திருமணமாகாத குடும்ப வாழ்க்கை இன்னும் எத்தனை காலத்துக்கு? - பனங்காட்டான்

மகிந்தவை பிரதமர் பதவியிலிருந்து அகற்ற முயன்றுவரும் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒப்பமிட்டு ஜனாதிபதியிடம் கடிதம் கையளித்துள்ளனர். இவர்களில் ஒருவர்,
மனச்சாட்சியை மெனனிக்க வைத்து ஒப்பமிட்டதாகச் சொல்கிறார். கூட்டமைப்பிலிருந்து வெளியேறியதால் இருவர் இதிலிருந்து தப்பிவிட்டனர்.

தென்னாலி ராமன் கதைகளில் இதுவும் ஒன்று.

மன்னன் ஒருவன் சளிப் பிரச்சினையால் பல மாதங்களாக அல்லாடிக் கொண்டிருந்தான். வைத்தியங்கள் பல செய்தும் பலனளிக்கவில்லை.

ஒருநாள் தென்னாலி ராமனிடம் தனது நோயின் தாக்கத்தைக் கூறி, பரிகாரம் கேட்டான்.

மூக்குள்ள வரையும் சளி இருக்கும் என்று தென்னாலி ராமன் பதிலளித்தபோது, அந்த மன்னன் மூக்குடைபட்டவன் போலானான் என்பது அந்தக் கதை.

இதே நிலையிற்தான் இப்போது இலங்கை ஜனாதிபதி இருக்கிறார்.

எங்கோவிருந்த மகிந்தவை இழுத்து வந்து பிரதமர் கதிரையைக் கொடுத்த நாளிலிருந்து சளி பிடித்த வாழ்க்கையில் தள்ளாடிக் கொண்டிருக்கிறார்.

ரணில் என்ற பாம்பின் பல்லைப் பிடுங்கப் போய், மகிந்த என்ற பாம்புக்குப் பால் வார்க்கும் கதையாகி விட்டது மைத்திரியின் வாழ்க்கை.

அக்டோபர் 26ஆம் திகதி ஆரம்பமான இந்தக் கெட்ட காலம் நவம்பர் மாதம் முழுவதும் சிங்கள அரசியலின் முத்தலைவர்களையும் (மைத்திரி - ரணில் - மகிந்த) பேயாட்டமாக உலுப்பிக் கொண்டிருக்கின்றது.

கொழும்பிலுள்ள ஆங்கிலப் பத்திரிகையொன்றில் கடமையாற்றும் தமிழ் ஊடகவியலாளர் ஒருவருடன் சிங்கள தேச நிலைபற்றி நான் பேசிக் கொண்டிருக்கையில், தனது தொலைபேசியை கைகளால் பொத்திக்கொண்டு காதோடு காதாக அவர் ஒன்றைச் சொன்னார்.

'அண்ணை, நவம்பர் மாவீரர் மாதம். அந்தப் புனித ஆத்மாக்களின் வேலைதான் இவையெல்லாம்" என்று கூறியவர் அதற்கு மேல் தொடரவில்லை.

2009இல் முள்ளிவாய்க்காலில் தமிழரின் விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னரான ஒன்பதாண்டு முடிவுற்ற காலத்தில், அறிவும் உணர்வும் கலந்த நிலையில் மக்கள் திரண்டெழுந்து தங்கள் காவற்தெய்வங்களை இவ்வருடம்போல் தீரத்துடனும் ஓர்மத்துடனும் கொண்டாடவில்லை என்பதை, போராட்ட காலத்தில் அதனை எதிர்த்து நின்றவர்கள்கூட ஒப்புக்கொண்டுள்ளனர் என்பதனை உலகளாவிய ஊடகங்கள் எடுத்தியம்பின.

‘தமிழ்த் தேசியத்தின் உயிர்ப்பை உறுதியுரைத்தது மாவீரர் நாள்| என்று சொன்னால் அதில் தவறிருக்கமாட்டாது.

ஆயுதங்களுடன் பொலிசும் இராணுவமும், தமிழீழ வரைபடம் பொறித்த மேலங்கியுடன் நின்ற புலனாய்வுத்துறையினர் அனைவரையும் ஓரங்கட்டிய தாயக உறவுகளை நினைக்கையில், நெஞ்சு நிமிர்ந்து, தோள்கள் உயர்ந்து பெருமை கொள்கிறது.

ஆனால், தமிழ் மக்களின் தலைவர்கள் என்று கூறப்படும் கூட்டமைப்பினரில் ஓரிருவர் தவிர, மற்றையோர் நான்கு சுவர்களுக்குள் நின்று விளக்கேற்றி பத்திரிகைகளில் படங்காட்டியதோடு முடித்துக் கொண்டனர்.

கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் மறுநாள் விடுத்த அறிக்கையொன்றில், மிரட்டல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாமல் மாவீரர்களை மனதார நினைவுகூர்ந்துள்ளது தமிழர் தாயகம் என்று தெரிவித்துள்ளதுடன், நாடாளுமன்ற அமர்வு அன்றிருந்ததால் தாம் நேரில் பங்கேற்க முடியாமைக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையின் இறுதியில் 'எனினும், நான் தனிப்பட்ட முறையில் மாவீரர்களை கொழும்பில் நினைவு கூர்ந்துள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக இரண்டு விடயங்களை சம்பந்தன் முன்னால் வைக்க மனம் விரும்புகின்றது.

1. நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்ட காரணத்தால் பங்குபற்ற முடியாது போனதென்றால், அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் மாவீரர்களை நினைவுகூர்ந்து சில வார்த்தைகளைக் கூறி அதனை நாடாளுமன்ற அதிகாரப் பதிவேட்டில் இடம்பெறச் செய்திருக்கலாமே! ஏன் செய்யவில்லை?

2. நாடாளுமன்ற அமர்வின் காரணமாக மாவீரர் நாள் நிகழ்வில் நேரில் கலந்துகொள்ள முடியாது போனதற்கு வருத்தம் தெரிவித்திருக்கும் சம்பந்தன், இதற்கு முன்னர் எந்த ஆண்டுகளில், எந்தத் துயிலும் இல்லங்களில் பங்குகொண்டார் என்பதையும் தெரிவித்தால் சிலரது சந்தேகங்களையும் நிவர்த்தி செய்யலாம்.

ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக்குவதற்கு கூட்டமைப்பின் விருப்பமில்லாத நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நெருக்கிப் பிடித்து ஒப்பம் பெறும் வேலையில் இக்காலத்தில் சம்பந்தன் தீவிரமாக ஈடுபட்டாரென்று கூட்டமைப்பின் வடபகுதி உறுப்பினர் ஒருவர் கூறுவதற்கு பதில் கூற வேண்டிய கட்டாயமும் சம்பந்தனுக்கு இருக்கின்றது.

மகிந்தவைப் பிரதமர் பதவியிலிருந்து அகற்றுவதற்கு ஓயாது இயங்குவது வேறு, ரணிலை மீண்டும் பிரதமராக்க ஆதரவு வழங்குவது வேறு என்ற வித்தியாசத்தை கூட்டமைப்பினர் எப்போதுதான் உணரப்போகிறார்களோ தெரியாது.

மட்டக்களப்பு வியாழேந்திரன் (புளொட்) மகிந்த அணிக்குப் பாய்ந்து போனதாலும், வன்னி மாவட்ட சிவசக்தி ஆனந்தன் (ஈ.பி.ஆர்.எல்.எஃப்.) கூட்டமைப்பிலிருந்து வெளியேறியதாலும் கூட்டமைப்பின் மொத்த எண்ணிக்கை 14 ஆகக் குறைந்துள்ளது.

இல்லையென்றால், ரணிலுக்கு ஆதரவாக ஒப்பமிட்ட கூட்டமைப்பின் தொகை 16 ஆக இருந்திருக்கும்.

மகிந்தவை மைத்திரி பிரதமராக்கிய எதிர்பாராத நிகழ்வினால், சிங்கள அரசியலில் இப்போது நாயகனாக மாறியிருப்பவர் சபாநாயகர் கரு ஜெயசூரிய.

கதிரையால் வீசினாலென்ன, மிளகாய்த்தூள் தூவினாலென்ன, மறியலுக்கு அனுப்பினாற்தானென்ன, கொலைசெய்தாற்தானென்ன, நாடாளுமன்ற பாரம்பியத்தை விட்டுக்கொடுக்கப் போவதில்லையென்ற அவரது மனவுறுதியில், மகிந்த அணி நாடாளுமன்றத்தைப் புறக்கணித்து வருகின்றது.

இந்த வாரத்தில் இரண்டு அமர்வுகளைப் புறக்கணித்த இவர்கள், தொடர்ந்தும் அவ்வழியே செல்லவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

உலக வரலாற்றில் ஆட்சித் தரப்பு நாடாளுமன்ற அமர்வைப் புறக்கணித்தது என்ற கின்னஸ் சாதனை இலங்கையிலேயே நடைபெறுகின்றது.

பிரதமர் ஒருவரை பின்கதவால் நியமித்ததும் கின்னஸ் சாதனைதான்.

கடந்த இரண்டு வாரங்களாக ரணில் தரப்பு கொண்டு செல்லும் சகல தீர்மானங்களும், நம்பிக்கையில்லாத் தீர்மானங்களும் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பேதுமின்றி நிறைவேறுகின்றன.

கூடாத புதிய கூட்டு, அக்டோபர் 26இலிருந்து பெரும்பான்மையில்லாத அரச தரப்பாக அலங்கோலப்படுகின்றது.

ஆனால், இதனை ஏற்றுக்கொள்ள அக்கூட்டின் இரு தலைவர்களும் தயாரில்லையென்று சர்வதேசம் தொடர்ந்து கூறிவருகின்றது.

மைத்திரியின் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்தவின் வீடு தேடிச் சென்று வினயமாக ஒரு வேண்டுகோள் விடுத்தனர்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையில்லாததால் பிரதமர் பதவியை விட்டு விலகுங்கள் என்பதே இவர்களது கோரிக்கை.

மகிந்த அடியோடு மறுத்துவிட்டார். ஏதேதோவெல்லாம் காரணம் கூறிய அவர், இறுதியாக டிசம்பர் 7ஆம் திகதி உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரும்வரை அவகாசம் கேட்டுள்ளார்.

தற்செயலாக தீர்ப்பு பாதகமாக வருமானால், ரணில் தரப்பு உறுப்பினர் சிலரை தம்மால் கொள்முதல் செய்ய முடியுமெனவும் நம்பிக்கை (?) தெரிவித்துள்ளார்.

அதேசமயம், தம்மை இப்படியானதொரு இக்கட்டான நிலைக்குள் தள்ளிவிட்டார்  தமது சகோதரரான பசில் ராஜபக்ச என்று கூறி, சுதந்திரக் கட்சியினர் முன்னால் அவரைத் தொலைபேசி வழியாகத் திட்டியதாகவும், பசில் இடைநடுவில் தொடர்பைத் துண்டித்ததாகவும் கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

கடந் ஒரு மாதமாக மகிந்தவை ஆதரித்து வந்த அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, ஜனநாயக மரபுப்படி மகிந்த பதவி விலக வேண்டுமெனக் கூறியதுடன், அரசாங்க தரப்பிலிருந்து தனி ஒருவராக நாடாளுமன்ற அமர்விலும் பங்குபற்றியுள்ளார்.

இந்த வார அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் கெஹலிய ரம்புக்வெல பங்குபற்றவில்லை. இதற்கு விளக்கமளித்த அமைச்சரவைப் பேச்சாளர் மகிந்த சமரசிங்க, தற்போது இடைக்கால பராமரிப்பு அரசு மட்டுமே இயங்குவதாகத் தெரிவித்ததோடு, ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியிழந்து விட்டனரென்றும் உண்மையைப் போட்டுடைத்தார்.

அப்படியென்றால், கெஹலிய ரம்புவெல மட்டுமன்றி மட்டக்களப்பு வியாழேந்திரன், யாழ்ப்பாணம் அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் இப்போது பிரதி அமைச்சர்களாக இல்லையென்பது அம்பலமாகியுள்ளது.

அடுத்தடுத்த நாட்களில் முக்கிய சம்பவங்கள் சிங்கள தேசத்தில் இடம்பெறுமென்று கூறப்படுகின்றது.

ஆடிய ஆட்டமென்ன, பேசிய வார்த்தை என்ன என்று கேட்குமளவுக்கு வீழ்ச்சியும் சுழற்சியும் ஏற்படுமாம்.

மேற்குலக குடும்ப வாழ்க்கைபோன்று, திருமணமாகாது ஷகொமன் லோஷவில் கூடி வாழும் குடும்பம் நடத்துபவர்கள் பிரியும் காலம் வந்துவிட்டது என்கிறார்கள் கொழும்பு ஊடகவியலாளர்கள்.

மாவீரர்களின் புனித ஆத்மா இன்னும் என்னென்ன செய்யப் போகிறதோ!

No comments