பொலிஸில் தஞ்சமடைந்தவர் மீது பொலிஸ் நிலையத்தில் புகுந்து தாக்குதல்


கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்குள் தஞ்சமடைந்த மனைவியின் தந்தை மீது அங்கு புகுந்து தாக்குதல் மேற்கொண்ட இளம் குடும்பத்தலைவரை பாதுகாக்கும் வகையில் அவரைத் தப்பிக்கவிட்ட பொலிஸாரின் நடவடிக்கை இன்று இடம்பெற்றது. எனினும் அது தொடர்பில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு முறைப்பாட்டாளரின் உறவினர்கள் கொண்டு சென்றதை அடுத்து சந்தேகநபரை பொலிஸார் கைது செய்தனர்.

தாக்குதலாளியின் வீடு கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அண்மையாகவே உள்ளது.

கோப்பாய் தெற்கை சேர்ந்த இளம் குடும்பத்தலைவர் ஒருவர் தனது மாமனாருக்கு (மனைவியின் தந்தை) அடித்து அவரது தலையில் காயத்தை ஏற்படுத்தி உள்ளார்.

அதனால் காயங்களுக்கு இலக்கானவர் தாக்குதலாளியிடமிருந்து, தப்பித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார். அதன்போது தாக்குதலாளி, தனது மோட்டார் சைக்கிளில் கொட்டனுடன் வந்து, பொலிஸ் நிலையத்தினுள் புகுந்தும் தாக்குதல் மேற்கொள்ள முயன்றுள்ளார்.


அவ்வேளை தாக்குதலுக்கு இலக்கானவர் மற்றும் அவரது உறவினர்கள் தாக்குதலாளியை கைது செய்யுமாறு கோரினர். எனினும் பொலிஸார் அசமந்தமாக நடந்து கொண்டதால் தாக்குதலாளி பொலிஸ் நிலையத்தில் இருந்த கதிரைகளைத் தள்ளி விழுத்தி அங்கு அட்டகாசம் செய்துவிட்டு பொலிஸ் நிலையத்தினுள் ஓடி, அங்கிருந்து பொலிஸாரின் விடுதிகளுக்கு ஊடாக தப்பித்துள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கானவர் மற்றும் அவரது உறவினர்கள் பொலிஸாரிடம் தாக்குதலாளியை கைது செய்யுமாறு கோரிய போது, அவர் தப்பி சென்று விட்டார் என பொலிஸார் பதிலளித்துவிட்டு அசமந்தமாக இருந்துவிட்டனர்.

தப்பியோடியவர் தனது வீட்டுக்குதான் தப்பி சென்றுள்ளார். எனவே அங்கே சென்று கைது செய்யுமாறு கோரிய போது, அவரது வீட்டில் நாய்கள் நிற்கின்றன. அதனால் உடனடியாக கைது செய்ய முடியாது என பொலிஸார் கூறியுள்ளானர் .

அதேவேளை தாக்குதாளி கொண்டு வந்த மோட்டார் சைக்கிளை பொலிஸ் நிலையத்தில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வெளியே எடுத்து சென்று ,ஒரு மணித்தியாலத்தின் பின்னர் மீண்டும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து , உடனடியாக குற்றஞ்சாட்டப்பட்டவரைக் கைது செய்யுமாறு பொறுப்பதிகாரி தமது உத்தியோகத்தர்களுக்குப் பணித்தார். அதனை அடுத்து குற்றஞ்சாட்டப்பட்டவரின் வீட்டுக்கு சென்ற பொலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.

தாக்குதலுக்கு பயன்படுத்திய கொட்டன் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டவர் கொண்டு வந்த மோட்டார் சைக்கிள் என்பவற்றை சான்று பொருள்களாக நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா ? என உறவினர்கள் பொலிஸாரிடம் வினாவிய போது , கொட்டனை மாத்திரமே சான்று பொருளாக மன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுப்போம் எனவும் , சந்தேகநபர் வந்த மோட்டார் சைக்கிளை சான்று பொருளாக ஒப்படைக்க மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.

தற்போது மோட்டார் சைக்கிள் பொலிஸ் நிலையத்தில பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை தாக்குதலுக்கு இலக்கானவர் கோப்பாய் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குற்றஞ்சாட்டப்பட்ட இளம் குடும்பத்தலைவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலருக்கும் இடையில் நல்லுறவு காணப்படுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது.

இதேவேளை குறித்த சந்தேகநபரால் அவரது வீட்டுக்கு அருகில் உள்ளவர்களும் பல்வேறு சந்தப்பர்களில் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளனர். அவை தொடர்பிலும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும், அவைகள் இரு தரப்பின் சம்மதத்துடன் முறைப்பாடுகள் முடிவுறுத்தப்பட்டு உள்ளன.
அயலவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை என பொலிஸாரிடம் கேட்ட போது , தாக்குதலாளி மன நோய்க்கு உள்ளாகி உள்ளத்தால் அவ்வாறு சிறு சிறு தாக்குதலை மேற்கொள்வார் எனவும் , அதன் பின்னர் முறைப்பாட்டாளர்கள் சமரசமாக செல்ல விரும்புவதனால் தாம் நீதிமன்றில் வழக்கு தொடரவில்லை எனப் பதிலளித்தனர்.

No comments