தூயசக்தி மற்றும் சுகாதாரப் பிரயோகம்:யாழில் மாநாடு


பல்கலைக்கழகமானது தனியே கற்றல் கற்பித்தலோடு மட்டுமே நின்றுவிடாது ஆய்வுகளையும் அதனூடனான பெறுபேறுகளை சமூகத்திற்கு எடுத்துச் செல்லும் வழிகாட்டியாகவும் இருக்கவேண்டும். இந்த வகையில், மேற்கு நோர்வேப் பல்கலைக்கழகமும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் இணைந்து பெற்றுக்கொண்ட நிதியுதவியுடன் இரு நாடுகளிற்கிடையேயான ஆய்வு தொடர்பான கூட்டுநடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆய்வுப்பணிகளை மேலும் முன்னெடுக்கும் நோக்கிலும் முதலாவது தூயசக்தி மற்றும் சுகாதாரப் பிரயோகம் தொடர்பான சர்வதேச  மாநாட்டை வருகின்ற பெப்ரவரி மாதம் 6-8 ஆந் திகதிகளில் நடாத்த ஒழுங்குசெய்துள்ளன.

இந்த மாநாட்டின் தொனிப்பொருளின் பிரசவிப்பானது தற்கால சூழலில் நிகழும் சக்திச் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கான வகையில் அமைந்துள்ளது. இந்த வகையில் நனோத்துணிக்கை / பதார்த்தங்களின் தூய சக்தி மற்றும் சுகாதாரப் பிரயோகங்கள் எனும் தொனிப்பொருளை மையமாகக் கொண்டு ஆறு பெரும் பிரிவுகளின் கீழ் இந் மாநாடு ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. சூரியசக்திப் பிரயோகம், காற்றுச் சக்தி, ஐதரசன் எரிபொருள் மற்றும் சேமிப்பு, சுகாதாரம், உயிர்ச்சக்திப் பிரயோகம் மற்றும் நவீன தொழிற்பாட்டுப் பதார்த்தங்கள் போன்றவையே அப் பெரும்பிரிவுகள் ஆகும். மொத்தமாக 300 ஆய்வாளர்கள் தங்களது இம்மாநாட்டிற்கான வருகையை உறுதிசெய்துள்ளனர். அவர்களில் 120 பேர் சர்வதேச ஆய்வாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மாநாட்டிற்கான ஆய்வுக் கட்டுரைகள் கோரப்பட்டதற்கமைய மொத்தமாகச் சமர்ப்பிக்கப்பட்ட 184 ஆய்வுக்கட்டுரைகளில் 140 ஆய்வுச் சுருக்கங்கள் மாநாட்டின் முதல் இரு நாட்களும் வாசிக்கப்படவுள்ளன.
இம்மாநாட்டில் முதலிரு நாட்களில் சிறப்புரைகளை உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் வருகைதரவுள்ள முன்னனணி ஆய்வாளர்கள் ஆற்றவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுதவிர, மாநாட்டின் மூன்றாம் நாள் நிகழ்வாக, யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் காற்றுச் சக்தி தொடர்பான ஆய்வுப் பட்டறையும் தூய சக்தித் தொழிநுட்பத்துறையோடு தொடர்பான தொழில் வல்லுனர்கள் மற்றும் பல்கலைக்கழக ஆய்வாளர்களுடனான ஒரு கலந்துரையாடலும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.

இம்மாநாட்டின் ஓர் அங்கமாக, தனியார் துறையின் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் பல செயற்பட்டறைகளும் கூட்டங்களும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன. இது தவிர, யாழ.; பல்கலைக்கழகமும் மேற்கு நோர்வே பல்கலைக்கழகமும் இணைந்து ஏனைய ஆய்வு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனமொன்றுடன் கூட்டு ஒப்பந்தமொன்றை இம்மாநாட்டின்போது கைச்சாத்திடவுள்ளதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கதொரு விடயமாகும். இதுதவிர, வடமாகாணப் பாடசாலை மாணவர்களின் விஞ்ஞான தொழிநுட்பதுறையிலான ஆர்வம் அவர்களின் சமீபகால பெறுபேறுகள் பற்றியதொரு கலந்துரையாடல் ஒன்றும் பெப்ரவரி 5ஆம் திகதி நடைபெறும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

No comments