யாழில் மீண்டும் தமிழில் பெயர்பலகை!


யாழ்.மாநகரசபை எல்லைக்குள் அமைந்துள்ள அரச, மற்றும் தனியார் மற்றும் வியாபார நிறுவனங்களின் பெயர் பலகைகளில் தமிழ் மொழி, முதலாவதாகவும்,பெரியளவிலும் அடுத்து விரும்பிய ஆங்கில அல்லது சிங்கள மொழிகளில் பெயர்ப்பலகைகள் இடம்பெற வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இடம்பெற்ற  மாதாந்த அமர்வின் போது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் யாழ்,மாநகரசபையின் 02ஆம் வட்டார உறுப்பினர் ப.தர்சானந்தினால் சமர்ப்பிக்கப்பட்ட இப்பிரேரணையானது சபையின் ஏகமனதான சம்மதத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்போது உரையாற்றிய மாநகரசபை உறுப்பினர் ப.தர்சானந்; தனது உரையில் எமது மாநகரில் நான் அவதானித்த பல வர்த்தக நிலையங்கள், அரச நிறுவன பெயர்ப்பலகைகளில் தமிழ் மொழியானது இரண்டாம்பட்சமாக அல்லது சிறியளவிலேயே காணபப்டுகிறது. வட – கிழக்கின் ஆட்சிமொழி தமிழாக இருப்பதால் எமது பிரதேசத்திலுள்ள சகல அரச, மற்றும் தனியார் மற்றும் வியாபார நிறுவனங்களின் பெயர் பலகைகளில் தமிழ் மொழி பெரியளவிலும் அடுத்து விரும்பிய ஆங்கில அல்லது சிங்கள மொழிகளில் பெயர்ப்பலகைகள் இடம்பெற வேண்டும். இதுவே நீதியானதுமாகும்.
கொழும்பு தவிர்ந்த சிங்கள புறநகரங்களில் பல இடங்களில் தனிச்சிங்களத்திலேயே பெயர்ப்பலகைகள் உள்ளன. ஆனால் நாம் அதுபோலல்லாமல் எமது பகுதில் பல இனத்தவரும் வந்து செல்வதால் தமிழைப்பெரியளவிலும், அடுத்து விரும்பிய மொழியான ஆங்கிலத்தையோ, சிங்களத்தையோ பெயர்ப்பலகைகளில் இடலாம். இதனை சபைத்தீர்மானமாக எடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிக்கலாம் என ப.தர்சானந் தெரிவித்தார்.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் ப.தர்சானந் இனது மேற்படி பிரேரணையானது உறுப்பினர்களின் ஏகமனதான ஆதரவுடன் இன்று யாழ்,மாநகரசபையில் நிறைவேற்றப்பட்டதுடன், இதனைக் கண்டிப்புடன் கடைப்பிடிக்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்படும் என மாநகரசபையின் மேயர். இ.ஆர்னோல்ட் தெரிவித்தார்.

No comments