புலிகளுக்கு அஞ்சியே அவர்களுடன் டீல் செய்தோம் என்கிறது தமிழரசுக்கட்சி


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் கொள்கைகளை முன்கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல அது விடுதலைப் புலிகளின் ஜனநாயகக் கொலைகளுக்கு அஞ்சி தம்மை தற்காத்துக்கொள்வதற்காக ஜனநாயக அரசியல் தலைகள் விடுதலைப் புலிகளுடன் செய்துகொண்ட டீலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் என தமிழரசுக்கட்சி உறுப்பினரும் வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சயந்தன் குறிப்பிட்டுள்ளார்.

சமயச் சொற்பொழிவுகளை நடத்திவரும் கொழும்பு கம்பன்கழகம், அண்மையில் அரசியல்கட்சிகளை உள்ளடக்கி, எதிர்காலத்தில் தமிழ் மக்களிற்கு தலைமை தாங்க தகுதியானவர்கள் யார் என்ற கருத்தாடற்களம் ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்தனர். எனினும் குறித்த கலந்துரையாடல் ஒருசிலரது துதிபாடுவதற்கும் தம்போன்ற தரப்புக்களை பொது மேடையில் வைத்து அவமானப்படுத்துவதற்கும் திட்டமிட்டு நடத்தப்படும் சதி நாடகம் என பல கட்சிகள் அதில் கலந்துகொள்ளவில்லை.

தமிழரசுக்கட்சி, புளொட், ரெலோ, ஈ.பி.டி.பி, தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகள் மாத்திரமே அதில் கலந்து கொண்டிருந்தன. தமிழ் மக்கள் கூட்டணியும் முன்னர் மறுத்திருந்தபோதும் பின்னர் அருந்தவபாலனை அனுப்ப பின்னர் சம்மதித்து அனுப்பிவைத்திருந்தது.

இதையடுத்து, மக்களின் கேள்விகளிற்கு, அரசியல்கட்சிகளின் பிரதிநிதிகள் பதிலளிக்கும் நிகழ்ச்சியாக அது மாற்றப்பட்டது.

இதன்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்படி உருவாக்கப்பட்டது? கொள்கையின் அடிப்படையல் உருவானதா?, ஏதும் நோக்கத்துடன் உருவானதா?, அல்லது வெறும் தேர்தல் கூட்டா? என எழுப்பப்பட்ட கேள்விக்கே, இப்படி பதிலளித்தார் கே.சயந்தன்.

அவர் அதற்கு பதிலளிக்கும்போது-

“கூட்டமைப்பு உருவானது, விடுதலைப்புலிகளுடன் செய்யப்பட்ட டீல். ஜனநாயக தேர்தலில் போட்டியிடுபவர்கள் வரிசையாக இலக்கு வைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். நீலன் திருச்செல்வம், சரோஜினி யோகேஸ்வரன், தங்கத்துரை என வரிசையாக கொல்லப்பட்டனர். தேர்தலில் போட்டியிட்டு கொல்லப்படாமல் இருக்க விடுதலைப்புலிகளுடன் ஒரு டீலுக்கு போக வேண்டிய நிலைக்கு ஜனநாயக அரசியல் தலைவர்கள் தள்ளப்பட்டனர்.

விடுதலைப்புலிகள் தாமே ஏகபிரதிநிதிகள் என்று கூறினாலும், அதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை. கூட்டமைப்பின் ஊடாக அதை நிறுவிக்கொள்ள வேண்டிய தேவை அவர்களிற்கும் இருந்தது. கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் விடுதலைப்புலிகளே ஏக பிரதிநிதிகள் என குறிப்பிடப்பட்டிருந்தது. தேர்தலில் கூட்டமைப்பை மக்கள் அங்கீகரித்த பின்னர், விடுதலைப்புலிகளே ஏகபிரதிநிதிகள் என்பதை சர்வதேச சமூகம் அங்கீகரித்தது. இதைதவிர, கூட்டமைப்பு உருவாக்கத்தின் பின்னால் எதுவும் கிடையாது“ என குறிப்பிட்டார்.

இதன்பின்னர் உரையாற்றிய நீண்டகால அரசியல் செயற்பட்டாளரான ரெலோவின் எம்.கே.சிவாஜிலிங்கம், சயந்தன் கூறியவை தவறு என்பதை குறிப்பிட்டு, தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் வரலாற்று பின்னணியை புரிய வைத்திருந்தார்.

No comments