மக்கள் கிளர்ந்தனர்:அளவீடு இடைநிறுத்தம்!


யாழ் நகரின் புறநகர் பகுதியை இலக்குவைத்து பாரிய குடியிருப்பு திட்டமொன்றை அரச அமைச்சர் றிசாத் பதியுதீனின் வழிகாட்டலில் உருவாக்க அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சி மக்கள் போராட்டத்தால் தடுக்கப்பட்டுள்ளது.முன்னாள் வடக்கு ஆளுநர் சந்திரசிறியுடன் சேர்ந்து வடக்கில் காணிகளை படையினருக்கு தாரை வார்த்தவரான பொன்னம்பலம் தயானந்தாவே தற்போது யாழ்.பிரதேச செயலராகி சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

கொழும்புத்துறைபகுதியில் தமிழ்க் குடும்பத்திற்குச் சொந்தமான 300 பரப்புக் காணியினை இதற்கென அடாத்தாக  சுவீகரிக்க முற்படுவதாக அவர் மீது பாதிக்கப்பட்ட குடும்பங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

கடந்த கால யுத்த நடவடிக்கைகளின் போது கொழும்புத்துறை பகுதி மக்கள் நடமாடுவதற்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அதனால் அங்கிருந்த குடும்பங்கள் இடம்பெயர்ந்து வேறு இடங்களில் வாழ்ந்துவந்தனர். 

இந்தநிலையில் அக் காணிகள் உரிமைகோரப்படாத காணிகள் எனத் தெரிவித்து அதிகாரிகள் அவற்றை சுவீகரித்து வேறுபுதிய குடியேற்றத் திட்டமொன்றை உருவாக்க முற்பட்டதாக சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. 

இன்று குறித்த காணிகளை சுவீகரிக்க அளவீட்டிற்கென வந்திருந்தவர்களை மக்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டதன் மூலம் திருப்பி அனுப்பியுள்ளனர்.

தமது காணிகளை அளவீடு செய்வதை கைவிடாவிட்டால் பெருமெடுப்பில் போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

No comments