பிரித்தானியாவில் கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகள் நினைவேந்தப்பட்டனர்

இமய நாட்டின் பெரும் துரோகத்தால் வங்க கடலில் வீர காவியமாகிய கேணல் கிட்டு உட்பட்ட பத்து வீர வேங்கைகளின் வீரவணக்க நிகழ்வு பிரித்தானியாவின் தென்மேற்கு லண்டனில் சட்டன் பகுதில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் மிகவும் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

இதில் பொதுச்சுடரை நடன ஆசிரியை திருமதி ராகினி ராஜகோபால் அவர்கள் ஏற்றி வைக்க அதனைத் தொடர்ந்து கேணல் கிட்டுவின் சகோதரர் காந்திதாசன் அவர்களால் தமிழீழ தேசியக்கொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஈகைச்சுடரினை கிருஷ்ணகுமார் கணேசரட்ணம் அவர்கள் ஏற்றி வைக்க, சிவா பொன்னம்பலம் அவர்களால் எம் காவிய நாயகனுக்கும், வீர மறவர்களுக்கும் மலர் மாலை அணிவிக்கப்பட்டு தொடர்ந்து மக்கள் வரிசைக் கிரமமாக வந்து மலர் வணக்கம் செய்தனர். பின் எம் இளம் சிறார்களினால் நாட்டிய, நடன கலை நிகழ்வுகளும் எம் வேங்கைகளைப் போற்றும் மாவீர கானங்களும் பாடப்பட்டன.

கேணல் கிட்டுவின் சகோதரர் அவர்களால் கிட்டு அண்ணாவின் வரலாறு சுமந்து சிறப்புரை ஆற்றப்பட்டு, நாட்டு பற்றாளர் கப்டன் பிறைசூடி அவர்களுக்கு அக வணக்கம் செலுத்தப்பட்டு, அன்னாரின் வரலாறுகளும் காந்திதாசன் அவர்களால் பகிரப்பட்டது. நிறைவாக, தேசியக்கொடி கையேந்தபட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற கானத்துடன் வீரவணக்க நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.No comments