எனது அரசியல் அறிவு பூச்சியம்:சித்தார்த்தன் சந்தேகம்!


ஒற்றையாட்சியின் அடிப்படையிலான ஒற்றையாட்சித்தீர்வை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுள் ஒன்றான தமிழீழ மக்கள் விடுதலைக்கழக தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மீண்டும் தெரிவித்துள்ளார்.

இன்றைய சூழ்நிலையிலே பல்வேறு குழப்பகரமான நிலைமைகள் இருக்கின்ற போது தமிழர்களுக்கு தீர்வு வருமென்று நான் எதிர்பார்த்தால் என்னுடைய அரசியல் அறிவு பூச்சியமென்றே நினைப்பேன். ஏனென்றால் தென்னிலங்கையில் இன்று இருக்கக் கூடிய சூழ்நிலை அல்லது அரசியல் குழப்பங்களால் ஒரு சரியான தீர்வை நோக்கி நாங்கள் பயணிக்க முடியுமென்று நான் நம்பவில்லை” எனவும் அவர் திருவாய் மலர்ந்துள்ளார்.

“தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடியதான தீர்வொன்றைத் கொடுப்பதற்கு தெற்கிலுள்ள கட்சிகள் தயாராக இல்லை. தமிழர்களுக்கு தீர்வைக் கொடுத்தால் தமது கட்சி தேர்தல்களில் தோல்வியைச் சந்திக்கும் என்ற அச்சம் நிறைந்த எண்ணமே அவர்களிடத்தே மேலோங்கியிருக்கின்றது.
அதன் வெளிப்பாடே ஐக்கிய தேசியக் கட்சியின் அண்மைய கருத்துக்களும் ஆகும். அது மட்டுமல்லாமல் இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடியில் தீர்வைக் காண முடியுமென்றும் நாங்கள் நம்பவில்லை. அதற்காக அந்த முயற்சிகளைக் கைவிட முடியாது என்பதால் தொடர்ந்தும் அந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றோம்.

அதேநேரம் ஒருமித்த நாடு என்ற அடிப்படையிலேயே அப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போது, இல்லை அது ஒற்றையாட்சி அடிப்படையில் தான் என்று ஐக்கிய தேசியக் கட்சி கூறி வருவதால் எவ்வாறான தீர்வாக அது அமையப் போகிறது என தெரியாது. ஆனாலும் எது எப்படி இருந்தாலும் ஒற்றையாட்சியின் அடிப்படையிலான ஒற்றையாட்சித் தீர்வை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பதே எங்களது நிலைப்பாடாக இருக்கின்றது.

ஆகையினால் ஐக்கிய தேசியக் கட்சியினரின் கருத்துக்கள் தொடர்பில் அவர்களின் உண்மையான நிலைப்பாடுகளை அறிவதுக்காக நாங்கள் அவர்களுடன் பேச உள்ளோம். அதன் பின்னர் நாங்கள் கூட்டமைப்பாக கூடி ஆராய்ந்து எமது முடிவுகளை வெளிப்படுத்துவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments