இலங்கை நீதிமன்றங்களின் ஊடாக தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்று சர்வதேச சமூகம் சிந்திக்கக்கூடாது: விக்னேஸ்வரன் வலியுறுத்து

அண்மையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியைத் தீர்த்துவைப்பதிலும் ஜனநாயகத்தை நிலை நாட்டுவதிலும் இலங்கையின் உயர்மட்ட நீதித்துறை செயற்பட்ட விதம் மெச்சப்படக்கூடியது
என்றபோதிலும் அதனை ஒரு உதாரணமாக எடுத்துக்கொண்டு போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை விடயங்களில் இலங்கை நீதிமன்றங்களின் ஊடாக நியாயமான தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று சர்வதேச சமூகம் சிந்திக்கக்கூடாது என்று வட மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும்   இலங்கை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசருமான சி. வி. விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

கிளிநொச்சியில் இருக்கும் மக்கள் நலன் காப்பகம் நடுவகப் பணியகத்தில் தமிழ் மக்கள் கூட்டணி இன்று சனிக்கிழமை காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு வழங்கிய வெள்ள நிவாரண நிகழ்வில் கலந்து கொண்டு உரை ஆற்றியபோது இவ்வாறு தெரிவித்த அவர், இலங்கை நீதித்துறையின் ஊடாக தமிழ்மக்களுக்கு ஒருபோதும் நீதி கிடைக்காது என்றும் அதனால் தான் தமிழ் மக்கள் கூட்டணி உள்ளக விசாரணையை எதிர்க்கின்றது என்றும் கூறினார். தமிழ் மக்கள் கூட்டணியின் பிரதி செயலாளர் நாயகம் பேராசிரியர் பசுபதி சிவநாதன், தமிழ் மக்கள் கூட்டணியின் பேச்சாளர் அருந்தவபாலன், தமிழ் மக்கள் கூட்டணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் றெஜி,  தமிழர் சுயாட்சி கழக செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் மற்றும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவரும் தமிழ் மக்கள் கூட்டணியின் இளைஞர் அணியை சேர்ந்தவருமான கிருஷ்ண மீனன் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அரசாங்கம் திட்டமிட்டு மேற்கொண்ட குற்றங்களை மூடி மறைப்பதற்கு திட்டமிட்டு செயற்படுகின்றது என்றும் ஐ. நா கண்காணிப்புடன் கூடிய வெளிநாட்டு நீதிபதிகளின் பங்குபற்றுதலுடன் கூடிய விசாரணையே சுதந்திரமான உண்மையான நீதியை தமிழ் மக்களுக்கு பெற்றுத்தரும் என்றும் விக்னேஸ்வரன் கூறினார்.

அவர் தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

தமிழ் மக்கள் கூட்டணி எம்மால் இயன்ற அளவு மனிதாபிமான முறையில் அண்மைய வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் வைத்து 2ம் கட்டமாக இந்த நிவாரணப் பணியைச் செய்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த 100 பேரைத் தெரிவு செய்து இவ்வுதவிகளை வழங்க முன்வந்துள்ளோம். எம் ஆதரவாளர்கள் மனமுவந்து தந்துள்ள நிதியை வைத்தே நாங்கள் இந்த உதவிகளைச் செய்து வருகின்றோம்.

கொடையாளிகளின் ஆதரவுகள் அனைத்தும் எம் பாதிக்கப்பட்ட மக்களிடம் போய்ச்சேர வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். கட்சி, இன பேதத்தினைக் கடந்து மனிதாபிமான முறையில்த் தான் இவ்வுதவிகளைச் செய்து வருகின்றோம்.

இக் காப்பகத்தில் கடமையாற்றும் இராமநாதனை அவர் சிறையில் இருந்த காலத்திலேயே நான் மகசின் சிறைச்சாலையில் முதலமைச்சர் என்ற முறையில் விஜயம் செய்த போது கண்டிருக்கின்றேன். அதன் பின் அவர் தொடர்பில் இருந்து வந்துள்ளார். தற்போது அவரை இரமேஷ் என்று அழைக்கின்றார்கள்.

படையினர் தொடர்ந்தும் இங்கிருந்தால் எமது மக்களின் வறுமையைப் பாவித்துத் தமக்குச் சாதகமாக ஒரு சூழலை ஏற்படுத்தக் கூடும் என்பதால்த்தான் நான் இராணுவத்தினரை முற்றாக வெளியேற வேண்டும் என்று கோரி வந்துள்ளேன். கொன்று குவித்த இராணுவமே இன்று கொடைகளையும் கொடுக்க முன்வந்துள்ளது. தாம் மனிதாபிமான நிறுவனமாக மாறியுள்ளார்கள் என்று ஜெனிவாவில் காட்ட வேண்டிய ஒரு கடப்பாடு அவர்களுக்கு இருக்கலாம். அதற்கு எமது மக்களை அவர்கள் பாவிக்கலாம். ஆனால் அதற்காக எமது மக்கள் எமது மக்கள் அல்ல என்று ஆகி விடாது. அரச அனுகூலங்களைப் பெறும் காப்பகத்தில் நீங்கள் எவ்வாறு உங்கள் கொடைகளைச் செய்யலாம் என்று என்னிடம் கேள்வி கேட்கப்பட்டது. நாங்கள் செய்வது மனிதாபிமான சேவை. உண்மையில் இங்குள்ள காப்பக இளைஞர்கள் நேற்றைய தினம் என்னைச் சந்தித்து எல்லா மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கொப்பிப் புத்தகங்கள், புத்தகங்கள் வைக்கும் பைகள், குடிநீர் போத்தல்கள் எனப் பலவற்றை எவரிடமாவது நிதி பெற்று தமக்குப் பெற்றுத் தருமாறு வேண்டினார்கள். ஆகவே அவர்கள் உதவியை நாம் நாடவில்லை. எமது ஆதரவாளர்கள் தரும் உதவிகளை அவர்களின் இந்தக் கட்டடத்தில் வைத்து காணாமல் ஆக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்குகின்றோம்.

எம்மவர் - பிறர், நாங்கள் - அவர்கள் என்ற பாகுபாடு எங்களிடையே அதிகமாக மேலோங்கியுள்ளதை அவதானிக்கின்றேன். அதனால் தமிழ்ச் சமூகம் சீரழிந்து செல்கின்றது என்பதை நாங்கள் உணர்வதில்லை. எங்கள் காரியாலய அறையில் காற்றாடியால் ஒரு ஆவணம் பறக்கத் தலைப்பட்டால் நாம் காற்றாடியின் விசையைக் குறைத்து ஆவணத்தைப் பற்றிக் கொள்கின்றோம். அதற்காக ஆவணத்தைப் பிடிக்க துள்ளித் துள்ளி ஓடுவது கெட்டித்தனமான ஒரு செயலல்ல. அதே போல் இன்று எமது சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் பலவிதமான அல்லல்களுக்கும் பிறழ்வுகளுக்கும் எம் இனத்தவரையே குறை கூறிப் பயனில்லை. காற்றாடியின் விசையைக் குறைப்பது போல் மத்திய அரசாங்கம் எங்கள் மீது கொண்டிருக்கும் அழுங்குப் பிடியைத் தளர்த்த நாம் ஆவன செய்ய வேண்டும். அதனால்த்தான் நான் முதலமைச்சராக வந்ந நாளில் இருந்து படையினரை எமது மாகாணங்களில் இருந்து வாபஸ் பெறுங்கள் என்று கோரி வருகின்றேன்.

போர்க்காலத்தில் இராணுவத்தினரும் விடுதலைப் புலிகளும் சுனாமியின் போது ஒன்று சேர்ந்து சில நாட்கள் மனிதாபிமான மக்கள் சேவையில் ஈடுபட்டார்கள். ஆகவே நாங்கள் மனிதாபிமான செயல்களில் ஈடுபடும் போது எமது வேற்றுமைகளையும் விரோதங்களையும் வித்தியாசங்களையும் முதன்மைப் படுத்தாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மைகளைப் பெற்றுத்தர பாடுபடுவோமாக!

காணாமல் போன உறவுகளை கண்டுபிடிப்பதற்கும் அநீதிக்கு எதிராக நீதியைப் பெற்றுக்கொள்வதற்கும் வீதிகளில் நின்று பல வருடங்களாக போராடி வந்துள்ளார்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர். அரசாங்கம் அவர்களின் கோரிக்கைகளை செவிமடுக்காமல் பொறுப்பற்ற வகையில் நடந்து வருகின்றது. எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் எமது கோரிக்கைகளை செயற்படுத்த அவை முன்வரா. எமது பிரதேசங்களில் திட்டமிட்டு மேற்கொண்ட தமது அனைத்துக் குற்றங்களையும் திட்டமிட்டு மூடி மறைக்கும் செயற்பாடுகளிலேயே அரசாங்கங்கள் ஈடுபட்டு வருகின்றன.

அதனால்த் தான் ஜெனீவா மனித உரிமைகள் சபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் ஊடாக பரிகாரங்களைப் பெற்றுக்கொள்ளும் விதமாக முதலமைச்சராகத் தெரிவுசெய்யப்பட்ட காலம் முதல் அவற்றை வலியுறுத்தி வருகின்றேன். மனித உரிமைகள் சபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதே தமிழ் மக்கள் கூட்டணியின் நிலைப்பாடு. இந்தத் தீர்மானங்களை அமுல்படுத்துவதற்கு எத்தகைய செயற்பாடுகளை நாம் முன்னெடுக்கவேண்டும் எவ்வாறு சர்வதேச சமுகத்துக்கு அழுத்தங்களைக் கொடுக்கவேண்டும் என்பவை குறித்து நாம் ஆராய்ந்து வருகின்றோம்.

இந்த சந்தர்ப்பதில் நான் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். அதாவது, அண்மையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியைத் தீர்த்துவைப்பதிலும் ஜனநாயகத்தை நிலை நாட்டுவதிலும் இலங்கையின் உயர்மட்ட நீதித்துறை செயற்பட்ட விதம் மெச்சப்படக்கூடியது. மெச்சுகின்றோம். ஆனால், இதனை ஒரு உதாரணமாக எடுத்துக்கொண்டு போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை விடயங்களில் இலங்கை நீதிமன்றங்களின் ஊடாக நியாயமான தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று சர்வதேச சமூகம் சிந்திக்கக்கூடாது. இரு இனங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ஏற்பட்டதே இனப்படுகொலை. பிழையான சரித்திரங்களை, வரலாறுகளை மக்கள் மனதில் உள்ளேற்றியதால் ஏற்பட்டதே இனப்படுகொலை.
ஆனால், அண்மையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி என்பது நாட்டுக்கு ஏற்பட்ட ஒரு பொதுவான பிரச்சினை. ஜனநாயகம் சம்பந்தமான பிரச்சனை அங்கே இன ரீதியான பக்கச் சார்பான செயற்பாடுகளுக்கு இடம் இருக்கவில்லை. இனப்பிரச்சினை விடயத்தைப் பொறுத்தவரையில், இலங்கையின் எல்லா தேசிய நிறுவனங்களுமே இன ரீதியாகப் பிளவடைந்து நிற்கின்றன. அரசாங்கத்தினாலும் பெரும்பான்மை இன மக்களினாலும் கட்டுப்படுத்தப்படும் இந்த நிறுவனங்களில் எமக்கான நீதியை நாம் எதிர்பார்க்க முடியாது. இதற்கு நீதித்துறை விதிவிலக்கல்ல. அதனால் தான் உள்ளக விசாரணையை தமிழ் மக்கள் கூட்டணி எதிர்க்கின்றது. ஐ. நா கண்காணிப்புடன் கூடிய வெளிநாட்டு நீதிபதிகளின் பங்குபற்றுதலுடன் கூடிய விசாரணையே சுதந்திரமான உண்மையான நீதியைப் பெற்றுத்தரக் கூடியது.

காணாமல் போனோரின் குடும்பத்தவர்களுக்கு நீதியைப் பெற்றுத்தருவதானால் இவ்வாறான வெளிநாட்டு நீதித்துறையினரின் பங்குபற்றுதலுடன் நடைபெறும் விசாரணைகளே அவற்றைப் பெற்றுக் கொடுப்பன என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது.

எமது கட்சி கொள்கைகள் சார்ந்த கட்சி. கொள்கைகள் என்று வரும் போது நாங்கள் அவற்றில் உறுதியாக இருப்போம். இவ்வாறான மனிதாபிமான உதவிகள் வழங்கும் இடத்தில் எந்தவித அரசியலையும் முடியுமான வரையில் சேர்க்க மாட்டோம். ஆனால் சில விடயங்களை இங்கு கூற வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. அதாவது நாங்கள் கொள்கைகளில் விடாப்பிடியாக நிற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆளுக்கு ஆள் 'கொள்கைகள்' 'கொள்கைகள்' என்று கூறிவிட்டுத் தமது பைகளை நிரப்பிக் கொள்கின்றார்கள். உல்லாச வாழ்க்கைகள் வாழ்கின்றார்கள். கொள்கைகளை ஆவணங்களில் பொறித்து விட்டு சுயநல நடவடிக்கைகளில் ஈடுபடத் துணிந்துள்ளனர். அந்த நிலை மாற வேண்டும். எமது வருங் காலம் பற்றிய சிந்தனைகள் மேலெழுந்தால் கட்டாயமாக நாம் எமது கொள்கைகளில் பற்றுறுதியாக செயற்பட வேண்டி வரும் என்று கூறி எமக்கு இந்த நிகழ்வை நடத்த உதவிய மக்கள் நலன் காப்பகத்தினருக்கு நன்றி தெரிவித்து கடல் கடந்திருந்து எமக்கு உதவிகள் செய்துவரும் அன்பு உள்ளங்களுக்கு நன்றி தெரிவித்து இந் நிகழ்வை ஒழுங்கு செய்த அனைவருக்கும் நன்றி தெரித்து விடைபெற்றுக் கொள்கின்றேன்.
 














No comments