செயலாளர்களும் பதவியிழப்பு ?



அமைச்சரவை  கலைக்கப்பட்டதை அடுத்து, அமைச்சுக்களின் செயலர்களும் பதவி இழந்து விடுவார்கள் என்றும்,  இதனால் தற்போது சிறிலங்காவில் அமைச்சுக்களின் செயலர்கள் எவரும் பணியாற்ற முடியாது எனவும் சட்ட வல்லுனர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் 52 (3)  ஆவது  பிரிவுக்கு அமைய, அரசியலமைப்பின் 48 (2) ஆவது  பிரிவின் கீழ், நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னர்,  அமைச்சரவை பதவி இழக்கும் போது,   அமைச்சுக்களின் செயலர்களும், பதவி இழந்து விடுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள சூழலிலும்,  அதனை அடிப்படையாக வைத்து பிரதமர் மற்றும் அமைச்சரவையின் செயற்பாட்டை மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைநிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ள சூழலிலும்,  அமைச்சுக்களின் செயலர்கள் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்தப் பின்னணியில் தாங்கள் கையெழுத்திடுகின்ற  அமைச்சுக்களின் ஆவணங்கள்  தொடர்பாக  அரசியலமைப்பின் 52 (3)   பிரிவின் கீழ்,  சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ளும் நிலை ஏற்படலாம் என்று,  அமைச்சுக்களின் செயலர்கள்,  அச்சம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன்,   இதற்கு எதிராக,  யாரேனும் பொதுமக்கள்,  காவல் நிலையத்தில் குற்றவியல் சட்டக்கோவையின் 114 / 115  பிரிவின் கீழ்,  முறைப்பாடு செய்ய முடியும் என்றும் சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, மக்களுக்கான சேவைகள் எந்தவித இடையூறுமின்றி முன்னெடுக்கப்பட வேண்டும் என்று,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  அமைச்சுக்களின் செயலர்களுக்கு,  தேவையான உத்தரவுகளை  பிறப்பித்துள்ளார் என்று,  ஜனாதிபதி செயலக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பிரதமர் மற்றும் அமைச்சர்கள் செயற்படுவதற்கு  மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்ததை அடுத்து ஜனாதிபதி இன்று காலை அமைச்சுக்களின் செயலர்களைச் சந்தித்தார்.

இதன்போதே, ஜனாதிபதி தேவையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

No comments