கதிரை கிடைக்கவில்லை:வெளியே போன முன்னாள் அமைச்சர்?


எதிர்பார்த்த பதவி கிட்டாமையினாலேயே முன்னாள் வடமாகாண அமைச்சர் பொ.ஜங்கரநேசன் வெளியே சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனினும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருடனான நட்பு காரணமாகவே தனக்கு பதவிகள் வழங்கப்படவில்லையென்ற பிரச்சாரத்தில் பொ.ஜங்கரநேசன் குதித்திருப்பது முன்னாள் முதலமைச்சரிற்கு கவலையினை தோற்றுவித்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
முன்னாள் முதலமைச்சருடன் நெருங்கிய உறவை பேணி வந்திருந்த பொ.ஜங்கரநேசன் தனக்கு கட்சியில் பிரதி செயலாளர் பதவியை வலியுறுத்தி வந்திருந்தார்.

எனினும் ஊழல் குற்றச்சாட்டுக்களிற்குள்ளான அவரை இணைத்து பதவி வழங்குவது தொடர்பில் முன்னாள் முதலமைச்சரிற்கு பலரும் ஆலோசனை வழங்கியதுடன் ஊழல் குற்றச்சாட்டுக்களை தூக்கி பிடிக்கலாமென எச்சரிக்கப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாகவே கடைசி நேரத்தில் அப்பதவி பேராசிரியர் சிவநாதனின் கைக்கு சென்றிருந்ததாக சொல்லப்படுகின்றது. 

இதனிடையே தமிழ்த் தேசியக் கூட்டணியை பிளவுபடுத்தும் நோக்கம் தனக்குக் கிடையாது என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்.னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 “எந்தக் கட்சிகளையும் பிளவு படுத்துவது எமது நோக்கமல்ல. தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பை உடைக்க நான் கட்சி தொடங்கவில்லை.

தமிழ் அரசுக் கட்சிக்கு தொந்தரவு கொடுக்காமலேயே நான் செயற்பட்டு வருகிறேன்.

தமிழ் மக்கள் கூட்டணியில் எப்போதும் ஜனநாயகம் இருக்கும் . எனது கட்சியில் உள்ளவர்கள், கட்சியின் செயலாளர் ஆகிய என்னை,  கட்சியில் இருந்து விலகுமாறு கேட்டால் கூட, நான் கட்சியை விட்டு சென்று விடுவேன்.

நிர்வாக உறுப்பினர்களை நான்தான் நியமித்துள்ளேன். என்னை வேண்டாம் என்றால் கூட, நான் கட்சியை விட்டுச் செல்வேன். அந்தளவுக்கு ஜனநாயக யாப்பினையே நாம் தயாரித்துள்ளோம்.

நாங்கள் கொள்கை ரீதியாகச் செல்பவர்கள். எம்முடன் சேர வருபவர்கள வந்தால் அவர்களை அடையாளம் கண்டு சேர்த்துக் கொள்வோம்.

தமிழ் மக்கள் பேரவையில் உள்ள பலர் எமது ஆலோசனைக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர். ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக உள்ளவர்கள் எந்தக் காலத்திலும் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள்.

ஆனால் செயலாளர் ஆகிய நான் மட்டும் தேர்தலில் போட்டியிடுவேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை உடைக்க வேண்டிய அவசியமில்லை. கூட்டமைப்பின் கொள்கைகள் என்ன என கூறினால், அவர்களுக்கு மக்கள் தொடர்ந்தும் ஆதரவு கொடுப்பார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ள புளொட்டை எமது கூட்டணியில் சேர்த்துக் கொள்ளப் போவதில்லை. புளொட் ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளது.

கூட்டமைப்பில் இருந்து ஏற்கனவே விலகியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈபிஆர்எல்எவ் போன்ற கட்சிகளை எம்முடன் இணைத்துக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments