மைத்திரிக்கு எதிராக முள்ளிவளையில் மக்கள் போர்க்கொடி!


நல்லாட்சி அரசின்  ஜனாதிபதி மற்றும் பிரதமரது வடக்கிற்கான விஜயம் இனி வருங்காலங்களில் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கப்போவதில்லையென அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

காணி விடுவிப்பு, காணாமல் போனோர் விவகாரம், பௌத்த மயமாக்கல் என பல பிரச்சினைகள் தொடர்பில் அரசு மீது தமிழ் மக்கள் சீற்றங்கொண்டுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாகவே முல்லைதீவிற்கு வருகை தரும் மைத்திரிக்கெதிராக மக்கள் போர்க்கொடியை தூக்கியுள்ளனர்.

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வார நிகழ்வுகளை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று முல்லைத்தீவு, முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

ஜனவரி 21ஆம் நாள் தொடக்கம், 28ஆம் நாள் வரை தேசிய போதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் இன்று நடைபெறவுள்ள இது தொடர்பான ஆரம்ப நிகழ்வில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவுள்ளார்.

இந்த நிகழ்வில் பங்கேற்க வரும் சிறிலங்கா அதிபருக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முள்ளியவளையில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

கேப்பாப்பிலவில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் நடத்தி வரும் மக்களும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளும்,  இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

No comments