ரணிலுக்கு பிரதமர் பதவிகிடையாது:நிலைப்பாட்டில் மாற்றமில்லையென்கிறார் மைத்திரி!


ரணிலிற்கு பிரதமர் பதவியை வழங்கிய பின்னர் இலங்கை ஜனாதிபதி மைத்திரி ஆற்றிய உரை கடுமையான் வரவேற்பினை சிங்கள மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

தனது உரையில் இராணுவத்தினரை சிறையில் அடைத்தமை, பிக்குகளின் ஆதரவை இழந்தமை, மத்திய வங்கி கொள்ளை, விஞ்ஞானப்பூர்வ அமைச்சரவை தெரிவை மீறியமை போன்ற காரணங்களே ரணில் தலைமையிலான அரசாங்கத்துடன் முரண்பட வைத்ததாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை முரண்பட்டுக் கொண்டிருப்பதால் நாடு பாதிக்கப்படும். எனக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டு வருவதாக சிலர் கூறுகின்றனர். என்னை சிறையில் அடைத்தாலும் நாட்டின் நலனுக்காகவே செயற்படுவேன்.எனவே முரண்படாமல் நாட்டை கட்டி எழுப்ப எதிர்பார்க்கிறேன்.

என்னை இழுத்துச்சென்று கொலை செய்ய வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியினர் கூறிய கருத்துகள் அவதானம் மிக்கவை. இப்போதும் சொல்வேன், பிரதமரை தெரிவு செய்யும் நிறைவேற்று அதிகாரம் என்னிடமே உள்ளது. நாடாளுமன்றுக்கோ, நீதிமன்றுக்கோ அல்ல.

ஆனால் நாடாளுமன்ற சம்பிரதாயங்களையும், ஜனநாயகத்தையும் மதிப்பதாலேயே நான் ரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்கினேன்.225நாடாளுமன்ற உறுப்பினர்களும்; ஆதரித்தாலும் ரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்க மாட்டேன் என்ற என் நிலைப்பாட்டில் மாற்றமில்லை. அது தனிப்பட்ட என் நிலைப்பாடு.

ஆனால் 117 பேர் கோரியதால் அவருக்கு அந்த பதவியை வழங்கினேன். அரசியல் யாப்பை எப்போதும் மீறவில்லை. பிரதமரை பதவி நீக்கியமை, புதிதாக ஒருவரை நியமித்தமை, நாடாளுமன்றை இடை நிறுத்தியமை மற்றும் கலைத்தமை எல்லாம் நான் தனித்து மேற்கொண்ட தீர்மானங்கள் அல்ல. நீதித்துறை சார் நிபுணர்களுடன் கலந்துரையாடி மேற்கொண்ட தீர்மானங்கள் ஆகுமெனவும் மைத்திரி தெரிவித்துள்ளார்.



No comments