பூஸா சிறையில் ரோஹிங்கியா புகலிடக்கோரிக்கையாளர்கள் ?


பூஸா சிறைச்சாலையிலுள்ள 50 சிறைக்கூடங்களில்; 30 சிறைக்கூடங்கள் பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரின் பொறுப்பில் தொடர்ந்துள்ளமை அம்பலமாகியுள்ளது.அங்கு வருடக்கணக்கில் புகலிட அந்தஸ்த்து கோரிய ரோஹிங்கியா புகலிடக்கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையும் அம்பலமாகியுள்ளது.

கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலரை பூஸா சிறைச்சாலைக்கு இடமாற்ற சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு மேற்கொண்டுள்ளத் தீர்மானத்துக்கு தடையேற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வெலிக்கடை, கொழும்பு சிறைச்சாலை, மெகசின் ஆகிய சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள  பிரபல பாதாளக் குழு கைதிகள் சிறைச்சாலையில் முன்னெடுத்த சில சட்டவிரோத நடவடிக்கைகளை கவனத்திற்கொண்டு இவர்களை  பூஸா சிறைக்கு மாற்றுவதற்கு இதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், பூஸா சிறைச்சாலையில் மேலதிகமாக 50 சிறைக்கூடங்கள் இருப்பதுடன், இதில் 30 சிறைக்கூடங்கள் பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரின் பொறுப்பில் உள்ளது. அத்துடன் அதில் ஒரு பகுதி ரோஹிங்கியா புகலிடக்கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

எனினும் குறித்த புகலிடக்கோரிக்கையாளர்களை பூஸா சிறையின் வேறொரு பகுதியில் தங்க வைக்குமாறும் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள 30 சிறைக்கூடங்களை சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு வழங்குமாறு பொலிஸ் திணைக்களத்தால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதும் அதற்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லையென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments