முதலில் நாடாளுமன்றமா? மாகாணசபையா?


நாடாளுமன்றத் தேர்தலை இந்த ஆண்டின் முற்பகுதியில் நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய பிரதான இரு அரசியல் கட்சிகளும் விரும்பியுள்ளதாகவும் அதற்கேற்ற முறையில் இலங்கை நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு நாடாளுமன்றத் தேர்தலை நடத்த ஏற்பாடுகள் இடம்பெறுவதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன. 

இதனிடையே வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் உள்ளிட்ட ஒன்பது மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக மற்றொரு தகவல்; கூறுகின்றது. 

மாகாண சபைத் தேர்தல்களை மேலும் ஒத்திவைப்பதற்கு ஏற்றவாறு அமைச்சரவையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி நாடாளுமன்ற அங்கீகாரத்தைப் பெறவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் நாடாளுமன்றத் தேர்தல் 2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தின் பின்னரே நடத்த முடியும். அல்லது இந்த ஆண்டின் இறுதியில் நடத்தலாம்.

ஆனாலும் ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர் நளின் பண்டார, ஜனாதிபதித் தேர்தல் முதலில் நடைபெறும் எனக் கூறியுள்ளார். எனினும் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விருப்பத்திற்கு அமைவாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன.


நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, மலையகத் தமிழ் கட்சிகள் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவுடன் சாதாரண பெரும்பான்மையோடு சுதந்திரக் கட்சியுடன் கூட்டுச் சேராமல் அரசாங்கத்தை அமைக்க முடியும் என ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி நம்புகின்றது.

அந்த நம்பிக்கைக்கு ஏற்றவாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழரசுக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

அதேபோன்று மகிந்த தரப்பு அணியும் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தினால் தமக்குச் சாதமாக அமையும் என நம்புகின்றது. ஆனால் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என மூன்றாவது அரசியல் சக்தியாக இருக்கும் ஜே.வி.பி. எதிர்பார்க்கின்றது.

எவ்வாறாயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதை விரும்புவதால், பிரேரணை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் இடம்பெறும் என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் உறுதியாகக் கூறுகின்றன.

அதேவேளை, வடக்கு கிழக்கு மாகாண சபைகளின் தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் விரும்பவில்லை.

மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்க வேண்டும் என்று சம்பந்தனிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றது.

புதிய அரசியல் யாப்புக்கான நகல் யோசனைகள் நாடாளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என சுமந்திரன் ஏலவே கூறியுள்ளார். ஆனாலும் ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் தற்போதைக்கு புதிய அரசியல் யாப்புக்கான யோசனைகள் முன்வைக்கப்படாது எனவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் கூட்டமைப்பு தேர்தலில் எதனை முன்வைத்து  களமிறங்குமென்ற கேள்வி எழுந்துள்ளது.

No comments