சுமந்திரனின் தாளத்திற்கு ஆடமாட்டோம் - மாவையே அடுத்த தலைவர்

“எனது அரசியல் அறிவில் புதிய அரசமைப்பு வருமென்று நான் எதிர்பார்க்கவில்லை. அவ்வாறு வருவதற்கான சாத்தியமும் இல்லை. புதிய அரசமைப்பு என்பதே முடிவடைந்துவிட்டது.”

– இவ்வாறு தெரிவித்தார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவரைத் தெரிவதற்கான சந்தர்ப்பம் இப்போது ஏற்படவில்லை என்றும், அவ்வாறு ஏற்படும்போது சிரேஷ்ட உறுப்பினர் என்ற அடிப்படையில் மாவை சேனாதிராஜாவுக்கே வாய்ப்புக்கள் அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எனக்குத் தெரிந்தவரை தமிழரசுக் கட்சியின் அரசியல் விவகாரக் குழு, மத்திய செயற்குழு அது தவிர கட்சியின் துணைப் பொதுச் செயலாளராகவும் நான் இருக்கிறேன். எந்தவொரு காலத்திலும் எனக்கு உடல் நலம் சரியில்லை; நான் தலைமைப் பதவியிலிருந்து விலகிறேன் எனச் சம்பந்தன் ஐயா சொன்னது கிடையாது. அதேபோல் மாவை சேனாதிராஜாவும் தனக்கு வருத்தமாக உள்ளது, தான் விட்டு விலகப் போகிறேன், வேறு யாரையும் தேடுங்கள் என்று சொன்னதும் கிடையாது.

இந்தக் கதை ஏன் வந்தது? எப்படி வந்தது? என்று எனக்கும் விளங்கவில்லை. அப்பிடி ஒரு நிகழ்வு இல்லை. அவ்வாறானதொரு நிலை வருகின்றபோது யார் அடுத்த தலைவர் என்பதை நாங்கள் தீர்மானிப்போம். அதனைக் கட்சிதான் தீர்மானிக்கும்.

ஆகவே, தனிநபர்கள் நினைத்தபடி ஆடுவதற்கு தமிழரசுக் கட்சியில் இடம் இல்லை. வரலாற்றிலும் அப்படி நடக்கவில்லை. அவ்வாறு நடக்கவும் முடியாது. ஆகவே, எனக்குத் தெரிந்தவரை சந்பந்தனோ ,மாவையோ தங்களுக்கு சுகயீனம் என்று சொல்லவில்லை.

தமிழரசுக் கட்சியின் மத்திய, அரசியல் கூட்டங்களிலோ அல்லது மாவட்டக் குழுக் கூட்டங்களிலோ இப்படியான விடயம் பேசப்படவே இல்லை.

எனக்குத் தெரிந்தவரை கூட்டமைப்பின் கூட்டம் என்பது நாடாளுமன்றக் குழுக் கூட்டம் தான். அதுதான் கூட்டமைப்பு. அதைவிட வேறு ஏதும் எனக்குத் தெரியவில்லை. அந்தக் கூட்டத்திலும் புதிய தலைமை தொடர்பில் விவாதிக்கப்படவில்லை என அறிந்தேன்.

கட்சியின் சிரேஷ்ட தன்மையைப் பார்த்தால் சம்பந்தன் ஐயாவுக்கு அடுத்த நிலையில் மாவை சேனாதிராஜாதான் இருக்கின்றார். ஆகவே, மாவை சேனாதிராஜா தான் அடுத்த தலைவராக வரக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம்.

அதற்காகச் சுமந்திரனை நிராகரிக்கின்றோம் என்ற கருத்தல்ல இது. சுமந்திரனுக்கும் இதில் சம்மதம் இருக்குமென்று நான் நினைக்கவும் இல்லை.

சம்பந்தன் ஐயா தொடர்ந்தும் தலைவராக இருக்கவேண்டுமென்பது தான் எங்கள் நிலைப்பாடு. சம்பந்தன் ஐயா எங்களுக்கு ஒரு தீர்வை எட்டக்கூடிய முயற்சியில் இருக்கிறார்.

புதிய அரசமைப்பு என்பதே முடிந்துவிட்டது. ஆகையால் புதிய அரசமைப்பு வரும் என்று நான் சொல்ல விரும்பவில்லை.

மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இருக்கும் நிலைப்பாட்டைப் பார்த்தால் எனது புரிதலுக்கமைய புதிய அரசமைப்பு இனி வரக்கூடிய சந்தர்ப்பம் – சாத்தியம் இல்லை. அதற்காக நாங்கள் எங்கள் முயற்சிகளைக் கைவிடுகிறோம் என்றும் இல்லை.

நாங்கள் நாட்டு ஒழுங்குகளைப் பார்க்கலாம். நான் ஏற்கனவே சொன்னது போல வழிமுறைகள் மாறலாம் தானே. இலக்கு மாறாமல் வழிமுறை மாறலாம் என்று பிரபாகரனும் சொல்லியிருக்கிறார். மாற்று வழிமுறைகள் என்ன என்பதை ஆராயவேண்டிய சூழ்நிலையில் நாங்கள் இருக்கிறோம். அந்த விடயம் பரிசீலிக்கப்படும்” – என்றார்.

No comments