ருத்ரா முதல் ராகவன் வரையான ஈழத்தமிழரின் பதவிப் போர் - பனங்காட்டான்

கிழக்கு மாகாண சபைக்கு கிழக்கைச் சேர்ந்த ஒருவரை ஆளுனராக நியமிக்கலாமென்றால், வடக்கு மாகாண சபைக்கு வடமாகாணத்தைச் சேர்ந்த ஒருவரை ஏன் ஆளுனராக நியமிக்க முடியாது? ஏற்கனவே இரண்டு மாகாண சபைகளின் ஆளுனராகக் கடந்த மாதம் வரை பணிபுரிந்த மூத்த சிவில் அதிகாரியான கே.சி.லோகேஸ்வரனை ஜனாதிபதி ஏன் புறந்தள்ளினார்? இவர் வடமாகாணத்தைச் சேர்ந்தவர் என்பதுதான் இதற்கான காரணமா?

ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டம் கடந்த இரண்டு வாரங்களாக மாகாண சபைகளின் ஆளுனர்களின் நியமனம் என்ற விடயத்தில் திசை திரும்பியிருப்பதை அவதானிக்க முடிகிறது. ஷ

ஜனாதிபதியின் பணிப்புரைக்கிணங்க ஒன்பது மாகாண சபைகளின் ஆளுனர்களும் கடந்த மாத இறுதி நாளன்று பதவிகளிலிருந்து விலகும் கடிதங்களை ஒப்படைத்தபோது, புதிய நியமன விடயம் விஸ்வரூபம் எடுத்தது.

அரசியல்வாதிகள் பதவி விலகும் கடிதத்தை பதவியேற்கும்போதே ஒப்படைக்கும் கலாசாரம் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால் உருவாக்கப்பட்டது. இவரது ஆட்சிக்காலத்தில் இவரது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்கும்போதே பதவி விலகல் கடிதத்தை அவர் பெற்றுக் கொண்டார்.

இது ஒருவகை சர்வாதிகாரப் போக்காகவும், உறுப்பினர்களை அடிமைத்தனமாக்குவதாகவும் காணப்பட்டது. இந்த பயமுறுத்தல் கலாசாரம் இப்போதைய ஜனாதிபதி மைத்திரிவரை தொடர்கிறது.

கேட்கும்போது எவராவது பதவி விலகல் கடிதம் கொடுக்க மறுத்தால் என்ன நடைபெறும்? தூக்கி வீசப்படுவார்கள். பின்னர் அந்த அரசில் எந்தவிதமான உபகாரப் பதவியும் அவருக்குக் கிடைக்காது.

வடமாகாண சபை உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து ஆளுனர்களாகவிருந்தவர்கள் இராணுவ அதிகாரி, ஓய்வு பெற்ற அரசாங்க அதிகாரி, பந்தக்கார அரசியல் கலந்த எடுபிடி எனவிருந்தது.

வடமாகாண சபையின் ஆயுட்காலம் அக்டோபரில் முடிந்த பின்னர் ஆளுனர் றெஜினோல்ட் கூரேயின் நிர்வாகம் தலைதூக்கியது. தமக்கு விரும்பியவர்களுக்கு நியமனம் கொடுத்து அருகிருத்தினார். சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது.

'இனித்தான் இங்குள்ள தமிழருக்கு விடிவுகாலம். நாங்கள் செய்யப்போவதைப் பாருங்கள்" என்று கடந்த காலங்களில் இயக்கங்களுடன் ஓடி விளையாடியவர்கள் அங்கு கூறியது வெளிநாடு வாழ் தமிழருக்கும் கேட்டது.

இதனாற்தானோ என்னவோ றெஜினோல்ட் கூரேயே மீண்டும் ஆளுனராக வேண்டுமென வடக்கின் சில முடுக்குகளில் சுலோக அட்டைப் போராட்டங்கள் நடத்தப்பட்டது. இவையொன்றும் ஜனாதிபதி மைத்திரியை அசைக்கவில்லை.

முன்பின் பெரிதளவில் சமூகத்தில் அறியப்படாத, அரசியலில் மூடு பனியாகச் செயற்பட்ட கலாநிதி சுரேன் ராகவனை வடக்கின் ஆளுனராக மைத்திரி நியமித்தார்.

இவர் பதவியேற்பதற்கு யாழ்ப்பாணத்தில் காலடி வைத்தபோது, மீண்டும் கூரே வேண்டுமென்று அட்டை தூக்கி நின்ற சிலர், இவரை வரவேற்கக் காத்திருந்த படங்களை ஊடகங்களில் பார்த்தபோது சிரிப்புதான் வந்தது.

அரசியல் என்றால் இதுதான்! நேற்று அங்கே, இன்று இங்கே, நாளை எங்கோ?

சுரேன் ராகவன் மும்மொழிகளிலும் பேசக்கூடியவராம். (சிங்களவரான றெஜினோ கூரேயும் அப்படித்தான்). ஆனால் ராகவன் பௌத்தம் சம்பந்தமான பல ஆய்வுநூல்களை எழுதி சிங்கள பௌத்த தேசியவாதிகளிடம் மதிப்புப் பெற்றவர்.

தமிழரின் இரத்தம் சுத்தமானதல்ல. சிங்கள இராணுவத்தின் இரத்தமும் கலந்தது என்று சொல்லி மார்பு தட்டிய கூரே, இப்போது இரத்தினக்கல்லில் தமிழ் மண் இருக்கிறதா, சிங்கள மண் இருக்கிறதா என்று உரசிப் பார்க்கும் இரத்தினக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமனமாகியுள்ளார்.

அவரை விடுவோம். நாம் விடயத்துக்கு வருவோம். வடக்குக்கு ஒரு தமிழர் ஆளுனராக வேண்டுமென்ற குரலுக்கு மைத்திரி மதிப்புக் கொடுத்து ஒரு தமிழரை நியமித்துவிட்டாரென்று சிலர் தங்கள் முதுகைத் தாங்களே தட்டி மகிழ்ச்சி கொள்ளலாம்.

ஆனால் மைத்திரி ஒரு கல்லில் பல மாங்காய்களை விழுத்தியுள்ளார்.

ராகவனின் நியமனத்துக்கு முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் எச்சரிக்கை கலந்த வரவேற்பு அறிக்கையை விட்டுள்ளார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வித்தியாசமாக வேறு கோணத்தில்  கடுப்பாக ஓர் அறிக்கையை விட்டுள்ளார்.

தமிழர்களின் தலைமை என்று கூறப்படும் கூட்டமைப்பு எந்த அறிக்கையும் விடாது அசாதாரண மௌனம் காக்கிறது. ஆனால், ஆளுனர் ராகவன் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனைச் சந்தித்து உரையாடியுள்ளார். அங்கு சுமந்திரனும் அருகிருந்தார்.

ஆனால், ராகவனைத் தமக்கு நன்கு தெரியும் என்றோ, நான்கு தசாப்த கால நண்பர் என்றோ சுமந்திரன் இதுவரை எங்கும் தெரியப்படுத்தவில்லை.

'கட்சி ரீதியாக ஆதரிக்க முடியாது, நட்பு ரீதியாக எதிர்க்க முடியாது" என்ற இடிபாட்டு நிலை சுமந்திரனுக்கு. எதனைச் செய்தாலும் முள்ளில் சேலை சிக்கிய கதைதான்.

சுரேன் ராகவன் என்பவர் தமிழர் என்பதால் தமது விருப்பப்படி எதனையும் செய்ய முடியுமா என்ற கேள்விக்கு பதில் என்னவென்பது எல்லோருக்கும் தெரியும்.

கடிவாளம் தமது கைகளுக்குள் இருக்க வேண்டுமென்பதற்காகவே தமது சொற்கேட்டு நடக்கக்கூடிய ஒருவரை வடக்கின் ஆளுனராக மைத்திரி நியமித்துள்ளார்.

இந்த நியமனத்தை இதுவரை ரணில் அல்லது மகிந்த ராஜபக்சகூட எதிர்க்கவில்லையென்றால், மொத்தத்தில் சம்பந்தன் உட்பட சகல அரசியல் தலைவர்களும் இதனை ஏற்று விட்டனரென்றே கொள்ள வேண்டும்.

சர்வதேச சமூகத்துக்கு ஒரு செய்தி சொல்லப்பட்டாகிவிட்டது. அது, சகலராலும் ஏக ஆதரவு பெற்ற தமிழர் ஒருவரை ஜனாதிபதி வடக்கின் ஆளுனராக நியமித்துவிட்டாரென்பதே.

மார்ச் மாத ஜெனிவா அமர்வில் இது முக்கியமான அரச ஆதரவு விடயமாக முன்வைக்கப்படும்.

அக்டோபர் 26 புரட்சியின் 52 நாட்களின் பின்னர், புதிய அரசாங்கத்தில் ஜனாதிபதி மைத்திரி தேசிய ஒருமைப்பாடு, வடக்கின் அபிவிருத்தி, புனரமைப்பு, புனர் நிர்மாணம் உட்பட ஏழு அமைச்சுகளை தாம் எடுத்துக் கொண்டார். இவற்றின் செயலாளராக வேலாயுதர் சிவஞானசோதி என்ற மூத்த சிவில் சேவை அதிகாரி நியமனமானார்.

ஏற்கனவே பல அமைச்சுகளின் செயலாளராக இருந்த இவரின் புதிய நியமனத்தை சில ஊடகங்கள் திட்டமிட்டு அளவுக்கதிகமான எதிர்பார்ப்பை மக்கள் மனதில் ஏற்படுத்தும் வகையில் செய்தியாக வெளியிட்டன.

ஜனாதிபதியின் கீழான இந்த அமைச்சுகளுக்கு ஒரு தமிழர் நியமனமானதால் இனிமேல் தமிழருக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது என்பதான தோற்றத்தை இந்தச் செய்திகள் காட்டின.

இதனை நோக்கும்போது 1983 யூலையில் தமிழர்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பாரிய இனப்படுகொலை வேளையில் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன திருவாய் மலர்ந்தருளிய கருத்தொன்று நினைவுக்கு வருகிறது. அது இதுதான்:

'எனது அரசாங்கத்தின் பொலிஸ் மாஅதிபராக இருக்கும் ருத்ரா ராஜசிங்கம் ஒரு தமிழர். எனது அரசாங்கத்தின் சட்ட மாஅதிபராகவிருக்கும் சிவா பசுபதி ஒரு தமிழர். இப்போதைய பிரதம நீதியரசரான சு. சர்வானந்தா ஒரு தமிழர். இவ்வாறு சட்டம் ஒழுங்கு நீதித்துறை ஆகிய மூன்றிலும் தமிழர் தலைமையில் இருக்கும்போது எனது அரசாங்கம் எவ்வாறு தமிழருக்கெதிராக வன்செயல் புரிய முடியும்" என்று எவரும் எளிதில் நம்பக்கூடிய விதத்தில் தர்க்க ரீதியாக தமது வாதத்தை ஜெயவர்த்தன வைத்தார்.

இங்கு எழும் முக்கியமான கேள்வி ஒன்று, மேற்சொல்லப்பட்ட மூவரும் தமிழராக இருந்ததால் அவர்கள் அரசாங்க முடிவை மீறியோ, ஜனாதிபதியின் உத்தரவை மீறியோ எதனையாவது செய்ய முடிந்ததா? அவ்வாறு முடிந்திருக்குமானால் முதல் நாள் இரவே இனவழிப்பு நிறுத்தப்பட்டிருக்க வேண்டுமே!

மீண்டும் ராகவனின் நியமன விடயத்துக்கு வருவோம். தமிழர் ஒருவரை வடமாகாணத்தின் ஆளுனராக நியமிக்கும் விடயத்தில் ஜனாதிபதி நேர்மையாக நடந்து கொள்ளவில்லையென்பதே இங்கு நாம் வைக்கும் வாதம்.

கடந்த மாத இறுதியில் ஆளுனர் பதவியைத் துறந்த ஒன்பது பேரில் ஒருவரான கே.சி. லோகேஸ்வரனுக்கு என்ன நடந்தது? அவர் இப்பொழுது எங்கே?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும், எட்டாண்டுகள் வவுனியாவின் அரசாங்க அதிபராகவும், அதன் பின்னர் கொழும்பில் பல அமைச்சுகளின் செயலாளராகவும், அடுத்து வெளிநாடுகளில் இலங்கைத் தூதுவராகவும் பணியாற்றிய லோகேஸ்வரன் இறுதியில் மேல்மாகாணசபை மற்றும் வடமேல் மாகாண சபைகளின் ஆளுனராக பணி புரிந்தவர். கடந்த மாதம் ஜனாதிபதியின் பணிப்புக்கிணங்க பதவியைத் துறந்தவர்களில் இவரும் ஒருவர்.

அரச சேவையில் பன்முகப் பணிகளாற்றிய அனுபவசாலியான கே.சி. லோகேஸ்வரனை வடமாகாணசபை ஆளுனராக மைத்திரி நியமிக்க விரும்பாத காரணம் என்ன?

கிழக்கு மாகாண சபைக்கு கிழக்கைச் சேர்ந்த ஒருவரை ஆளுனராக நியமிக்கலாமென்றால், வட மாகாண சபைக்கு வடக்கைச் சேர்ந்த லோகேஸ்வரனை ஏன் நியமித்திருக்கக்கூடாது?

இவர் யாழ்ப்பாணத் தமிழர் என்பதால் புறக்கணிக்கப்பட்டாரா? அல்லது, சிங்கள அரச பீடத்தின் கைப்பொம்மையாக இயங்க மாட்டாரென்பதால் புறக்கணிக்கப்பட்டாரா? அல்லது ரணிலை ஆதரித்த கூட்டமைப்பை பழிவாங்க வேண்டுமென்பதற்காகப் புறக்கணிக்கப்பட்டாரா?

இதற்கான விடையை ஆத்மசுத்தியாகக் கண்டுபிடிக்க வேண்டியது கூட்டமைப்பின் பொறுப்பு வாய்ந்த கடமை.

No comments