உள்நாட்டு  வரையறைகளுக்குள்,  எமக்குப் பொருத்தமான வடிவத்தில் இருக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments