கம்பவாரிதிக்கு மீண்டும் ஆப்பு தயார்?



சொல்விற்பனம் என்ற தலைப்பில் கொழும்புக் கம்பன் கழகம் எதிர்வரும் 22 ஆம் திகதி சனிக்கிழமை நடத்தவிருந்த பட்டிமன்றத்திற்கு மண்டபம் வழங்குவதில்லையென வெள்ளவத்தையில் உள்ள கொழும்புத் தமிழ்ச் சங்கம் தீர்மானித்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை சங்கத்தின் விநோதன் மண்டபத்தில் நடைபெற்ற சங்க ஆட்சிக்குழுக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சி அரசியல் கூட்டம் ஒன்றை கம்பன் கழகம் சொல்விற்பனம் என்ற தலைப்பில் சங்கத்தின் மண்டபத்தில் நடத்தவுள்ளதாகவும் ஏன் அனுமதி வழங்கப்பட்டது எனவும் ஆட்சிக்குழு உறுப்பினர், பத்திரிகையாளர் அ.நிக்ஸன், சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி இராஜகுலேந்திராவிடம் கேள்வி எழுப்பினார். இதன்போது சட்டத்தரணி காண்டீபன் கம்பன் கழகம் நடத்தவுள்ள பட்டடிமன்றத்திற்கு கண்டனம் தெரிவித்தார். 
 
தமிழ் மக்களின் எழுபது ஆண்டுகால அரசியல் போராட்டத்தையும் உயிர்த் தியாகங்ளையும் பட்டிமன்றம் நடத்தி கொச்சைப்படுத்தும் கம்பன் கழகத்தின் சிங்களப் பேரினவாதத்திற்குத் துணைபோகும் சதி நடவடிக்கைகளுக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கம் மண்டபத்தை வழங்கக் கூடாது என சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினரான சட்டத்தரணி நடராஜா காண்டீபன் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத் தமிழினத்துக்கு தலைமைக்கு தகுதி வாய்ந்த அரசியல் என்ற தொனிப்பொருளில் ஒவ்வொரு அரசியல் கட்சிகள் சார்பிலும் பிரதிநிதிகள் உரையாற்றவுள்ளதாகவும், அதன் பின்னர் கம்பவாரிதி இ.ஜெயராஜ், பேராசிரியர் சண்முகதாஸ், கொழும்பு பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் க.சர்வேஸ்வரன், பேராதனைப் பல்கலைக்கழக அரசியல்துறை முதுநிலை விரிவுரையாளர் பாஸ்கரன், பேராதனைப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் ஸ்ரீபிரசாந்தன் ஆகியோர் நடுவர்களாக இருந்து தீர்ப்பு வழங்கவுள்ளதாகவும் அ.நிக்ஸன் எடுத்துக் கூறினார்.
ஆகவே சீதையா? கண்ணகியா? என்று பட்டிமன்றம் நடத்துவது போன்று தமிழ்த்தேசியக் கோட்டு அரசியலைப் பட்டிமன்றம் நடத்தி மலினப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கம் இடமளிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதனையடுத்து மேலும் விளக்கமளித்த சட்டத்தரணி காண்டீபன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் தான் உரையாற்றவில்லை எனவும் ஆனால் தனது அனுமதியின்றி தன்னுடைய பெயரும் உரையாற்றுவோர் பட்டியலில் உள்ளதாகவும் கூறினார்.
கம்பன் கழகத்தின் இந்தச் செயற்பாட்டை முற்காக நிராகரித்த காண்டீபன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போன்ற சிங்கள தலைவர்களுக்கும் டக்ளஸ் தேவானந்தா போன்ற ஆயுதக் குழுக்களின் தலைவர்களையும் அழைத்து மகுடம் சூட்டி, மலை அணிவித்துப் பொன்னாடை போர்த்தி அழகுபார்த்த கம்பன் கழகம், எந்த அடிப்படையில் தமிழினத்துக்கு தலைமை தாங்குவதற்கு தகுதிவாய்ந்த கட்சி எது என்று பட்டிமன்றம் நடத்த முடியும் எனவும் உரத்த தொனியில் கேள்வி எழுப்பினார்.
முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து இரத்தம் காய்வதற்குள் கொழும்பில் நடத்தப்பட்ட கம்பன் விழாவில், தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி எழுதிய ஆங்கில ஊடகவியலாளர் ஒருவருக்கு விருது வழங்கிக் கௌரவித்த இந்தக் கம்பன் கழகம், தமிழ்த்தேசியக் கோட்பாட்டு அரசியலை பட்டிமன்றம் நடத்தி தரங்குறைத்து சிங்களப் பேரிவனவாத சக்திகளுக்கு துணைபோவதாகவும் குற்றம் சுமத்தினார்.
இதனையடுத்து மண்டபத்தை வழங்குவதில்லையென ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தைக் காண்டீபன் முன்மொழிந்து சமர்ப்பித்தார். இதனையடுத்து அ.நிக்ஸன் வழிமொழிந்தார். சங்கத் தலைவர் இராஜகுலேந்திராவின் அனுமதியோடு கம்பன் கழகத்துக்கு எழுத்து மூலம் இந்த விடயம் உடனடியாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.
மண்டபத்துக்காகச் செலுத்தப்பட்ட பணத்தையும் மீள ஒப்படைப்பது எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 22 ஆம் திகதி மாலை ஐந்து மணிக்கு சொல்விற்பனம் என்ற தலைப்பில் இந்தப் பட்டிமன்றம் நடத்த ஏற்பாடு செய்ய்ப்பட்டிருந்தது.
முல்லைத்தீவு - கேப்பாப்புலவு பிரதேசத்தில் மக்கள் காணி மீட்பு போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது கடந்த ஆண்டு கொழும்பு வெள்ளவத்தையில் இடம்பெற்ற கம்பன் விழாவுக்கு முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன அழைக்கப்பட்டிருந்தார். 

No comments