ஒற்றையாட்சிக்கு மக்கள் வாக்களிப்பர் - சம்பந்தன் நம்பிக்கை

இலங்கை வந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரும் ஐரோப்பிய பாராளுமன்றின் இலங்கை நட்பு குழுவின் உறுப்பினருமான ஜெப்ரி வான் ஓர்டன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை நேற்று கொழும்பில் சந்தித்தார்.

நாட்டில் நிலவும் அரசியல் நிலைமை தொடர்பில் உறுப்பினரை தெளிவுபடுத்திய இரா.சம்பந்தன், அரசியலமைப்பு சபையின் மீள் நியமனத்தின் முக்கியத்துவத்தினை சுட்டிக் காட்டிய அதேவேளை இந்த அரசியலமைப்பு சபையின் மீள் நியமனத்தினால் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை பேணப்பட்டுள்ளமையானது கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களில் மூலம் நிரூபணமாகியுள்ளமையையும் எடுத்துக்காட்டினார்.

மேலும் பதிலளித்த இரா.சம்பந்தன்,

புதிய அரசியல் யாப்பானது நாடு ஒருமித்ததாகவும் பிரிக்கப்பட முடியாததாகவும் இருப்பதனை உறுதி செய்யும் ஒன்றாக அமையும் அதே சந்தர்ப்பத்தில் மக்களும் பிராந்திய/ மாகாண அரசாங்கங்களும் தமது வாழ்வில் தொடர்புடைய அன்றாட விடயங்கள் தொடர்பில் அதிகாரங்களை பயன்படுத்தும் வகையிலான நேர்மையான ஒரு அதிகாரப் பகிர்வினையும் கொண்டிருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும் ஒரு புதிய அரசியல் யாப்பு கொண்டு வரப்படுகின்ற போது அது நியாயமானதொன்றாக இருக்கும் பட்சத்தில் அதற்கு எமது மக்கள் தமது ஆதரவினை கொடுப்பார்கள் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்தார்.

கடந்த முப்பது வருடங்களாக பல்வேறு கருமங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன தற்போது ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இதனை நாட்டின் நன்மை கருதி நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் இரா. சம்பந்தன் தெரிவித்தார். மேலும் நான் நியாயமாக நம்பிக்கை கொண்டுள்ளேன். ஏனெனில் இது எனது நாடு இந்த நாடு செழிப்படைய வேண்டும் என்பது எனது விருப்பம் எனவே என்னால் நம்பிக்கையற்றவனாக இருக்க முடியாது எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்தார்.



No comments