ரணிலின் அமைச்சர்களுக்கு தலையிடி கொடுக்கும் மைத்திரியின் உத்தரவு

அமைச்சர்களினால் மேற்கொள்ளப்படும் அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களின் நியமனங்கள் தொடர்பாக பரிசீலிப்பதற்காக, தனது செயலர் உதய செனிவிரத்ன தலைமையிலான குழுவொன்றை சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.

இதன் மூலம் ஐதேக அரசாங்கத்துக்கு எதிராக சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய முனையில் போர் ஒன்றை தொடுத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியின் செயலர் உதய செனிவிரத்ன தலைமையிலான குழுவின்  பரிந்துரைகளுக்குப் பின்னரே, அரச நிறுவனங்களின் தலைவர் பதவிகளுக்கான நியமனங்களை அறிவிக்குமாறு,  அனைத்து அமைச்சுக்களின் செயலர்களுக்கும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தமக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என்று, அமைச்சு ஒன்றின் செயலர் உறுதிப்படுத்தியுள்ளார்.

தமது அமைச்சரினால் நியமிக்கப்பட்ட அரச நிறுவனத் தலைவர்கள் தொடர்பான பட்டியலை சிறிலங்கா அதிபர் செயலகத்துக்கு தாம் அனுப்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை அமைச்சர்கள் மத்தியில்  தீவிரமான கவலையை ஏற்படுத்தியுள்ளது. அரச நிறுவனங்களுக்கான தலைவர்களை நியமிக்கும் அதிகாரம் தமக்குக் கீழ் வருகிறது என்றும், அதில் ஜனாதிபதி தலையீடு செய்ய முனைவதாகவும், அவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

அமைச்சரவை உறுப்பினர்களின் சிறகை வெட்டும் நோக்கிலேயே இந்தக் குழு  அமைக்கப்பட்டுள்ளதாக ஐதேக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இத்தகைய குழுவொன்றை நியமிப்பதன் மூலம், அமைச்சர்களின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி, தனது அதிகாரத்தை உறுதிப்படுத்த சிறிலங்கா அதிபர் முயற்சிக்கிறார் என்று, தனது பெயரை வெளியிட விரும்பாத மூத்த  ஐதேக அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா ஜனாதிபதியால் நியமிக்கப்படும் இந்த குழுவினால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சரவையினால், மேற்கொள்ளப்படும் முக்கியமான அரசதுறை நியமனங்கள் விடயத்தில் மோதல் போக்கு உருவெடுக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

No comments