படைவீரருக்கு தண்டனையா ? புலம்பெயர் தமிழரால் சீற்றத்தில் மகிந்த !!

“குருதி சிந்திப் போரிட்டு நாட்டையும் மக்களையும் பாதுகாத்த எமது படையினரை புலம்பெயர் புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப சர்வதேச சமூகத்திடம் காட்டிக் கொடுக்கும் நடவடிக்கையில் அரச மட்டத்தில் முக்கிய பதவிகளில் இருப்பவர்களும் இறங்கியுள்ளனர். அவர்கள் அந்தந்தப் பதவிகளிலிருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும். இந்தக் கருமத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காலதாமதமின்றிச் செய்ய வேண்டும்.”

– இவ்வாறு வலியுறுத்தினார் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச.

‘இராணுவத்தில் உள்ள அனைவரும் போர் வீரர்கள் அல்லர். இராணுவத்தில் உள்ள ஒருவர் குற்றம் செய்தால் அவர் குற்றவாளிதான். விருதுகளைப் பெற்றவர்கள்தான் போர் வீரர்கள். இரண்டு வாரங்களில் 11 படையினருக்கு எதிராக குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் சுமத்தப்படும். அதற்குப் பின்னர் புலம்பெயர் தமிழர்களால் வாய் திறக்க முடியாது’ என்று கொழும்பு நாலந்தா கல்லுரியில் நடந்த நிகழ்வு ஒன்றில் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.

இந்தக் கருத்துத் தொடர்பில் மஹிந்த ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:

“புலிகளைத் தோற்கடித்த எமது படையினர் அனைவரும் போர் வீரர்கள். அவர்களைத் தரம் குறைத்து அழைக்க முடியாது.

இப்படித் திறமை வாய்ந்த எமது வீரர்கள் மீது போர்க்குற்றச்சாட்டுக்களை சர்வதேச சமூகமும் புலம்பெயர் புலி அமைப்பினரும் சுமத்தியுள்ளனர். இது எந்தவகையில் நியாயம்?

எமது படைவீரர்களை உள்நாட்டு நீதிமன்றிலோ அல்லது சர்வதேச நீதிமன்றிலோ தண்டிக்க நாம் ஒருபோதும் இடமளியோம்.

படை வீரர்களை நாம் மதிப்பளிக்க வேண்டும். நாட்டுக்காக உயிர்நீத்த படைவீரர்களின் குடும்பங்களுக்கு நாம் உதவிகளைச் செய்ய வேண்டும்” – என்றார்.

No comments