நோர்வேயில் வாழ்நாள் தேசியச் செயற்பாட்டாளர் சாவடைந்தார்!

தமிழ் மக்களின் விடிவிற்காகவும், தமிழ்த் தேசமொன்றின் மீள்வருகைக்காகவும், புலம் பெயர்ந்த
சூழலில் ஈழத்தமிழர் அடையாளத்தைப் பேணிப்பாதுகாப்பதற்காகவும், முப்பத்துநான்கு வருடங்களுக்கு மேலாக வட துருவத்தை அண்மித்த நோர்வேயில் செயலாற்றிவந்த ஓர் உன்னதமான மனிதரான அன்ரன் பிறேமதாஸ் சந்தியா அவர்களை நாம் 12.12.2018 அன்று இழந்துவிட்டோம்.

“ஸ்ரவங்கர் பிறேம்” என்று நோர்வே தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினர் மத்தியில் அன்பாக அழைக்கப்பட்டு வந்த அன்ரன் பிறேமதாஸ், 1982 ஆம் ஆண்டில் நோர்வே நாட்டுக்குத் தனது 21ம் வயதில் புலம் பெயர்ந்திருந்தார்.

நோர்வேயில் இருந்தவாறு தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்துடன் தன்னை முழுமையாக இணைத்து தனது தாயகத்துக்கான பணியை அரப்பணிப்போடு இறுதி மூச்சுவரை செய்து வந்த ஒரு தேசப்பற்றாளன்.

குறிப்பாக 1984ம் ஆண்டு தொடக்கம் எமது கட்டமைப்பில் தன்னை ஆரம்பகால உறுப்பினராக இணைத்துக் கொண்டு செயற்பட ஆரம்பித்தார். 1989 ஆம் ஆண்டுவரை பணி புரிந்த அவரின் செயலூக்கத்தின் விளைவாக 1990 இல் அவர் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிராந்தியப் பொறுப்பாளராகப் பொறுப்பேற்று 2000ம் ஆண்டுவரை ஒருங்கிணைப்பை நேர்த்தியாக மேற்கொண்டார்.

அதன் பின்னர், இளம் தலைமுறையினருக்குத் தமிழ் மொழியையும் பண்பாட்டையும் உரிய முறையில் தரவேண்டும் என்ற ஆர்வத்தோடு கலை பண்பாட்டுக்குழுவின் பொறுப்பாளராகவும் திறம்பட இயங்கலானார்.

அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடத்தின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்கை எமது அடுத்த தலைமுறையினர் என்றும் நன்றியுடன் நினைவு கூர்வர்.

அன்னாரது இளைய தம்பியார் ஒருவர் மாவீரர்.

2009 இன அழிப்புப் போரின் போதும் அதன் பின்னரும் தமிழீழத் தேசியத் தலைவர் காட்டிய வழியின் மீதான பற்றுதியுடன் பிறேம் இயங்கிவந்தார். 

2009 இல் இருந்து 2016ம் ஆண்டு வரை ஸ்ரவங்கர் பிராந்தியத்திற்கான தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளாராக அவர் மீண்டும் தளராது பங்காற்றினார்.

நோய் வாய்ப்புற்ற இறுதிக் காலத்திலும் தனது பணி தளராது தொடரத் தக்க ஒழுங்கை வகுத்து, அதன் தொடர்ச்சியை அக்கறையோடு உறுதி செய்த அவரின் பண்பை நாம் என்றும் நினைவு கொள்வோம்.

தொலைதூரம் கடந்து புலம் பெயர்ந்தாலும் தனது வாழ்நாளிற் பல வருடங்களாகத் தொடர்ச்சியாகத் தாயக விடுதலைக்காகவும் ஈழத்தமிழர்களின் தேசிய நலனுக்காகவும் உழைத்துவந்த அவரின் பிரிவால் துயருறும் அவரின் குடும்பத்தினர்களதும் உறவினர்களதும் நண்பர்களதும் கைகளை இத்தருணத்தில் இறுகப் பற்றிக்கொள்கின்றோம்.

எமது தேசத்தின் விடுதலை மீதும், எமது இனத்தின் சுதந்திரப்பயணத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன்   காட்டிய வழியின் மீதான பற்றுறுதியுடன்  செயற்பட்டுவந்த திரு அன்ரன் பிறேமதாஸ் சந்தியா அவர்களுக்கு நோர்வே தமிழர் ஒருங்கிணைப்புக்குழு “வாழ்நாள் தேசியச் செயற்பாட்டாளர்” எனும் கௌரவத்தை வழங்கி மதிப்பளிக்கின்றது.











No comments