11 கடற்றொழிலாளர்களின் நினைவேந்தல் -பொன்னாலையில்


பொன்னாலையில் கடற்றொழிலுக்குச் சென்றபோது படையினரால் படுகொலை செய்யப்பட்ட 11 தொழிலாளர்களின் 22 ஆவது நினைவேந்தல் நிகழ்வு பொன்னாலை ஸ்ரீ கண்ணன் சனசமூக நிலையத்தில் நேற்று முன்தினம் (29) செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது.

நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் உறுப்பினர் செ.றதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், கிராமமட்ட அமைப்புக்களின் பிரதிதிநிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு உணர்வுபூர்வமாக வணக்கம் செலுத்தினர்.

;மேற்படி படுகொலையில் தனது தந்தை மற்றும் இரு சகோதரர்களை இழந்த நா.தேவராசா பிரதான சுடர் ஏற்றியதைத் தொடர்ந்து திருவுருவப் படங்களுக்கு அவர்களின் உறவினர்கள் சுடர்களை ஏற்றி மலர் மாலைகளை அணிவித்தனர். தொடர்ந்து ஏனையோர் மலரஞ்சலி செலுத்தினர்.

ஊடகவியலாளர் ந.பொன்ராசா பிரதான நினைவேந்தல் உரை ஆற்றினார். தொடர்ந்து ஸ்ரீ கண்ணன் சனசமூக நிலையத் தலைவர் த.பாஸ்கரன், ஸ்ரீ கண்ணன் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத் தலைவர் க.ஸ்ரீஜெயராமச்சந்திரஅருட்சோதி, வெண்கரம் செயற்பாட்டாளர் மு.கோமகன் ஆகியோர் நினைவுரைகளை ஆற்றினர்.

கடந்த 1997 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் திகதி கடற்றொழிலுக்குச் சென்ற தொழிலாளர்கள் பொன்னாலை கொத்தத்துறை படை முகாமுக்கு முன்பாக பாஸ் பெறுவதற்காகக் காத்திருந்தபோது அப்பகுதியில் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதல் ஒன்றைத் தொடர்ந்து படையினரின் தாக்குதலில் 09 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இதேபோன்று, 1985 ஆம் ஆண்டு கடற்றொழிலுக்குச் சென்ற தொழிலாளர்கள் மீது படையினர் நடத்திய தாக்குதலில் 2 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

No comments