2019 பெப்ரவரி நான்காம் திகதி சுதந்திர தினமா? சுமந்திர தினமா? பனங்காட்டான்

புதிய அரசியலமைப்பு சாத்தியமில்லையென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாகக் கூறி விட்டார். இது நடைமுறையில்லையென்றால் தனது தோல்வியை ஒப்புக் கொண்டு
அரசியலிலிருந்து போய்விடுவேனென்று கனடாவிலுள்ள தமிழ்த் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியில் கூறியவாறு சுமந்திரன் செயற்படுவாரா? அல்லது முன்னைய சில உறுதிமொழிகளுக்கு ஷபல்டி| அடித்ததுபோல இதிலும் அடிப்பாரா?

தைப்பொங்கல், தீபாவளி, சித்திரைப் புதுவருடம் என்பவை உலகளாவிய ரீதியில் தமிழ் மக்களின் முக்கிய கொண்டாட்ட தினங்கள்.

ஒருவகையில் இப்போது கிறிஸ்மஸ் (நத்தார்) தினமும் தமிழ் மக்களால் பரந்தளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

2015ம் ஆண்டுக்குப் பின்னரான கடந்த நான்கு ஆண்டுகளில் இலங்கைத் தமிழரின் அரசியலிலும்கூட இந்தத் தினங்கள் முக்கியமானவையாகப் பதிவு பெற்றுள்ளன.

இந்தப் பதிவைப் பெற்றுக் கொடுத்த வரலாற்றுப் பெருமைக்குரியவர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு மேற்சொன்ன கொண்டாட்ட தினங்களுக்கு முன்னர் கிடைக்குமென ஒவ்வொரு கொண்டாட்ட காலங்களிலும் தாம் நம்பிக்கை வைத்திருப்பதாக தெரிவித்து அரசியலிலும் இத்தினங்களை முக்கியமாக்கியவர் இவர்.

ஆனால், அண்மைய நாட்களில் இந்த நம்பிக்கையை இப்போது நம்பிக்கையீனம் என்று சொல்லாமல், அது தன்னுடைய சொந்த நம்பிக்கையென்று அரசியல்வாதிக்குரிய வழியில் சம்பந்தன் கூறி தம்மைத் தப்பவைக்க முனைவதை அவதானிக்கலாம்.

பின்னர் வந்த கொம்பு, முன்னர் வந்த மாட்டின் செவியை மறைத்த கதை போன்று, கூட்டமைப்புக்குள் பின்கதவால் புகுந்த சுமந்திரன், முன்கதவால் வந்த சம்பந்தனைத் தவறாக வழிநடத்தியதாலேயே அவர் நம்பிக்கை மீது நம்பிக்கையில்லாதவேளையிலும் நம்பிக்கையுள்ளதாக சொல்லி வந்ததாக கூட்டமைப்பின் சிலர் தமக்குள் பேசிக் கொள்கின்றனர்.

சம்பந்தனின் கொண்டாட்ட கால நம்பிக்கை போன்று சுமந்திரனுக்கும் நம்பிக்கையான நாளொன்றுண்டு.

அது சிங்களத் தேசத்தின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ம் திகதி. 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் மௌனத்துக்குப் பின்னர் இந்த சுதந்திர தினத்தை சிங்கள அரசாங்கங்கள் யுத்த வெற்றி நாளாகக் கொண்டாடியதை இவ்விடத்து நினைவுகொள்ள வேண்டியது அவசியம்.

சுமந்திரனின் ஆகப்பிந்திய பொது அறிவிப்பானது இந்த வருட (சிங்கள) சுதந்திர தினத்துக்கு முன்னர், அதாவது பெப்ரவரி மாதம் 4ம் திகதிக்கு முன்னர் புதிய அரசியலமைப்புத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் என்பதாகும்.

இது சாத்தியமாகுமா, இல்லையா என்பதை அலசுவதற்கு முன்னர், இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சில நாட்களுக்கு முன்னர் களுத்துறையில் நடைபெற்ற கூட்டமொன்றில் ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகளைக் கவனிப்பது பொருத்தமானது.

தமதுரையில் இதனை வெவ்வேறு அம்சங்களாக மிகத் துல்லியமாக நன்கு வெளிப்படையாக அனைவருக்கும் விளங்கும் வகையில் தெளிவாக பின்வருமாறு ரணில் எடுத்துக்கூறியுள்ளார்:

முதலாவது - புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவது அரசமைப்பு பேரவையாக இயங்கும் நாடாளுமன்றத்தின் கடமையே தவிர, பிரதமர் என்னும் வகையில் தமது கடமையல்ல என்பது இவரது முதற்கூற்று. (தமது பொறுப்பை இவர் தட்டிக் கழிப்பதை இங்கு காணலாம்)

இரண்டாவது - புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற அதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவை. இப்போதுள்ள சூழ்நிலையில் அது கிடைக்கும் என்பதற்கு நம்பிக்கையில்லை. இந்த நிலைமையில் இதனை நிறைவேற்ற முடியாதென்பது நன்கு தெரிகிறது.

மூன்றாவது - புதிய அரசியலமைப்புத் தொடர்பாக மல்வத்தை மகாநாயக்க தேரர் தெரிவித்துள்ள கருத்துகள் கவனிக்கப்பட வேண்டியவை. (அவர் தெரிவித்துள்ள எதிர்ப்புகளை நிராகரிக்க முடியாதென்பது ரணிலின் உட்கிடக்கை)

நான்காவது - புதிய அரசியலமைப்புக்கு சமர்ப்பிக்கப்பட்ட சில ஆவணங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. சகல அரசியல் கட்சிகளும் பிரிக்கப்படாத ஒரு நாட்டுள் (ஒற்றையாட்சி) அதிகாரப் பகிர்வுக்கு இணங்கியுள்ளன. (கூட்டமைப்பின் ஒருங்கிணைந்த நாடு காணாமல் போய்விட்டது)

ஐந்தாவது - சம~;டி முறையில் பொதுமக்களின் இறைமை நிர்வாக ரீதியாகப் பிரிக்கப்படுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி ஆதரவளிக்கவில்லை. (ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணிலே என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டியது)

இவரது உரைக்கு கொழும்பிலிருந்து வெளிவரும் டெய்லி மிரர் பத்திரிகை இட்டுள்ள தலைப்பு 'நேற உழளெவவைரவழைn: ஐக ழெவ ழெறஇ வாநn டுயவநச" (புதிய அரசியலமைப்பு இப்போது இல்லையென்றால், பின்னரே). டெய்லி மிரர் பத்திரிகையின் உரிமையாளர் ரணிலின் தாய் மாமனான ரஞ்சித் விஜேவர்த்தன. இவரது மகனான றுவான் விஜேவர்த்தன ரணிலின் அரசில் பாதுகாப்பு பிரதியமைச்சராகவுள்ளார்.

ரணிலின் மேற்சொன்ன கூற்று, 'இன்று என்பதும் நாளை என்பதும் இல்லை என்பதற்குச் சமன்" என்ற நல்வாக்கை நினைவூட்டுகிறது.

ரணிலைப் பதவியிறக்கி மகிந்தவைப் பிரதமராக்கிய மைத்திரியின் ஐம்பத்திரண்டு நாள் நாடகத்தை முறியடிக்க நீதிமன்றங்களின் படியேறிய சுமந்திரன், நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பாற்றிய நாயகன் என்று சிங்களப் பிரமுகர்களால் பாராட்டப்பட்டதாக ஒரு செய்தியை பத்திரிகைகளில் படித்ததாக ஞாபகம்.

ரணிலை மீண்டும் பிரதமராக்கி அவரது கட்சியினரை அமைச்சர்களாக்கி அரியாசனம் ஏற்றிய சுமந்திரனுக்கும் அவரது கூட்டமைப்புக்கும் இதுவரை கிடைத்த பரிசுகள் என்ன?

மைத்திரியுடன் செய்த ஒப்பந்தத்தின்படி சம்பந்தனை எதிர்க்கட்சிப் பதவியிலிருந்து இறக்கி அவ்விடத்துக்கு மகிந்தவை நியமித்தது ரணில் ஏற்றுக் கொண்ட முடிவே.

புதிய அரசியலமைப்பு மகிந்த தரப்பின் ஆதரவின்றி நிறைவேற்ற முடியாதென்று சாட்டுச் சொல்லி அதனை பிற்போடுவதும் ரணிலே.

மைத்திரியை ஜனாதிபதியாக்க வாக்களித்த தமிழர், பின்னர் ரணிலைப் பிரதமராக்கவும் பின்னிற்காது வாக்களித்தனர். இது மகிந்தவை தோற்கடிப்பதற்காக தமிழர்கள் எடுத்த முடிவு. இதன் அடிப்படையிலேயே சதித்திட்டத்தின் மூலம் மகிந்த பிரதமர் பதவியை கைப்பற்றியபோது அதனை எதிர்த்து கூட்டமைப்பு வெற்றி கொண்டது நியாயமானதும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதும்.

ஆனால், அதற்கான நன்றிக் கடனாகவாவது (தேர்தல் வாக்குறுதிக்காக இல்லாவிட்டாலும் பரவாயில்லை) கூட்டமைப்புக்கு கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்ற ரணில் என்ன நடவடிக்கை எடுத்தார்?

இந்த ஆண்டு இலங்கையில் தேர்தல் ஆண்டு.

மே மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் சகல மாகாண சபைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்று அமைச்சரவையில் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

அடுத்த வருட முதல் வாரத்துடன் ஜனாதிபதியின் ஐந்தாண்டுப் பதவிக்காலம் முடிவடைகிறது. இதற்கு 30 நாட்களுக்கு முன்னர் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வேண்டும்.

அடுத்தாண்டு முற்பகுதியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறப் போகிறது.

இந்தத் தேர்தல்களில் தமது அணியின் வெற்றிகளை நிர்ணயிப்பதற்கு சிங்கள பௌத்த மக்களின் வாக்குகள் அவசியமென்பதை நன்குணரும் ரணில், இவ்வேளையில் தமிழருக்கு சாதகமானதாகக் காட்டப்படும் (?) புதிய அரசியலமைப்பை உருவாக்குவார் என்று எதிர்பார்ப்பது மடமையிலும் மடமை.

இதனை நன்கறிந்தே புதிய அரசியலமைப்பு ஒருபோதும் வராதென அமைச்சர்கள் மனோ கணேசனும், றிசாட் பதியுதினும் பகிரங்கமாக அறிவிக்க ஆரம்பித்துள்ளனர். இதுவும்கூட ரணிலின் ஆசிர்வாதத்துடனே.

இதுவெல்லாம் சுதந்திரதின அறிவிப்புச் செய்த சுமந்திரனுக்குத் தெரியாதவையல்ல. எனினும் மீசையில் மண்படாத கதைபோல மூன்றிலிரண்டு பெரும்பான்மையில்லாத வேளையில் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவது சுலபமென்று புதிய கணக்கொன்றை காட்டுகின்றார்.

இது உண்மையெனில், இதனை பகிரங்கமாகக் கூறி உடைத்துக் கொட்டாமல், ரணிலிடம் காதோடு காதாகக் கூறி அதனை நிறைவேற்றியிருக்க வேண்டியதே இவரின் அரசியல் தந்திரமாக இருந்திருக்க வேண்டும். அதனைவிடுத்து, தமது மேதாவித்தனத்தை பொதுமக்களுக்குக் காட்டுவதற்கு ஊடகங்கடாக இந்த வழிமுறையை எடுத்துக் கூறியுள்ளார்.

புதிய அரசியலமைப்பு ஒரு மதத்துக்கு (பௌத்தம்) முன்னுரிமை வழங்குவதை எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியதென்று முன்னர் கூறிய சுமந்திரன், சில மாதங்களின் பின்னர் புதிய அரசியலமைப்பில் பௌத்த முன்னுரிமைக்கு கூட்டமைப்பு ஒருபோதும் எதிர்க்காதென்று பல்டி அடித்தது ஞாபகமிருக்கிறது.

புதிய அரசியலமைப்பு நிறைவேறியதும் தமது கடமை முடிந்ததாகக் கூறி அரசியலிலிருந்து ஓய்வு பெற்று விடுவதாகவும், இல்லையெனில் தமது தோல்வியை ஏற்றுக் கொண்டு அரசியலிலிருந்து ஒதுங்கி விடுவதாகவும் கனடாவிலுள்ள தமிழ்த் தொலைக்காட்சிச் சேவையொன்றுக்கு கடந்த வருடம் வழங்கிய செவ்வியில் சுமந்திரன் கூறியது பிரபல்யமானது.

இந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றுவாரா அல்லது அதிலும் பல்டி அடிப்பாரா?

அதற்கு முன்னர் அவருடைய காலக்கெடுவான சிங்கள சுதந்திர தினம் பெப்ரவரி 4ஆம் திகதி வருகிறது.

இது சுதந்திர தினமா? சுமந்திர தினமா? அவர்தான் சொல்ல வேண்டும்.




No comments