மக்கள் வெள்ளத்தில் கூட்டமைப்பு நத்தார் கொண்டாட்டத்தில் - லக்ஸ்மன் யாப்பா

அரசாங்கத்துடன் இணைந்து செயற்படக் கூடிய, எதிர்க்கட்சியாக தம்மை மாற்றியமைத்துக் கொண்டுள்ள, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இதன் மூலம் ஐக்கிய தேசிய முன்னிணியுடன் இணைந்து தமக்குத் தேவையான வகையில் யாப்பு ஒன்றை உருவாக்கிக்கொள்ள முயற்சிகளை முன்னெடுப்பதாகவும் மஹிந்த தரப்பு மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளது.

மஹிந்த ராஜபக்சவை, எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்ளக்கூடாது என, தமிழ்த் தேசியக் கூட்ட்மைப்பு, சர்வதேசத்திடம் கோரிக்கையை முன்வைப்பதானது, கூட்டமைப்பின் நோக்கத்தை தெளிவாக வெளிப்படுத்தி நிற்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ராஜகிரிய – நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கூட்டு எதிரணியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத்தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக் கட்சிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் அனைவரும் அறிவோம். மஹிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்ளாக்கூடாது என எம்.ஏ.சுமந்திரன் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும் அவசர கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.

உண்மையில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படக்கூடிய எதிர்க்கட்சி ஒன்று அவசியம். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நினைக்கும் யாப்பு ஒன்றை உருவாக்க முடியும். ஸ்ரீலங்காவின் உள்ளக பிரச்சினைகளுக்கு நாட்டிற்கு வெளியே உள்ள அமைப்புகள் எவ்வாறு தலையீடு செய்ய முடியும். சர்வதேச அமைப்புகளை இதில் தலையீடு செய்யுமாறு சுமந்திரன் அழைப்பு விடுக்கின்றார்.

யாப்பு ஒன்றை விரைவாக கொண்டுவருவதே தமிழ்க் கூட்டமைப்பின் நோக்கம். மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமனம் பெற்றதன் பின்னர், தமிழ்க் கூட்டமைப்பு ரணிலை பிரதமராக்க முயற்சித்தமையும் இதன் அடிப்படையிலேயே. இது தொடர்பில் மக்கள் அவதானம் செலுத்த வேண்டும்.

இங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட, லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன வடக்கில் மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைபினர், கொழும்பில் நத்தார் தினக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும் வடக்கில் வெள்ளம் ஏற்பட்டபோது இராணுவமே அவர்களுக்கான மீட்டுப் பணிகளை முன்னெடுத்தது. எனினும் அரசாங்கத்தை அமைக்க முன்னின்று செயற்பட்ட எந்த உறுப்பினர் வடக்கிற்கு சென்று மக்களுக்காக பணியாற்றினார்கள் என கேட்க விரும்புகின்றேன். வடக்கில் சகோதரத்துவத்துடன் இராணுவம் பணியாற்றினார்கள்.

எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கொழும்பில் நத்தார் தினத்தை கொண்டாடினார்கள். இன்று தமிழ்க் கூட்டமைப்பின் பல உறுப்பினர்கள் வெளிநாடுகளில் இருக்கின்றனர். மக்களுக்கான சேவையை ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, இராணுவமே வழங்குகிறது வேறுயாருமல்ல. உருவாக்கப்படவுள்ள யாப்பு, தமிழ் மக்களுக்கோ, சிங்கள மக்களுக்கோ நிவாரணம் தரும் யாப்பாக அமையப்போவது இல்லை. அது ஒரு அரசியல் இலாபம் சார்ந்தது.

தற்போதைய அரசாங்கம் அமைச்சர்களின் எண்ணிக்கையை 45ஆக அதிகரிப்பதற்கு முயற்சிப்பதாகவும், லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன குற்றச்சாட்டினார்.

லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன மேலும் தெரிவிக்கையில், 30ற்கும் மேற்பட்ட அமைச்சர்களை நியமிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களே எதிர்ப்பினை வெளியிடுகின்ற நிலையில், 45 அமைச்சர்களை நியமிப்பதற்கு அரசாங்கம் தயாராகிக் கொண்டிருக்கின்றது.

நவீன் திசாநாயக்க உள்ளிட்டவர்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்கள். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து ஒரு உறுப்பினர் அரசாங்கத்தின் வசம் சேர்ந்ததை அடுத்து அமைச்சுப் பதவிகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளனர். இது என்ன தேசிய அரசாங்கமா? இது நியாயமான விடயமல்ல. எட்டு மாதத்திற்கு இந்த அமைச்சரவை தேவையா என கேட்க விரும்புகின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments