யாழில் நகைக்கடைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய கும்பல்


யாழ்.பிரதான வீதியில் நகை கடை ஒன்றுக்குள் புகுந்த குழு ஒன்று கடையின் உரிமையாளர், உரிமையாளரின் மனைவி மற்றும் மைத்துனன் ஆகியோரை மூர்க்கத்தனமாக தாக்கிவிட்டு, பொலிஸாருடைய பிடியில் இருந்து லாவகமாக தப்பி சென்றிருக்கின்றது.

இத் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த கடை உரிமையாளரின் மைத்துனரான இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவரான தீபன் திலீசன் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இன்று மாலை 6 மணியளவில் யாழ்.பிரதான வீதியில் நகை கடை ஒன்றில் நகை செய்ய கொடுத்த வாடிக்கையாளர்கள் சிலர் கடைக்கு வந்துள்ளனர். இதன்போது அவர்கள் செய்ய கொடுத்த நகையின் அளவு சற்று அதிகம் என்பதால் மேலதிகமாக இரண்டாயிரம் ரூபாய் பணத்தை செலுத்துமாறு கடையின் உ ரிமையாளர் கூறியுள்ளார். இதனையடுத்து கடையின் உரிமையாளருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருந்த கும்பல் கடை உரிமையாளரையும், அவருடைய மனைவியையும் குரூரமாக தாக்கியுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நகைகடை உரிமையாளரின் மைத்துனரையும் மூர்க்கத்தனமாகத் தாக்கியுள்ளனர். இதன் பின்னர் சம்பவ இடத்தில் நின்றவர்களும், அங்குவந்த இரு போக்குவரத்து பொலிஸாரும் நிலமையை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்ததுடன், சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய முயற்சித்தனர்.

எனினும் தாக்குதல் நடத்தியவர்கள் பொலிஸாரையும் தாக்க முயற்சித்ததுடன், அங்கிருந்து லாவகமாக தப்பி சென்றனர். இந்த சம்பவம் இடம் பெற்று சுமார் 2 மணித்தியாலங்களாகியும் மேலதிக பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவில்லை.

இதனால் அங்கு கடமையில் இருந்த 2 போக்குவரத்து பொலிஸாரால் நிலமையை கட்டுக்குள் கொண்டுவந் து குற்றவாளிகளை கைது செய்ய முடியவில்லை. மேலும் தாக்குதல் நடாத்திய கும்பல் பொலிஸார் மீதும் தாக்குதல் நடாத்த கடுமையாக முயற்சித்ததுடன்,

பொலிஸாருடைய பிடியை தட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். மிக நீண்ட நேரத்தின் பின்னரே சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தந்தனர்.

No comments