புத்தர்சிலை விவகாரம்-தொல்லியல் திணைக்களப் பணிப்பாளருக்கு அழைப்பாணை!

முல்லைத்தீவு நாயாறு நீராவியடிப்பிள்ளையார் கோவில் வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த புத்தர்சிலை, விவகாரம் தொடர்பில் இன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்றுள்ள நிலையில் குறித்த பகுதியில் எவரும் நிர்மாணப் பணிகள் எதனையும் மேற்கொள்ளக்கூடாது என நீதிமன்றம் தடை விதித்துள்ளது.


நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், நேற்றைய தினம், காவல்துறை மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் உதவியுடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு பிரதேச மக்களை மாத்திரமின்றி ஒட்டமொத்த தமிழ் மக்களையும் பெரும் கவலைக்கும் அதிருப்திக்கும் உள்ளாக்கியிருந்த நிலையிலேயே முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இவ் விடயம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.

கடந்த 14 ஆம் திகதி அப்பகுதித் தமிழ் மக்கள் பொங்கல் வழிபாடுகளுக்காக சென்றவேளை அப்பகுதியில் குடியிருக்கும் பௌத்த துறவிக்கும் மக்களுக்குமிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலை தொடர்பாக முல்லைத்தீவு காவல்துறையிளர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

22ஆம் திகதி இடம்பெற்ற வழக்கில், புத்தர் சிலை அமைக்கப்பட்டது சட்டவிரோதமானது என்பது, தகவல் அறியும் சட்டத்தின் பிரகாரம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கிராம மக்களின் சார்பில் முன்னிலையானவர்களினால் வெளிப்படுத்தப்பட்டதனையடுத்து எதிர்வரும் 29 ஆம் திகதி வழக்கிற்கு வருமாறு முரண்பாடுகளில் ஈடுபட்டவர்களுக்கு நீதிமன்றம் அழைப்புவிடுத்திருந்தது.

எனினும் அவசர நிலையொன்றினை உணர்ந்து, ஆலய நிர்வாகத்தினர் மற்றும், தமிழர் மரபுரிமைப் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான வி.நவநீதன் ஆகியோர் மேற்கொண்ட நகர்த்தல் பத்திரம் ஒன்றின்மூலம் அது தொடர்பான வழக்கு இன்றைய தினம் நடைபெற்றது.

இன்றைய தினம், சடடவிரோதமாக விகாரை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் பிக்கு தரப்பினரும், நீராவியடிப் பிள்ளையார் ஆலயத் தரப்பினரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில் இருதரப்பினர்மீதும் விசாரணைகள் இடம்பெற்றது.

குறித்த பகுதி வர்த்தமானி மூலம் பௌத்த விகாரை அமைப்பதற்கான இடமாக அடையாளம் காணப்பட்டதாக பிக்கு தரப்பினர் தெரிவித்தனர்.

எனினும் விகாரை அமைப்பதற்கு அனுமதிக்கப்பட்ட இடம் செட்டிமலை என்றும், செட்டிமலைக் கிராமம் என்றும் செட்டிமலை கிராமசேவகர் பிரிவு என்றும் குறித்த கடிதத்தில் காணப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நீராவியடிப் பிள்ளையார் ஆலய தரப்பினர் கடுமையான ஆட்சேபனை தெரிவித்தனர்.

தொல்லியல் திணைக்களத்தின் கடித்தில் குறிப்பிடப்பட்ட இடம் அதுவல்ல என்றும் அவ்வாறான இடம் ஒன்று இல்லை என்றும் குற்றம் சுமத்தப்பட்டது.

 இதனையடுத்து தொல்லியல் திணைக்களப் பணிப்பாளரை எதிர்வரும் பெப்ரவரி 12ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

No comments