சரத் பொன்சேகாவின் ‘பீல்ட்மார்ஷல்’ பட்டத்தை பறிக்க கோரி்க்கை

இலங்கையில் இறுதிக்கப்பட்டப்போரை வழிநடத்திய இராணுவத்தளபதியான சரத்பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ள ‘பீல்ட்மார்ஷல்’ என்ற உயரிய பட்டத்தை பறிக்குமாறு கடும்போக்குடைய சிங்கள தேசியவாத அமைப்புகள் சில , ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அறியமுடிகின்றது.


ஜனாதிபதியை கொலைசெய்யும் சூழ்ச்சி திட்டத்துடன் தொடர்பு, இராணுவ இரகசியங்களை அம்பலப்படுத்திவருகின்றமை உட்பட மேலும் சில விடயங்களை அடிப்படையாகக்கொண்டே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும், இதுவிடயம் தொடர்பில் ஜனாதிபதியின் நிலைப்பாடு என்னவென்பது தொடர்பில் இன்னும் உத்தியோகப்பூர்வமாக எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது மஹிந்தவை எதிர்த்து, எதிர்க்கட்சிகளால் பொதுவேட்பாளராக சரத்பொன்சேகா களமிறக்கப்பட்டார். அத்தேர்தலில் அவர் தோல்வியடைந்தபின்னர் மஹிந்த தரப்பில் சிறைபிடிக்கப்பட்டார். ஓராண்டுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் – சர்வதேச அழுத்தங்கள் வலுத்ததால் விடுவிக்கப்பட்டார்.

அதன்பின்னர் ஜனநாயகக்கட்சி என்ற புதிய கட்சியை சரத்பொன்சேகா ஆரம்பித்தார். மாகாணசபைத் தேர்தலில் வெற்றிநடைபோட்டாலும் அதன்பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் பிரகாசிக்கவில்லை. இதனால், ஐக்கிய தேசியக்கட்சியுடன் சங்கமித்தார் பொன்சேகா. இதையடுத்து அவருக்கு தேசியப்பட்டியல் ஊடாக எம்.பி. பதவி வழங்கப்பட்டு – அதன் பின்னர் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவியும் வழங்கப்பட்டது.

ஆட்சிமாற்றத்தின் பின்னர் ஜனாதிபதியால் பீல்ட்மார்ஷல் என்ற பட்டமும் வழங்கப்பட்டுள்ளது. இராணுவத்தில் மிகவும் உயரிய தரஉயர்வாகக் கருதப்படும் இப்பதவியை இலங்கையில் வகிக்கும் முதல்நபர் பொன்சேக்கா ஆவார். அரச நிகழ்வுகளில் இராணுவ சீருடையில் பங்கேற்றல் உட்பட பல சிறப்புரிமைகள் இருக்கின்றன.

ஆனால், பொன்சேகாவுக்கும், ஜனாதிபதிக்குமிடையே தற்போது மோதல் வெடித்துள்ளது. இருவரும் பகிரங்கமாகவே விமர்சனக்கணைகளைத் தொடுத்துக்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments