நிபந்தனைகளை கைவிட்டு ரணிலுக்கு கை உயர்த்தியது ரெலோ
தமது நிபந்தனைகளை ஏற்றால்தான் ரணில் விக்கிரமசிங்கவிற்கு முண்டு கொடுக்க முடியும் என ரெலோ இயக்கம் அறிவித்திருந்தபோதும் இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் நிபந்தனைகள் ஏதுமற்று ரணிலுக்கு ஆதரவாக ரெலோ கை உயர்த்தியுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்க நம்பிக்கை கோரும் பிரேரணை இன்று நாடாளுமன்றில் 117 வாக்குகளால் நிறைவேறியது மகிந்த தரப்பினர் எவரும் நாடாளுமன்றிற்கு வருகைதரவில்லை. ஜேவிபியும் வாக்கெடுப்பினைப் புறக்கணித்திருந்தது.

இந்நிலையில் ரணிலுக்கு ஆதரவு வழங்குவதாயின் தாம் முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்துமூல வாக்குறுதி வழங்கினால் மட்டுமே ரணிலை ஆதரிக்க முடியும் என அறிவித்த ரெலோ அதுதொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மத்தியகுழுவினைக் கூட்டி பேச்சுவார்த்தைகளையும் நடத்தியிருந்தது.

எனினும் ரணிலுக்கு நிபந்தனையற்ற ஆதரவினை வழங்குவதில் உறுதியாக இருந்த தமிழரசுக்கட்சி மத்திய குழுக் கூட்டத்தை இழுத்தடித்ததோடு ரெலோவுடன் திரை மறைவு சமரச முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தது.

இந்நிலையில் இன்று ரெலோ ரணிலுக்கு ஆதரவாக கை உயர்த்தியுள்ளது.

No comments