ஜனாதிபதி வேட்பாளராக கரு ?

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராகச் சபாநயகர் கரு ஜயசூரிய நிறுத்தப்படவுள்ளார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பான அறிவிப்பு விரைவில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் எனக் கூறப்படுகின்றது.

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதில் இரு பிரதான கட்சிகளும் தமக்குள் இன்னும் இணக்கப்பாடு எட்டவில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் மீண்டும் மைத்திரிபால சிறிசேனவே ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவார் என்று கூறப்படுகின்றபோதும் அது இன்னும் உறுதியாகவில்லை.

அதேபோன்று ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாஸ ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன.

ஆயினும் தற்போது ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சபாநயகர் கரு ஜயசூரிய நியமிக்கப்படவுள்ளார் எனக் கூறப்படுகின்றது.

பெரும்பாலும் சஜித் பிரேமதாஸவே ஐ.தே.கவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் என அந்தக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கூறி வந்த நிலையில், தற்போது கரு ஜயசூரியவின் பெயர் அந்த இடத்துக்கு முன்மொழியப்பட்டுள்ளது.

இதற்கு சஜித் பிரேமதாஸவும் இணக்கம் வெளியிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி வேட்பாளராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்‌ஷ களமிறக்கப்பட்டால் அவரை எதிர்த்துப் போட்டியிட சபாநாயகர் கரு ஜயசூரியவே மிகவும் பொருத்தமானவராகக் காணப்பட்டதால் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் அவர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் எனக் கூறப்படுகின்றது.

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதில் மைத்திரி – மஹிந்த தரப்புகள் இடையே சரியான இணக்கம் எட்டப்படாத நிலை தொடர்கின்றது. இரு தரப்பும் இந்த விடயத்தில் விட்டுக்கொடுப்பதாக இல்லை.

கோட்டாபயவே வேட்பாளர் என மஹிந்த தரப்பும் மைத்திரியே வேட்பாளர் என சு.கவும் மாறி மாறி கூறிவருகின்றன.

தற்போதைய நிலையில் இவர்களுடன் மோதக்கூடியவர் கரு ஜயசூரியவே என்பதால் ஐக்கிய தேசிய முன்னணி இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்பட்டது.

கடந்த வருடம் ஒக்டோபர் 26ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரியால் மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக சளைக்காமல் போராடி நாட்டில் ஜனநாயக ஆட்சியை நிலைநிறுத்துவதில் முனைப்புடன் செயற்பட்டவர் கரு ஜயசூரிய.

ஜனநாயகத்தை நிலைநாட்ட அவர் எடுத்த நடவடிக்கைகளை சர்வதேச சமூகமும் வெகுவாகப் பாராட்டியது. அத்துடன் நாட்டு மக்கள் மத்தியிலும் கரு ஜயசூரிய மீதான மைதிப்பு உயர்ந்தது.

இதனால் இந்தச் சந்தர்ப்பைத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதித் தேர்தலில் இலகுவாக வெற்றி பெறும் ஏற்பாடாக ஐக்கிய தேசிய முன்னணி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

No comments