வனவளத்திணைக்கள அதிகாரிகள் விசாரணையில்!


கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் 1990ஆம் ஆண்டு மக்களுக்கு வழங்கப்பட்ட சுமார் 548 ஏக்கர் விவசாய மற்றும் குடியிருப்பு காணிகளுக்குள் அம்மக்களை செல்ல விடாது வனவளத் திணைக்களத்தினர் தடுத்தமை தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் இன்று (29) விசாரணை இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் 1990ஆம் ஆண்டு மக்களுக்கு வழங்கப்பட்ட சுமார் 548 ஏக்கர் விவசாய மற்றும் குடியிருப்பு காணிகளை வனவளத் திணைக்களம் வனப்பகுதி என அடையாளப்படுத்தி காணிகளுக்குள் மக்கள் செல்வதை தடுத்துள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள காணி உரிமையாளர்களால் மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய காணித் திணைக்களம் மற்றும் வனவளத்திணைக்கள அதிகாரிகளும் இன்று (29) விசாரணைக்காக மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்தக் காணிகளில் மக்கள் ஆரம்பத்தில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோதும் அது பெரிய அளவில் வெற்றியளிக்கவில்லை. இந்நிலையில் தொடர்ந்து வந்த யுத்த நிலைமைகள் அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்குச் சென்றதுடன் இந்தியாவுக்கும் இடம்பெயர்ந்து சென்றிருந்தனர்.

மீண்டும் 2010 ஆம் ஆண்டு மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்பி தமது காணிகளை துப்புரவு செய்த போது அப்பகுதியில் கண்ணிவெடிகள் அகற்றப்படாமல் இருப்பதாக கூறிய இராணுவம் மக்களை தடுத்தது.

மீண்டும் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு 2017 ஆம் ஆண்டு காணிகள் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிலையில் அங்கு வந்த வனவளத் திணைக்களம் குறித்த பகுதி தமது ஆளுகைக்குட்பட்ட வனப்பகுதி என கூறியதுடன் மக்களை தமது காணிகளுக்குள் போகவிடாது தடுத்தனர்.

இந்நிலையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தமது காணிகளை எம்மிடம் பெற்று கொடுக்குமாறு கேட்டு மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்..

No comments