தோற்கடித்ததற்காக பழிவாங்கவேண்டாம் - சுமந்திரன்

“நாட்டில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் சூழ்ச்சியைத் தோற்கடித்தமைக்காகத் தமிழர்களை ஒருபோதும் பழிவாங்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடந்துகொள்ளக் கூடாது. புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் முற்போக்கானவர்களான தயாசிறி ஜயசேகரவும் டிலான் பெரேராவும் தலைமை தாங்கவேண்டும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

வடமராட்சி கிழக்கு இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, மருதங்கேணி பிரதேச செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

‘நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் அவசரத்தால், தமிழர்கள் நியாயமான அதிகாரப் பகிர்வை இழக்கநேரிடும்’ என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச் செயலர் தயாசிறி ஜயசேரக தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில், மருதங்கேணி பிரதேச செயலகத்தில் நடந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உரையாற்றியிருந்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

எரிச்சலின் விளைவு

நாட்டில் ஜனநாயக மீறல் இடம்பெற்றபோது, ஜனநாயகத்தைப் பாதுகாக்கின்ற பொறுப்பு பிரதான எதிர்க்கட்சியாக இருந்த கூட்டமைப்பின் தலையில் சுமத்தப்பட்டிருந்தது. அதனை நாங்கள் பொறுப்புடன் நிறைவேற்றியிருக்கின்றோம்.

அதை நாங்கள் நிறைவேற்றிய காரணத்தால் சிலருக்கு கசப்பு ஏற்பட்டிருக்கின்றது. தவறான வழியில் பதவிகளைக் கைப்பற்ற முனைந்தவர்கள், ஜனநாய விரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அதிகாரத்தில் நிலைத்திருக்க விரும்பியவர்கள் ஆகியோர் நீதிமன்றங்கள் ஊடாக அவர்கள் தடுக்கப்பட்டார்கள்.

அதன் காரணமாக அவர்களுக்கு எரிச்சல் ஏற்பட்டிருக்கின்றது. மனஉளைச்சல் ஏற்பட்டிருக்கின்றது.

அந்த மன உளைச்சலின் வெளிப்பாடுகளை அண்மைய நாட்களாக ஊடகங்களில் காணக் கூடியதாக இருக்கின்றன.

விதிமுறைகள் மீறப்பட்டபோது தட்டிக்கேட்டதுதான் என் மீது சிங்கள அரசியல்வாதிகள் விமர்சனங்களை முன்வைக்கக் காரணம்.

தவறாகச் செயற்பட்டவர்களால் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதுதான் அதற்கான காரணம்.

அவர்கள் சொல்வதற்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. எதையாவது பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் - என்றார்

No comments