சுவிஸ்குமாரை தப்பிக்க உதவிய வழக்கை துரிதமாக்க பணிப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் பிரதான சூத்திரதாரியான சுவிஸ்குமாரை தப்பிக்க உதவியமை தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு எதிரான வழக்கில் விசாரணைகளை விரைவுபடுத்துமாறு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் ஏ.ஜூட்சன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குற்றப் புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணை அறிக்கையொன்றை தாக்கல் செய்தனர்.

அதில் இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் NP/1/22/15 என்ற வழக்கின் கீழேயே விசாரணை செய்யப்படுவதாக குறிப்பிட்டனர்.

இதனையடுத்து இந்த வழக்கில் சந்தேகநபரான முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி துசித் ஜோன்தாசன், குற்றப் புலனாய்வு பிரிவரின் மேலதிக அறிக்கை தொடர்பாக ஆட்சேபனை தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வு பிரிவினர் சமர்பித்த வழக்கு இலக்கம் வித்தியா படுகொலை வழக்கு இலக்கம் எனவும் அந்த வழக்கு விசாரணை செய்து தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது எனவும் அவர் மன்றுரைத்தார்.

மேலும் இந்த வழக்கின் சந்தேகநபராக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் 2017ஆம் ஆண்டு ஆடி மாதம் 15ஆம் திகதியே கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து இந்த விடயம் தொடர்பாக சரியான தகவலை மன்றுக்கு தெளிவுபடுத்துமாறும், வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் உத்தரவிட்டார்.

No comments